மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்புப் பயணம் : வளங்களை காக்கும் போராட்டத்தின் வரலாறு!
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்புப் பயணம் : வளங்களை காக்கும் போராட்டத்தின் வரலாறு! Twitter
இந்தியா

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்புப் பயணம் : வளங்களை காக்கும் போராட்டத்தின் வரலாறு!

NewsSense Editorial Team

இந்தியாவில் இமயமலை மலை மட்டுமே பெரிய அளவில் பேசப்பட்டு வந்த சூழலில் முனைவர். மாதவ் காட்கில் போன்ற அறிஞர்களால் நமது மேற்கு மலைத்தொடரின் உயிர்ச்சூழல் வளமை வெளிக்கொணரப்பட்டது.  

இம்மலையே நம் தென்னகத்தின் வாழ்வாதாரமான ஆறுகளின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது  என்பது உணரப்பட்டது. 

1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தியச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி  தகுதி வாய்ந்த சில பகுதிகளை சூழலியல் முக்கியம் வாய்ந்தவை ( ecologically sensitive zone ) என்று அறிவிக்கலாம் .  அதன் மூலம் அப்பகுதியின் நில அமைப்பு மாற்றம் கட்டுப்படுத்தப்பட்டு உயிர்ச்சூழல் பாதுகாக்கப்படும். அவ்வாறு மேற்கு தொடர்ச்சி மலையையும்  அறிவிக்க வலியுறுத்தி 1987ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாளில் ஒரு நெடும் பயணம் தொடங்கப்பட்டது. 

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த இயற்கை ஆர்வலர்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் இரண்டு எல்லைகளிலிருந்து புறப்பட்டனர்.

ஒரு குழு கன்னியாகுமரியிலிருந்தும் மற்றொரு குழு மகாராஷ்டிரா மாநிலம் நவாப்பூரிலிருந்தும் பயணம் தொடங்கி  நூறு நாட்களுக்குப் பிறகு கோவாவை வந்தடைந்தனர். இப்பயணத்தில் 160க்கும் மேற்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்களும் நூற்றுக்கணக்கான தனிநபர்களும் பங்கேற்றனர். பயண வழியில் 600க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன. சிறு நிகழ்வாகத் தொடங்கினாலும் வழி நெடுக கிடைத்த மக்களின் ஆதரவின் விளைவாக உள்ளூர் ஊடகங்கள் மட்டுமன்றி பிபிசி உள்ளிட்ட உலக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது. இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தமது ஆதரவை வெளிப்படுத்தியது.

 நிறைவாக 1988-பிப்ரவரி-01ல் கோவாவில் "மேற்கு மலைப் பாதுகாப்பு மாநாடு" நடத்தப்பட்டது. அந்த அமைப்புகளின் ஒருங்கிணைப்பால் உருவானதே மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம்.

அந்தப் பயணமும், மாநாடும் இந்திய சூழலியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளாகும். பல்வேறு இளைஞர்களை இம்மலைப் பாதுகாப்பை நோக்கி ஈர்த்தது. இம்மலையின் உயிர்ச்சூழல் வளமையை அறிய பல்வேறு ஆய்வுகள் தொடங்கப்பட்டன. பல அமைப்புகள் மேற்கு மலையின் உயிர்ச்சூழலைப் பாதுகாக்கக் குரல் கொடுக்கத் தொடங்கின.

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கத்தின் தொடர் முயற்சியால் கடந்த 2010 ஆம் ஆண்டு முனைவர். மாதவ் காட்கில் தலைமையில் "மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு" ( Western Ghats Ecology Expert Panel ) இந்திய அரசால் அமைக்கப்பட்டது. மிகுந்த அக்கறையோடும் ஆழமான அறிவியல் தரவுகளோடும் மேற்கு மலை பாதுகாப்பிற்கான செயல்திட்டங்களை வரையறுத்த அக் குழுவின் அறிக்கை  2011ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய , மாநில அரசுகளால் குழுவின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டது துயர நிகழ்வாகும். அக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசுகளை வலியுறுத்துமாறு மேற்கு மலை பாதுகாப்பு இயக்கத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தின் தலையீட்டால் ஒன்றிய  அரசு வேறு புதிய குழுவாக திரு. கஸ்தூரிரங்கன் தலைமையில் ''மேற்கு தொடர்ச்சி மலை உயர்மட்ட குழுவை " ( High Level Working Group) நியமித்தது. அக்குழு கடந்த 2013ஆம் ஆண்டு தமது அறிக்கையை  அரசிடம் ஒப்படைத்தது.

கஸ்தூரிரங்கன்  குழுவின் பரிந்துரைகள் மாதவ் காட்கில் குழுவின்  பரிந்துரைகள் போல் முழுமையானது அல்ல. மாதவ் காட்கில் குழு  மலை முழுவதையும் (சுமார் 1,60,000 ச.கி.மீ) பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகக் கருதி அதற்கான செயல் திட்டத்தைப் பரிந்துரைத்திருந்தது. கஸ்தூரி ரங்கன் குழு மலைத்தொடரின் 37 விழுக்காடு  (சுமார் 56,000 ச.கி.மீ) மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என வரையறுத்திருந்தது. 

 எனினும் முதல் படியாகக்  கஸ்தூரி ரங்கன் குழு  பரிந்துரைகளாவது  நிறைவேற்றப்பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் விரும்பினர். ஆனால் அக் குழுவின் பரிந்துரைகளையும் அரசுகள் நிராகரித்தன. எனவே மேற்கு மலை பாதுகாப்பு இயக்கம் மீண்டும் நீதிமன்றத்தையும் பசுமை தீர்ப்பாயத்தையும் நாடியது. அதன் விளைவாக ஒன்றிய அரசு அப்பரிந்துரைகளைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு மாநிலங்களின் ஒப்புதலுக்கு அனுப்பியது.   பல வரைவு  அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு நிராகரிக்கப்பட்டன. இறுதியாக 46,832 ச.கி.மீ பரப்பளவு பகுதி பாதுகாக்கப்பட வேண்டியவை என ஒன்றிய அரசு அறிவிக்கை  வெளியிட்டது. அதுவும் நடைமுறைக்கு வராத நிலையில்தான் உள்ளது. 

மலையைச் சூறையாடி வணிகம் செய்யும் சுரங்க , சுற்றுலா , நில விற்பனை சக்திகள் வல்லமையானவையாக உள்ளன. பழங்குடிகள் உள்ளிட்ட உள்ளூர் மக்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனும் பொய்யான காரணங்களைக் கூறி மலைப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளைத் தடுக்கின்றனர். 

கடந்த 35 ஆண்டுகளாக எழுப்பப்படும் மேற்கு மலை பாதுகாப்பு கோரிக்கைகள் இனியும் காலம் தாழ்த்தாமல் கவனிக்கப்பட வேண்டும்.  

மலை முழுவதும் காடுகளாக இருந்த நிலையை வெள்ளைக்காரர்கள் மாற்றினர்.  தேயிலை,  காப்பி தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இப்போது அவை அனைத்தும் மெல்ல மெல்லக் கட்டிடங்களாக மாறி வருகின்றன. இவை பேராபத்தாகும் .

காலங்காலமாக வாழ்ந்த உள்ளூர் மக்கள் முதன்முறையாக நிலம் அற்றவர்களாக மாறுகின்றனர். பிறக்கிற இடத்திலேயே நம் ஆறுகள் மடிந்து போகும் அவல நிலை ஏற்படும். மனித காட்டுயிர் மோதல் உச்சம் தொடும். இறுதியில் வாழ்விடம் இழந்து காட்டுயிர்கள்  அழிந்து போகும். 

மேற்குத் தொடர்ச்சி மலை நமது தண்ணீர் மலை. அரிதிலும் அரிதான உயிர்ச் சூழல் வளமை கொண்ட பகுதி. இப்போதுள்ள நிலையிலாவது இந்த மலையைக் காப்பாற்ற வேண்டும்.  இந்த நாளிலாவது அதற்கான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். தமிழகப் பகுதியையாவது காப்பாற்றப்பட மாநில அளவிலான ஒரு சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?