ஓப்பன்ஹெய்மர் செய்ய மறுத்த ஹைட்ரஜன் குண்டு: அவ்வளவு பயங்கரமா அது? Twitter
Long Read

ஓப்பன்ஹெய்மர் செய்ய மறுத்த ஹைட்ரஜன் குண்டு: அவ்வளவு பயங்கரமா அது? - அச்சமூட்டும் தகவல்கள்

அ.தா.பாலசுப்ரமணியன்

உலகில் முதல் முதலாக அணுகுண்டு உருவாக்கியவரான அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மர், ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்ட உடனே மனதை மாற்றிக்கொண்டார். அணுகுண்டுகளைத் தடை செய்யும்படி அமெரிக்க அதிபர் ட்ரூமேனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன், அணுகுண்டுகளைவிட பல நூறுமடங்கு ஆற்றல் மிக்கதான ஹைட்ரஜன் குண்டுகளை உருவாக்கும் திட்டத்துக்கும் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தார். இது அமெரிக்க அரசுக்கு ஆத்திரமூட்டியது.

முக்கியப் பதவிகளில் இருந்து அவரைத் தூக்கி வீசிய அமெரிக்க அரசு, கம்யூனிஸ்டுகளோடு அவருக்கு இருந்த கடந்த காலத் தொடர்புகளுக்காக, அவர் மீது புலன் விசாரணையை முடுக்கிவிட்டது.

அணுகுண்டு தயாரித்துத் தந்த ஓப்பன்ஹெய்மர், ஏன் ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க எதிர்ப்புத் தெரிவித்தார்? அதற்காக ஏன் அமெரிக்க அரசாங்கத்தையும் பகைத்துக் கொண்டு பல சோதனைகளை சந்தித்தார்? அவ்வளவு பயங்கரமானதா ஹைட்ரஜன் குண்டு? அணு குண்டுக்கும் ஹைட்ரஜன் குண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? சரி விரிவாகப் பார்ப்போம்.

ஹைட்ரஜன் குண்டு என்பது, மனித குலத்தை மட்டுமல்ல, புவியில் உள்ள மொத்த உயிரினங்களையும் அழித்துவிடக்கூடிய ஆபத்து நிறைந்தது.

அணு குண்டு என்று நாம் அழைப்பது, உண்மையில் அணுக்கரு குண்டுதான். அணுக்கருவை பிளக்கும்போது ஏற்படுகிற வெப்பம்தான் அணு குண்டு வெளியிடும் ஆற்றல்.

அணுவின் உட்கட்டமைப்பு புரியாதவர்களுக்காக ஒரு சிறு விளக்கம்:
அணுவை ஒரு கால்பந்து மைதானம் போல கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது மைதானத்தை திறந்து உள்ளே பார்க்கிறீர்கள். மைதானத்தில் யாரும் இல்லை. மைதானத்தின் நடுவில் ஒரே ஒரு நாவல் பழம் வைக்கப்பட்டிருக்கிறது. மைதானம் அணு என்றால், நாவல் பழம்தான் அணுக்கரு. அணுவின் அளவையும், அதற்குள் இருக்கும் அணுக்கருவின் அளவையும், அது போக மீதமிருக்கும் வெற்றிடத்தையும் புரிந்துகொள்வதற்காகத்தான் இந்த எடுத்துக்காட்டு.

ஒரு அணுவின் விட்டம், நமது தலைமுடியின் விட்டத்தைவிட தோராயமாக 10 லட்சம் மடங்கு சிறியது. ஆனால், அணுக்கருவின் விட்டம் அணுவின் விட்டத்தைவிட 1 லட்சம் மடங்கு சிறியது.

ஆனால், அந்த அணுக்கருவில்தான், அணுவின் நிறையில் பெரும்பகுதி இருக்கிறது; அங்கேதான், புரோட்டான்களும், நியூட்ரான்களும் ஒன்றை ஒன்று கட்டிப்பிடித்துக்கொண்டு உள்ளன. இந்த இரண்டு துகள்களில் நியூட்ரானுக்கு மின்சுமை ஏதுமில்லை. புரோட்டான்கள் நேர் மின்சுமை உடையவை. எனவே, மொத்தத்தில் அணுக்கரு நேர் மின்சுமையுடையது.

மிக நுண்ணிய அணுவுக்குள் உள்ள மிக நுண்ணிய கொட்டையைப் போன்ற அணுக்கருவைப் பிளந்தால், ஆற்றல் வெளியாகும். பிறகு சங்கிலித் தொடர்போல பல அணுக்கருக்கள் பிளக்கவும், ஏராளமான ஆற்றல் வெளிப்படவும் அது காரணமாகும்.

மாறாக, இரண்டு அணுக்களின், உட்கருக்களை ஒன்றாகப் பிணைத்தால் என்ன நடக்கும்? அணுக்கருவை பிளப்பதைவிட மிக மிக அதிக அளவில் ஆற்றல் வெளியாகும். ஆனால், அப்படி நாமாக இணைப்பது லேசான காரியம் இல்லை. இயற்கையில் இப்படி நடப்பதுண்டு. எடுத்துக்காட்டாக, சூரியனில் இடைவிடாமல் அணுக்கருப் பிணைப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் இவ்வளவு ஆற்றல் வெளியாகிறது.

அணுக்கருவை ஏன், அவ்வளவு லேசாகப் பிணைக்க முடியாது? ஏன் அவ்வளவு ஆற்றல் வெளியாகிறது? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே ஒரு சுவாரசியமான விடை:

அணுக்கருவுக்கு நேர்மின் விசை உண்டு என்று மேலே பார்த்தோமா இல்லையா? அப்படி நேர் மின் விசை உடைய இரண்டு அணுக்கருக்களை அருகருகே கொண்டு செல்லவே முடியாது. இரண்டும் ஒன்றை ஒன்று வலுவாக தள்ளிவிடக்கூடியவை. இரண்டு காந்த துண்டுகளின் வட துருவத்தையும் அருகருகே கொண்டு சென்றால் என்ன நடக்கும்? ஒன்றை ஒன்று தள்ளிவிடும். அண்ட விடாது. எந்த சண்டையைவிடவும் பங்காளி சண்டை வலுவானது இல்லையா?

அப்படி இருக்கும்போது எப்படி இரண்டு அணுக்கருவை அருகருகே கொண்டு சென்று பிணைப்பது. சாதாரணமாக இது முடியவே முடியாது. ஆனால், மிக மிக அபரிமிதமான வெப்பத்தில், இந்தப் பகைமை கொஞ்சம் வலுவிழக்கும். இந்த விலக்கு விசை நெகிழ்ந்து ஒன்று இன்னொன்றுக்கு நெருங்க இடம் கொடுக்கும். அப்படி நெருங்கி வந்து இரண்டும் ஒட்டிக்கொள்ளும்போது இரண்டு அணுக்கருவின் மேற்பரப்பிலும் உராய்வு ஏற்பட்டு கொஞ்சம் நிறை வெளியேறும்.

பஞ்சர் ஒட்டும்போது டியூபையும், பஞ்சர் மீது ஒட்டும் டியூப் துண்டையும் என்ன செய்வார்கள்? கொஞ்சம் உரசிவிட்டுதானே ஒட்டவைப்பார்கள்? அப்போது கொஞ்சம் தூள் உதிரும்தானே? ஒரு சிமெண்ட் மூட்டை மீது இன்னொரு மூட்டையைப் போட்டால் என்ன நடக்கும்? கொஞ்சம் சிமெண்ட் துகள் பறக்கும்தானே? அப்படித்தான் இரண்டு அணுக்கருக்கள் அபரிமிதமான வெப்பச் சூழலில் ஒன்றிணையும்போது, அணுக்கருவில் இருந்து கொஞ்சம் துகள் பறக்கும். அதாவது நிறை வேளியேறும்.
ஆனால், இந்த நிறை, சிமெண்ட் துகள் போலவோ, டியூப் துகள் போலவோ பொருளாக, நிறையாக உதிராது. ஆற்றலாக உதிரும். நிறை ஆற்றலாக மாறக்கூடியது அல்லவா? இந்த ஆற்றல் மேலும் வெப்பத்தை அதிகரித்து, அடுத்தடுத்த அணுக்கருக்களின் பிணைப்புக்குக் காரணமாகும். ஆற்றல் அபரிமிதமாக வெளியாகும்.

என்னதான், வெப்பத்தால், இரண்டு அணுக்கருக்கள் தங்கள் இயல்பான பகைமை இளகி ஒன்றை ஒன்று அணுக வழி பிறக்கும் என்றாலும், இயல்பிலேயே நிறைகுறைவான அணுக்கருக்கள் இடையேதான் இது நடப்பதற்கான சாத்தியம் அதிகம். ஹைட்ரஜன் தனிமம் இப்படி நிறைகுறைவான அணுக்கருவை உடையது. எனவே, ஹைட்ரஜன் அணுக்கருக்களை பிணைப்பதற்கு நடைமுறை சாத்தியம் அதிகம். ஹைட்ரஜன் ஐசோடோப்புகளான (ஓரிட மூலகம்) டியூட்டீரியம், ட்ரைட்டியம் ஆகியவற்றைக் கொண்டே குண்டு தயாரிக்க முடியும்.

ஹைட்ரஜன் குண்டுகள் ஏன், எப்படி, அபரிமிதமான ஆற்றலை வெளியிடுகின்றன என்று பார்த்தோம். அவை வெளியிடும் ஆற்றலின் அளவு எவ்வளவு என்பதைப் பார்ப்பது உங்களை பீதியில் ஆழ்த்தும், பித்தம் கொள்ளவைக்கும். இது மிகையில்லை.

ஹைட்ரஜன் குண்டு எவ்வளவு மோசமானது?

அணு குண்டு உருவாகும் முன்பு இருந்த ஆற்றல்மிக்க வெடிப் பொருள்களில் ஒன்று டி.என்.டி.

எனவே அணு குண்டின் ஆற்றலை, எத்தனை கிலோ டன் டி.என்.டி.யை வெடிப்பதற்கு ஒப்பானது என்ற விகிதத்தில் சொல்வது வழக்கம். (ஒரு டன் = 1,000 கிலோ கிராம்; 1 கிலோ டன் = 1,000 டன்.) எடுத்துக்காட்டு: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டின் திறன் 15 கிலோடன் டி.என்.டி.
ஆனால், ஹைட்ரஜன் குண்டு ஒன்றின் திறனை மெகா டன் டி.என்.டி. என்ற விகிதத்தில்தான் சொல்வார்கள். 1 மெகா டன் என்பது 10 லட்சம் டன். 1 மெகாடன் டி.என்.டி. திறன் கொண்ட ஹைட்ரஜன் குண்டு வெடித்தால், 10 லட்சம் டன் டி.என்.டி. வெடிப்பதற்கு நிகரான சேதம் இருக்கும்.

உண்மையில், ஒரு போரில் ஹைட்ரஜன் குண்டு பயன்படுத்தினால், அதன் சேதம் எல்லையற்றதாக இருக்கும். அதனால்தான் ஓப்பன்ஹெய்மர் ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பதற்கான ஆராய்ச்சி கூடாது என்று மன்றாடினார். ஆனால், அந்த ஆராய்ச்சி நிற்கவில்லை.
சோவியத் ஒன்றியம் – அமெரிக்கா இடையிலான ஆயுதப் போட்டி தீவிரமடைந்தது.

1950ல் அமெரிக்க அதிபர் ஹேரி எஸ்.ட்ரூமேன் ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பதற்கான ஆராய்ச்சி தொடரும் என்று அறிவித்தார்.

ஓப்பன்ஹெய்மரை துரோகி என முத்திரை குத்திவிட்டு, எட்வர்ட் டெல்லர் என்பவர் தலைமையில் இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்தனர்.

முதல் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடந்தபோது...

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மார்ஷல் தீவுகளில் (இப்போது இது தனி நாடு) உள்ள எனிவிடாக் அடோல் என்ற தீவுத் தொகுப்பில் உள்ள எல்யூஜ்லேப் என்ற சின்னத் தீவில் 1952ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி உலகின் முதல் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது அமெரிக்கா. இதன் எரிபொருளான திரவ டியூட்டீரியத்தை -417 டிகிரி ஃபாரன்ஹீட் அதி உறை நிலையில் ஆறு அடுக்கு கொண்ட வண்டியில் கொண்டு சென்றார்கள். இந்த சோதனைக்கு ‘மைக்’(MIKE) என்று பெயர் வைத்தார்கள்.

இதில் வெடித்தது பரிசோதனைக் கருவியே தவிர, இதை ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்க முடியாது. வெடிப்பின் தீவிரத்தை அளப்பதற்காக, இந்தக் கருவியையும் அருகாமைத் தீவையும் இணைக்கும் 2 மைல் நீள சுரங்கத்தை ஹீலியம் வாயு கொண்டு நிரப்பினார்கள்.

இந்த சோதனையை மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு, வெடிப்பு மோசமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால், அவர்களே அதிர்ச்சி அடையும் அளவுக்கு வெடிப்பின் தாக்கம் இருந்தது.

அணுகுண்டு சோதனைகளை பார்த்தவர்கள்கூட இந்த ஹைட்ரஜன் குண்டு வெடிப்பின் அதிர்வைக் கண்டு மிரண்டார்கள்.


இறுதியாக இந்த ஹைட்ரஜன் குண்டு வெடித்தபோது, எழுந்த களான் வடிவப் புகை மண்டலம் அதிகபட்சமாக 160 கி.மீ. அகலமும் 40 கி.மீ. உயரமும் அடைந்தது. எல்யூஜ்லேப் (Elugelab) தீவு மொத்தமே காணாமல் போனது. சுமார் ஒன்றரை கி.மீ. அகலத்துக்கு மாபெரும் பள்ளம் தோன்றியிருந்தது.

இந்த வெடிப்பின் திறன் எவ்வளவு தெரியுமா? 10.4 மெகா டன் டி.என்.டி. அதாவது ஏறத்தாழ 1 கோடி டன் டி.என்.டி. வெடித்தது போல. இது நடந்த எனிவிடாக் அடோல் தீவுத் தொகுப்பு என்பது 40 பவளப் பாறை தீவுகளைக் கொண்ட தொகுப்பு. இந்த தொகுப்பில் 1958 வரை 43 சோதனைகள் நடத்தப்பட்டன. 1977ல் இந்த எனிவிடாக் அடோலை சுத்தப்படுத்த முப்படைகளை சேர்ந்த 6 ஆயிரம் பேரை அனுப்பியது அமெரிக்க அரசு. இவர்களில் ஏராளமானோர் புற்றுநோயால் இறந்தனர். இதில் புள்ளிவிவர சர்ச்சைகள் இருந்தாலும், பாதிக்கப்பட்டோர் அமைப்பாகத் திரண்டு நீதி கேட்டுவந்தனர்.

Elugelab Blast

480 கி.மீ. தூரம் பாதிப்பை ஏற்படுத்திய பிராவோ சோதனை
1954 மார்ச் 1ம் தேதி பிகினி அடோல் என்ற தீவுத் தொகுப்பில் பிராவோ என்று பெயரிடப்பட்ட சோதனையை செய்தது அமெரிக்கா. இதில் ஒரு வேறுபாடு. வெடிகுண்டாக பயன்படுத்தக்கூடிய வடிவில் இதைத் தயாரித்தார்கள். முக்கியமான அணுக்கரு இணைப்பு அம்சம் ஒன்றை நீக்கியதால், இதன் தாக்கம், 5 மெகாடன் அளவுதான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் குறைத்து மதிப்பிட்டார்கள். ஆனால், இதன் தாக்கம் 14.8 மெகாடன் டிஎன்டி அளவுக்கு இருந்தது.

இந்த சோதனை நடந்தபோது பிகினி தீவுத் தொகுப்பில் மனிதர்கள் யாரும் இல்லை. ஆனால், சுமார் 160 கி.மீ. தொலைவில் உள்ள ரோஞ்சிலேப் தீவிலும், 480 கி.மீ. தொலைவில் உள்ள யூடிரிக் தீவிலும் 236 பேர் இருந்தனர். இவர்கள் இந்த குண்டு வெடிப்பு சோதனையால் ஏற்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர். ரோஞ்சிலேப் தீவில் 200 ரெம் கதிரியக்கம் பதிவானது. (ஓராண்டு காலத்தில் மனிதர்களுக்கு 5 ரெம் அளவுக்கு கதிர்வீச்சு ஏற்படுவதுதான் ஏற்கத்தக்க அளவு.) சோதனை நடந்து 24 மணி நேரத்துக்குப் பிறகே இந்த தீவில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். யூடிரிக் தீவில் இருந்தவர்கள் இரண்டு நாள் கழித்து வெளியேற்றப்பட்டனர். இவர்களுக்கு வாயிலும் கண்களிலும் எரிச்சல், உமட்டல், பேதி, முடி உதிர்வது, உடலில் தீக்காயங்கள் ஆகியவை ஏற்பட்டன. அப்போது இந்த தீவுகளில் இருந்த பலருக்கும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தைராய்டு புற்றுநோய் ஏற்பட்டது.

சோதனை நடந்தபோது ரோஞ்சிலேப்பில் இருந்த 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களில் 90 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வந்தது. அமெரிக்கா நடத்திய மிக மோசமான ஹைட்ரஜன் குண்டு சோதனை இது.
“6500 கீ.மீ. தூரம் அதிர்ந்திருக்கும்” – குண்டுகளின் அரசன் ‘ஜார் பாம்பா’
அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு என்று அமெரிக்கா அதிவேகமாக சென்றுகொண்டிருந்த நிலையில், சோவியத் யூனியன் இந்த ஆயுதப் பந்தயத்தில் மெதுவாகவே ஓடிக் கொண்டிருந்தது.

1955ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி சோவியத் யூனியன் நடத்திய முதல் ஹைட்ரஜன் குண்டு சோதனையின் தாக்கம் 1.6 மெகாடன் அளவுக்கு இருந்தது. (1954 அமெரிக்க பிராவோ சோதனை 14.8 மெகா டன்). தொடர்ந்து அமெரிக்கா தாம் முன்னிலையில் இருப்பதை பிரகடனம் செய்துவந்த நிலையில், யாரும் கற்பனை செய்ய முடியாத ஒன்றை செய்துகாட்ட சோவியத் யூனியன் முடிவு செய்தது. 1960ம் ஆண்டு ஐ.நா. பொது மன்றத்தில் பேசிய சோவியத் அதிபர் குருஷேவ் அமெரிக்காவுக்கு ‘குஸ்மாவின் அம்மா’வை காட்டுவதாக பூடகமாக சவால் விடுத்தார்.

பேரழிவு

குஸ்மாவின் அம்மாவை காட்டுவதாக சொல்வது ஒரு ரஷ்யப் பழமொழி. இதன் பொருள் ‘ஒரு பெரிய சம்பவம் செய்து காட்டுகிறேன்’ என்பதுதான்.

இதன்படி 1961 அக்டோபர் 30ம் தேதி உண்மையாகவே குஸ்மாவின் அம்மாவை காட்டிவிட்டார் குருஷேவ்.
வன்யா என்று பெயரிடப்பட்டது இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை.

ஆர்க்டிக் வட்டத்தில், நோவாயா செம்லியா தீவுக்கூட்டத்துக்கு மேல் 34 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் போடப்பட்ட இந்த சோதனை குண்டு, 13 ஆயிரம் அடி உயரத்தில் வெடித்தது.

உண்மையில் இது அணுகுண்டு யுகத்தையே அதிரவைத்த குண்டு.
இந்த குண்டு வெளிப்படுத்திய அதிர்வு 58 மெகாடன் டி.என்.டி. என்று மதிப்பிடப்பட்டது (50 மெகா டன் என்று இது பின்னாளில் குறைத்து மதிப்பிடப்பட்டது).

இந்த குண்டு முதலில் 100 மெகாடன் விளைவை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பிறகு, ஆபத்து கருதி, யுரேனியம் டேம்பர் எனப்படும் வினையைத் தவிர்த்து சக்தியை குறைத்து சோதனை செய்தனர்.



ஆனால், இதுவே மிகக் கடுமையான விளைவை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பில் இருந்து 55 கி.மீ. தொலைவில் இருந்த செவர்னி என்ற இடத்தில் இருந்த அத்தனை செங்கல் கட்டடங்களும் மொத்தமாக அழிந்தன. 900 கி.மீ. தொலைவில் இருந்த கட்டடங்களில் ஜன்னல்கள் உடைந்தன. பூமியில் இருந்து 13,000 அடி உயரத்தில் குண்டு வெடித்தாலும், புவியில் நிலநடுக்க அளவுகோல்கள் 5 அளவுக்கான நிலநடுக்கம் ஏற்பட்டதைப் போல காட்டின. இத்தனைக்கும் இந்த குண்டின் மோசமான அதிர்வலைகள் வானை நோக்கி எதிரொலித்து திருப்பப்பட்டன.

இதன் காளான் புகை சுமார் 65 கி.மீ. உயரம் இருந்தது. இது எவரெஸ்ட் சிகரத்தைப் போல சுமார் 7 மடங்கு உயரம்.
ஹிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட இரண்டு குண்டுகளை ஒன்றாக சேர்த்துப் பார்த்தாலும், அவற்றைவிட 1,570 மடங்கு சக்தி வாய்ந்தது இந்த குண்டு.

இதைவிட சக்திவாய்ந்த சோதனையை செய்து காட்டியிருக்க முடியும். அப்படி செய்திருந்தால், 6,500 கி.மீ. தொலைவில் தலைநகர் மாஸ்கோவில் வீடுகளின் ஜன்னல்கள் உடைந்திருக்கும் என்று கூறினார் சோவியத் அதிபர் குருஷேவ்.

இந்த குண்டு ‘ஜார் பாம்பா’ என்ற பெயர் வைத்தே அழைக்கப்படுகிறது. இதன் பொருள்: குண்டுகளின் அரசன்.
ஆனால், இந்தக் குண்டுக்கான வடிவமைப்பை உருவாக்கியபோது ஆரம்பகட்டத்தில், கட்டத்தில் விஞ்ஞானிகள் 1 கிகாடன் டி.என்.டி. அளவுக்கு இதன் ஆற்றலை விரிவுபடுத்த முடியும் என்று கூறியிருந்தனர். ஆதாவது, 100 கோடி டன் டி.என்.டி.யை வெடிப்பதற்கு இணையான ஆற்றல். நடுங்கவில்லையா இதைக் கேட்டு?

ஹைட்ரஜன் குண்டு ஏற்படுத்தவல்ல சேதத்துக்கு எல்லையே இல்லை என்று ஓப்பன்ஹெய்மர் அஞ்சியதன் பொருளை உலகம் உணர்ந்துகொள்ள காலம் பிடித்தது.
அணுகுண்டு சோதனைகளை நிறுத்தவேண்டும் என்று குரல் கொடுத்த முதல் உலகத் தலைவர் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு. 1954ம் ஆண்டே அவர் ‘ஸ்டேண்ட் ஸ்டில்’ ஒப்பந்தம் வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது அதைக் கேட்பாரில்லை. ஜார் பாம்பாதான், ஹைட்ரஜன் குண்டுகளின் எல்லையற்ற வலிமையை உணரவைத்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?