விஞ்ஞானிகள் என்னதான் அறிவியலை நம்பி ஆராய்ச்சி செய்து வந்தாலும், அதிர்ஷ்டமும் கை கொடுத்தால் தான் எதையும் கண்டுபிடிக்க முடியும். இதற்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை ஓர் உதாரணமாகக் கூறலாம்.
விஞ்ஞானிகள் அல்லது துறைசார் வல்லுநர்கள் ஒரு விஷயத்தைச் செய்ய முனையும் போது வேறு விஷயம் கண்டுபிடிக்கப்பட்டு அது ஒட்டுமொத்த உலகையே புரட்டிப் போட்ட சில கண்டுபிடிப்புகளையும், அது குறித்த சுவாரசியத் தகவல்களை இங்கே கொடுத்திருக்கிறோம்.
1853ஆம் ஆண்டு, நியூயார்க் நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில், ஒரு வாடிக்கையாளர் வறுத்த உருளைக் கிழங்கை ஆர்டர் செய்துள்ளார். வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட வறுத்த உருளைக் கிழங்கு மொறுமொறுப்பாக இல்லை. அதோடு அதன் தடிமனும் அதிகமாக இருப்பதாகத் தொடர்ந்து பல முறை திருப்பி அனுப்பினார் அந்த வாடிக்கையாளர்.
அந்த உணவகத்தில் வேலை பார்த்து வந்த ஜார்ஜ் க்ரம் (George Crum) கடுப்பாகி, உருளைக் கிழங்கை மிக மெலிதாக நறுக்கி, மொறுமொறுப்பாக எண்ணெயில் வறுத்து, மழைச் சாரல் போல உப்பு போட்டு கொடுத்தார். வாடிக்கையாளர் ஹேப்பி. இப்படித் தான் இன்றைய உலகின் மிகப் பிரபலமான உருளைக் கிழங்கு சிப்ஸ் உருவானது.
1945ஆம் ஆண்டு பெர்சி ஸ்பென்சர் என்பவர் மைக்ரோவேவ் அலைகள் வெளியாகும் மெக்னட்ரான் சாதனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அவருக்கு அப்போது ஏதோ ஒரு வித மெல்லிய புழுக்க உணர்வு, பாக்கெட்டில் வைத்திருந்த சாக்லெட் உருகத் தொடங்கியது. இந்த அறிவைப் பயன்படுத்தி மைக்ரோவேவை காப்புரிமை செய்து கொண்டார் பெர்சி ஸ்பென்சர்.
ஸ்பென்சர் சில்வர் என்கிற விஞ்ஞானி ஒரு வலுவான பசையைக் கண்டுபிடிக்க 3எம் லெபாரட்டரீஸில் வேலை பார்த்து வந்தார். அவர் உருவாக்கிய பசை வலுவாக இருப்பதற்குப் பதிலாகப் பலவீனமாக இருந்தது.
அந்த பசை எளிதில் ஒட்டியது, ஆனால் எளிதில் திரும்ப எடுக்கவும் முடிந்தது. குறிப்பாக அந்த பசை ஒட்டிய இடத்தில் எந்த வித தடமும் இல்லை.
செய்த வேலை எல்லாம் வீணாகிவிட்டதே என ஸ்பென்சர் கண்டுகொள்ளாமல் அப்பசையை விட்டுவிட்டார். ஆனால் ஆர்ட் ஃப்ரை என்பவர் அப்பசையைப் பயன்படுத்தி ஸ்டிக்கி நோட்ஸாகப் பயன்படுத்தினார். இப்படித் தான் போஸ்ட் இட் நோட்ஸ் பரிணமித்தது.
கெலாக்ஸ் சகோதரர்களான ஜான் மற்றும் வில், வேக வைத்து எடுத்த சோளத்தை சில நாட்களுக்கு அடுப்பிலேயே வைத்த போது எதேர்ச்சையாக உருவானது தான் இன்று லட்சக் கணக்கான உலக மக்களின் காலை உணவாக இருக்கும் கார்ன் ஃப்ளேக்ஸ்.
Staphylococcus aureus என்கிற பாக்டீரியா கொண்ட சோதனைத் தட்டை சுமார் இரு வாரக் காலத்துக்கு அப்படியே விட்டுச் சென்ற போது, அதன் வளர்ச்சியை Penicillium notatum என்கிற மருந்து தடுத்திருந்ததைப் பார்த்துவிட்டுத் தான் பெனிசிலின் மருந்தைக் கண்டுபிடித்தார் ஸ்காட்டிஷ் விஞ்ஞானியான சர் அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங்.
ராய் ஜே ப்ளங்கெட் என்கிற வேதியியலாளர் Polytetrafluoroethylene-ஐக் கண்டுபிடித்தார். அது தான் பிற்காலத்தில் நான் ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்பட்டு, பிரபலமானது.
இந்த ரசாயனம் தொடக்கத்தில் ராணுவம், தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது நினைவுகூரத்தக்கது.
ஆல்பர்ட் ஹாஃப்மென் லைசெர்ஜிக் ஆசிடை ஆராய்ந்து 1938ஆம் ஆண்டு எல் எஸ் டி மருந்தை உருவாக்கினார். சுவாசத்தை அதிகரிப்பது மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மருந்தைக் கண்டுபிடிப்பது தான் இந்த ஆய்வின் நோக்கம். ஆனால் திடீரென எல் எஸ் டி ஆய்வு கிடப்பில் போடப்பட்டது.
மீண்டும் 1943ஆம் ஆண்டு எல் எஸ் டி மருந்து உருவாக்கப்பட்ட போது தவறுதலாக, அது ஆல்பர்ட்டின் உடலில் கலந்தது. அது ஏற்படுத்திய விளைவுகளை வைத்துத்தான் பிறகு எல் எஸ் டி உலகப் புகழ்பெற்றது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் நெருப்பைக் குறித்தும், அதன் பயன்பாடுகளைக் குறித்தும் அறிந்து கொண்டது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் தீப்பெட்டிக்கான அடித்தளம் போடப்பட்டது.
ஜான் வாக்கர் என்கிற பிரிட்டனைச் சேர்ந்த வேதியியலாளர் எளிதில் தீ பிடிக்கும் சில ரசாயனங்களில் நனைத்த மரக் குச்சியை, குளிர்காயத் தொடர்ந்து எரியூட்டப்படும் இடத்தில் தேய்த்த போது ஏற்பட்ட உராய்வில் அக்குச்சி பற்றி எரிந்தது. அப்போது தான் உராய்வின் மூலம் தீயைப் பற்ற வைக்கலாம் என்கிற யோசனையை வைத்து தீப்பெட்டிகளுக்கு விதை போட்டார் ஜான் வாக்கர்.
இயற்பியல் பேராசிரியரான வில்ஹெம் கான்ரட் ரான்ட்ஜென் (Wilhelm Conrad Rontgen) கேதோட் கதிர் குழாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அக்குழாயை ஒரு காகிதத்தை வைத்து சுற்றினார். அப்போது ஃப்ளோரோசென்ட் நிறத்தில் வெளிச்சம் வந்ததைக் கவனித்தார் ராண்ட்ஜென்.
அப்போதுதான், அக்குழாயில் இருந்து வேறு ஏதோ கதிர் வெளிப்படுவதாக முடிவு செய்தார். அந்த கதிர் தான் எக்ஸ் ரே எனப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக 1901ஆம் ஆண்டு கான்ரட் ரான்ட்ஜெனுக்கு நோபல் பரிசு கிடைத்தது.
அட்லாண்டாவைச் சேர்ந்த மருந்தாளர் ஜான் பெம்பர்டன் பிரான்ஸ் நாட்டின் ஒயின் கோகா பானத்தை விற்று வந்தார். அது தலைவலி மற்றும் நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று கூறப்பட்டது. 1885ஆம் ஆண்டு ஜான் பெம்பர்டனின் வியாபாரம் தரை தட்டியது.
அப்போது கோகாவை அடிப்படையாக வைத்து ஒரு சிரப்பைத் தயாரித்தார். அதைச் சோடாவோடு கலந்து 'கோக கோலா' என்கிற பெயரில் விற்கத் தொடங்கினார். அதன் பிறகு நடந்தது எல்லாம் ஹாலிவுட் படத்துக்கான திரைக்கதை.
நீங்கள் 100 பலூன்களை மதுரையிலிருந்து சென்னைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் என்ன செய்வீர்கள்? 100 காற்றடிக்கப்படாத பலூன்களை பத்திரமாகப் பையில் வைத்து சென்னைக்கு எடுத்துச் செல்வீர்கள் தானே. அதே போல ஒயின்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் போக்குவரத்து செய்ய, ஒயினைக் காய்ச்சி ஒட்டுமொத்த அளவைக் குறைத்தார் டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி.
அவர் நினைத்த இடத்துக்கு காய்ச்சிய ஒயினைக் கொண்டு சென்ற பின், அதில் நீரை ஊற்றாமல் குடித்துப்பார்த்த போது அதன் சுவை பிரமாதமாக இருக்க, Burnt wine - Brandy ஆனது.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குவது அல்லது அதிகரிக்கச் செய்வதற்கு ஃபைசர் நிறுவனம் சில்டினாஃபில் (Sildenafil) மருந்தைக் கண்டுபிடித்தது.
ஆய்வில் அம்மருந்து இதய நோய்க்கு விடையளிப்பதை விட, ஆண் குறியை நீண்ட நேரம் விரைப்புத்தன்மையோடு இருக்கச் செய்தது, வயாகரா பிறந்தது. உலக அளவில் பாலியல் தொடர்பான மருந்துகளில் இன்று வரை வயாகராவை விஞ்சிய மருந்தில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust