Antarctica Twitter
அறிவியல்

அண்டார்டிகா : பனிப்பாறைகளுக்கு அடியே ஓடும் ஆறு - ஓர் ஆச்சரிய உலகம்

அண்டார்டிக்கா பனிப்பாறையில் 500 மீட்டருக்கு கீழே இதுவரை மானுட கண்கள் பார்த்திடாத புதிய உயிர்களை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

NewsSense Editorial Team

நிலாவிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில் தாவரம் வளர்வது எல்லாம் போன மாதக் கதை, இல்லை இல்லை செய்தி. நேற்றைய செய்தி, அண்டார்ட்டிகா கண்டத்தில் முற்றிலும் பனிப்பாறைகள் சூழ்ந்த ஓர் உலகத்துக்கு அடியில், ஆறுகளும் ஏரிகளுமாக இருக்கும் இன்னொரு புதிய உலகத்தின் திறவுகோலைக் கண்டுபிடித்து இருக்கின்றனர், அறிவியலாளர்கள்.

அண்டார்டிக்காவின் ரோஸ் பனிப்பாறை மண்டலத்தில், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் குழுவினரே இதைக் கண்டறிந்துள்ளனர்.

அண்டார்டிக்காவில் இருக்கும் பனிப் பாறைகளில் மிகப் பெரியதான இந்த ரோஸ் பனிப்பாறை மண்டலம், ரோஸ் என்கிற கடல் பகுதியில் மிதக்கக்கூடிய பனிப்படுகை ஆகும். இந்தப் பகுதியில் நியூசிலாந்து குழுவினர் ஆராய்ச்சிப் பணியிலிருந்தபோது, கிறித்துவ தேவாலயம் போன்ற ஒரு பகுதி முதலில் தென்பட்டுள்ளது. அதாவது தேவாலயத்தின் மேல்நோக்கி கூர்முனைக் கட்டுமானத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டால் எப்படி இருக்குமோ, அப்படியான ஒரு வடிவத்தில் ஆழ்கடல் நீரடிக் குகையைப் பார்த்ததும் ஆராய்ச்சியாளர்கள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

ஆய்வு

ஏனென்றால், அந்தப் பகுதியில் கடலுக்குள் வேறு என்னென்ன உயிரினச் சூழல் இருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்வதுதான் அவர்களின் வேலையே!

வேறு உயிரினங்களுக்கும் கடலடிக் குகைக்கும் என்ன சம்பந்தம் எனக் கேள்வி எழக்கூடும். அதுவேதான் அதற்கு பதிலும் ஆகும்.

ஆழ்கடல் நீரடிக் குகையைக் கண்ட நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்களுக்குச் சொல்லிக்கொள்ள முடியாதபடி அப்படியொரு மகிழ்ச்சி!

சரியாக, குறிப்பிட்ட அந்த இடத்தில் பனித்தரைக்கு அடியில் 500 மீட்டர் ஆழத்தில், அவர்களுடைய ஆராய்ச்சிக் கருவியில் புத்தம்புதிய உயிரினங்கள் தாமாக வந்து பதிவுசெய்து கொண்டன.

எப்படி நிலா, செவ்வாய் போன்ற கோள்களில் வேறு உயிரினங்கள் வாழ்வதற்குச் சாத்தியம் இருக்கிறதா என ஆராய்ச்சி நடக்கிறதோ அதைப்போலவே, முழுவதும் பனிக்கட்டியால் ஆன அண்டார்டிக்கா பகுதியில் உலகத்தின் மற்ற பகுதியைப் போன்ற உயிரினங்கள் இருக்குமா என்கிற ஆராய்ச்சியும் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான திறவுகோலாக இந்தக் கண்டறிவு அமைந்துவிட்டது என்பதுதான் இப்போதைய பேசுபொருள்!

உயிரினங்கள்

பனித்தாயின் கீழ் 500 மீட்டாருக்குக் கீழ் நியூசிலாந்து குழுவினர் கண்டறிந்தது, ஆறு ஒன்றின் முகத்துவாரமாக இருக்கும் என்று இப்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இது சில கி.மீ. நீளம் கொண்ட ஆறாக இருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருதுகோள்.

ஆராய்ச்சியாளர்கள் வழக்கம்போல பனிப்பாறையைத் துளையிட்டு ஆய்வுக்கருவிகளை குறிப்பிட்ட இடத்தில் வைத்தனர். அவர்களின் கேமராவில் திடீரென தெளிவில்லாதபடி ஆனது. உடனே அந்தக் குழுவினர் ஏதோ அசாதாரணமான ஒன்று நடக்கிறது எனப் பரபரப்படைந்தனர்.

என்ன நடந்தது என்பதை ஆய்வுக்குழுவைச் சேர்ந்த நிவா கிராக் ஸ்டீவன்ஸ் சொல்கிறார்...

“ கொஞ்ச நேரம் கேமராவில் ஏதோ கோளாறு ஆகிவிட்டது என்றுதான் நினைத்தோம். சிறிது நேரத்தில் கேமராவை முன்னைவிட உற்றுநோக்கிப் பார்க்கவைத்ததில் 5 மி.மீ. அளவுக்கு கணுக்காலிகள், பன்முகக்காலிகள், பெரிய, சிறிய நண்டுகள், அதையொத்த சிறுசிறு பூச்சிகள் கூட்டமாக இருந்ததை உறுதிசெய்ய முடிந்தது. இதேபோல மற்ற பனிப்பாறைப் பகுதிகளிலும் ஆய்வுகளில் ஈடுபட்டு இருக்கிறோம். அதைப்போல இங்கும் இருக்கும் என நினைத்திருந்தோம். ஆனால் இந்த முறை பெரிய ஆச்சரியம் வந்து எங்களைத் தூக்கிப்போட்டு விட்டது.” என்கிறார், ஸ்டீவன்ஸ்.

Antarctica

"எங்களால் எங்களையே பிடித்துக்கொள்ள முடியவில்லை. புதுப்புது உயிரிகள் அத்தனையும் எங்களுடைய ஆய்வுக் கருவிகளுக்கு முன்பாக நீந்திக்கொண்டு செல்வதைப் பார்க்க, இருப்புக்கொள்ள முடியவில்லை, நாங்கள் அவரவர் பாட்டுக்கு எம்பிக் குதிக்கிறோம்... ஆடுகிறோம் பாடுகிறோம்... ஏனென்றால், அந்தப் பகுதியில் புத்தம்புதிய ஒரு இயற்கைச் சூழல் மண்டலம் இருக்கிறது.” எனப் பரவசத்துடன் பேசுகிறார், ஸ்டீவன்ஸ்.

அதை அவரின் குழுவினர் கண்டுபிடித்து விட்டனர் என்பதுதான் அவர்களின் அளவில்லாக் கொண்டாட்டத்துக்கும் உற்சாகத்துக்கும் காரணம். அதாவது, பொதுவாக அண்டார்டிக்காவில் நடத்தப்படும் ஆய்வுகளில் பருவநிலை தப்புதலால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றியவை கணிசமானவை. அப்படி அங்குச் சென்ற குழுவினர்தான் இப்படியொரு புதுவித உயிரினச் சூழலைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


நியூசிலாந்து நாட்டின் தேசிய நீரியல்- வளிமண்டல ஆய்வு நிறுவனம், அந்நாட்டின் வெலிங்டன், ஆக்லாந்து, ஒட்டாகோ பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே, இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.

பருவநிலை தப்புதலால் அண்டார்டிக்கா பனிப்படுகை உருகுவதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கடலடி முகத்துவாரத்தின் பங்கு என்ன என்பதை இன்னும் துல்லியமாக ஆராய்வதே, இந்தக் குழுவினரின் அடுத்தகட்ட வேலையாம்.

குறிப்பிட்ட இந்த ஆராய்ச்சித் திட்டக் குழுத் தலைவரான ஹூ ஹோர்கான் என்பவரே, முதலில் இந்த முகத்துவாரத்தைக் கண்டறிந்தவர். வெலிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவர், ரோஸ் படப்படுகையைச் செயற்கைக்கோள் மூலம் ஆராய்ந்துகொண்டு இருந்தபோது, ஒரு பள்ளத்தைப் பார்த்திருக்கிறார். அதன்பிறகு அந்தப் பகுதியைப் பற்றி மேலும் ஆராய்ந்து அந்த இடத்துக்கே சென்று கருவிகள் மூலம் கூடுதலான தரவுகளை உறுதிப்படுத்தி இருக்கின்றனர், அவருடைய குழுவினர்.

ஆற்றின் ஓட்டத்தை ஆராய சில ஆய்வுக்கருவிகளை இறக்கிவிட்டு இருக்கிறோம்; இன்னொரு பக்கம் ஆய்வுக்கூடத்தில் பனிப்படுகைக்கு அடியில் எடுக்கப்பட்ட தூய்மையான நீரில் என்னென்ன தனித்தன்மைகள் இருக்கின்றன என்கிற ஆராய்ச்சி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்கிறார், ஹோர்கன்.

பனிப்பகைக்கு அடியில் மறைந்துகிடக்கும் இன்னொரு உலகத்தைக் கண்டுபிடிக்க, இப்போதைக்கு உற்றுநோக்குவதுதான் தங்கள் குழுவினரின் முழு வேலையும் என்கிறார் அவர்.

இதே குழுவின் ஆராய்ச்சியை நினைவூட்டி, இந்தப் பூமியின் அபாயச் சூழலை அக்கறையோடு உணர்த்துகிறார், ஆராய்ச்சியாளர் ஸ்டீவன்ஸ். கடந்த பிப்ரவரியில் பசிபிக் தீவு நாடான டோங்கோவில் எரிமலை வெடிப்பும் அதையடுத்த சுனாமியும் சேர்ந்து ஒரேயடியாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளை அழித்துவிட்டுப்போனது என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கக்கூடும்.

அதற்கு சில நாள்களுக்கு முன்னர், இதே குழுவினரின் ஆய்வுக் கருவியில் குறிப்பிட்ட அழுத்த மாறுபாடு பதிவானது என்பதைக் குறிப்பிடும் ஸ்டீவன்ஸ், இந்தப் பூகோளம் எந்த அளவுக்குச் சமகால நடப்புகளால் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது... ஆனாலும் அவற்றிலிருந்து மற்றவர்கள் எவ்வளவோ தள்ளிநிற்கின்றனர் என ஆதங்கப்படுகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?