Cat Pexels
ஆன்மிகம்

பெயர்களை நினைவில் வைத்திருக்கும் பூனைகள் - ஆச்சரியமான ஆய்வு

பூனைகள் தங்கள் பெயரை மட்டுமல்ல தங்கள் உடனிருக்கும் பூனைகளின் பெயரைக் கூட நினைவில் வைத்துக்கொள்ளுமாம். தன் பெயரைச் சரியாக சொல்லி அழைக்கவில்லை என்றால் கோபப்படுமாம்.

NewsSense Editorial Team

மேற்குலகில் செல்லப் பிராணிகளின் வரிசையில் நாய் மட்டுமல்ல பூனையும் அடக்கம். இந்தியாவில் நாய்களுக்கு இருக்கும் செல்வாக்கு பூனைகளுக்கு இல்லை. ஆனால் உலகெங்கும் நாய்களுக்கு அடுத்த படியான செல்லப் பிராணி என்றால் அது பூனைகள்தான். நாய்கள் ஏன் முதல் இடத்தில் இருக்கின்றன? அவை மனிதர்கள் கூறுவதை புரிந்து கொள்ளும் திறன் படைத்தவை. பூனைகள் அந்த அளவுக்கு இல்லை. இருப்பினும் சமீபத்திய ஆய்வு ஒன்று பூனைகளும் மனிதர்களோடு நெருக்கமான உறவைப் பராமரிக்கும் வண்ணம் வினையாற்றுகின்றன என்று கூறுகிறது.

நாய்களுக்கும் பூனைகளுக்கும் ஒவ்வொரு வீட்டிலும் பெயர்கள் இருப்பினும் அறிமுகமாகாத நபர்கள் இவைகளை சந்திக்கும் போது எப்படி அழைப்பார்கள்? நாய்கள் என்றால் ச்ச், ச்ச் ச்ச் என்றும் பூனைகளை புஸ், புஸ், புஸ் என்றும் அழைப்பார்கள். இப்படி அழைக்கும் போது நாய்கள் வாலாட்டும், பூனைகள் என்ன செய்யும்?

Cat

பூனைகள் என்னடா இவர் தனது பெயரை வைத்து அழைக்காமல் புஸ்,புஸ் என்று அழைக்கிறாரே என்று கோபமடையுமாம். அந்தக் கோபத்தில் அப்படி அழைப்பவர் குறித்து பூனைகள் தமக்குள்ளே ஒரு அபிப்ராயத்தையும் உருவாக்கிக் கொள்கின்றன. பூனை இப்படி நினைக்கும் என்பதை நாம் என்றாவது யோசித்திருக்கிறோமா?

இது குறித்து ஜப்பானில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பூனைகள் தமது பெயரை நினைவில் வைத்திருப்பதோடு, அருகாமையில் இருக்கும் மற்ற பூனைகளது பெயர்களையும் நினைவில் வைத்திருக்கின்றன என தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்ல, பூனைகள் தம்மை வளர்க்கும் வீட்டு மனிதர்கள் அனைவரது பெயரையும் கூட நினைவில் வைத்திருக்கின்றன.

பொதுவில் பெயர்களை நினைவில் வைத்திருப்பது என்பது நாய்களின் குணம். ஆனால் அந்த பண்பு பூனைகளுக்கும் இருக்கிறது என்பது பலருக்கும் ஆச்சரியமாகவும், ஏன் பயமாகவும் கூட இருக்கலாம். பூனைதானே என ஒதுக்கி விட்டு வீட்டு மனிதர்கள் பேசிக்கொள்ள முடியாது. சொல்லப்போனால் அவை நமது பேச்சுக்களை உற்றுக் கேட்கின்றன. இதை ஒட்டுக் கேட்பதாகக் கூட சிலர் பயப்படலாம்.

cat

ஜப்பானில் விலங்கு அறிவியல் ஆராய்ச்சியாளர் சாஹோ டகாகி மற்ற ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர்கள் இந்த ஆய்விற்காகப் பல பூனைகள் வாழும் வீடுகளைத் தேர்ந்தெடுத்தனர். அதாவது ஒரு வீட்டிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட பூனைகளை வளர்ப்பார்கள். அந்த வீடுகள்தான் ஆய்விற்காகத் தெரிவு செய்யப்பட்டவை.

ஒரு வீட்டில் இருக்கும் ஒரு பூனையிடம் அதே வீட்டில் வாழும் மற்ற பூனைகளின் புகைப்படங்கள் காட்டப்பட்டன. அப்படிக் காட்டும் போது காட்டப்படும் பூனையின் பெயரை உரிமையாளர் பெயர் சொல்லி அழைப்பதைப் பதிவு செய்து ஒலிக்கச் செய்தார்கள்.

குரல் பதிவை ஒலிக்கச் செய்யும் போது ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வகைகளை கடைப்பிடித்தார்கள். ஒன்று புகைப்படத்தில் காட்டப்படும் பூனையின் உண்மையான பெயரை ஒலிக்கச் செய்வது, இதை ஒழுங்கு நிலை என்று அழைக்கிறார்கள். இரண்டாவதாகப் படத்தில் காட்டப்படும் பூனையின் பெயருக்குப் பதில் வேறு பூனைகளின் பெயர்களை ஒலிக்கச் செய்தது, இது ஒழுங்கற்ற நிலை. இரண்டுக்கும் பூனைகள் எவ்விதம் வினையாற்றின?

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பூனைகள் வித்தியாசமாக வினையாற்றின. பூனைகளின் உண்மையான பெயரை ஒலிக்கச் செய்த போது அவை இயல்பாகப் பார்த்தன. ஆனால் காட்டப்படும் பூனையின் பெயரை மாற்றி அழைத்த போது பூனைகள் குழப்பமடைந்தன. கூடவே அந்தப் படங்களை நீண்ட நேரம் வெறித்துப் பார்த்தன. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் விரிவாக சயிண்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் எனும் இதழில் வெளியிடப்பட்டன.

நல்லது, இனி உங்கள் வீட்டில் பூனைகளை வைத்துக் கொண்டு இரகசியம் ஏதும் பேச முடியாது என்று கவலைப்படுகிறீர்களா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?