Covid Variant XE NewsSense
தமிழ்நாடு

Morning News Tamil : மும்பையில் ஒருவருக்கு புதிய Covid Variant XE - மத்திய அரசு விளக்கம்

NewsSense Editorial Team

மும்பையில் ஒருவருக்கு எக்ஸ்இ வைரஸா? - மத்திய அரசு விளக்கம்

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆல்பா, பிட்டா, டெல்டா, ஒமைக்ரான் எனப் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், தற்போது உலகின் பல பகுதிகளில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்த ஒமைக்ரான் வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. இந்த புதிய வகை உருமாற்றத்திற்கு ’எக்ஸ்இ’ வகை வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த ‘எக்ஸ்இ’ வைரஸ் முதன்முதலில் கடந்த ஜனவரி 19-ம் தேதி இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒமைக்ரான் வைரசில் உள்ள பிற திரிபை விட ‘எக்ஸ்இ’ வகை 10 சதவீதம் அதிக வேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் ’எக்ஸ்இ’ வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக மும்பை மாநகராட்சி நேற்று தெரிவித்தது. ஆனால் மத்திய அரசு மும்பையில் கண்டறியப்பட்டது ‘எக்ஸ்இ’ வகை வைரஸ் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும், இந்தியாவில் இதுவரை ஒமைக்ரானின் உருமாற்றமடைந்த ‘எக்ஸ்இ’ வகை கொரோனா பரவில்லை. தற்போது உள்ள ஆதாரங்கள் மும்பையில் உறுதி செய்யப்பட்டது ‘எக்ஸ்இ’ ரக வைரஸ் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை எனக் கூறியிருக்கிறது.

தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - முதல்வர் ஸ்டாலின்


நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி எண்.110-ன் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது, தொழில்துறை சார்ந்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள முதலீடுகளைப் பற்றிப் பேசினார். மேலும், 2022 மே மாதம் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம், ஜெர்மனி நாட்டில் ஹானோவர் நிகழ்வு, ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள குளோபல் ஆப் ஷோர் வின்ட் நிகழ்வு, ஆகியவற்றில் கலந்துகொண்டு முன்னணி முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்றார்.

மேலும், 2023-ம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடத்தப்படும் என்றும் அதிகமான முதலீடுகள் திரட்டப்பட்டு, பல லட்சம் தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

Beast

அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தக்கூடாது - விஜய் மக்கள் இயக்கம்

`விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில்,

அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும், எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில் , இணையதளங்களில் போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ மீம்ஸ் உள்ளீட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது. விஜய் அவர்களின் அறிவுறுத்தலை யாரேனும் மீறினால் அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு , அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.' - என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை -17 ம் தேதி நீட் தேர்வு!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர்ந்து பயில்வதற்கு ‘நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே, இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு நீட் தேர்விலிருந்து ஓராண்டு மட்டும் விலக்கு பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து நீட் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து பங்குபெற்று வருகிறார்கள். தமிழக அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வு வருகிற ஜூலை 17-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க மே மாதம் 6-ந் தேதி கடைசி நாளாகும். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் 20 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவ கல்லூரி கல்வி கட்டணங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை

நாடாளுமன்ற மாநிலங்களவையில், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், தனியார் மருத்துவ கல்லூரிகள் கட்டணம் குறித்த பிரச்னையை எழுப்பினார். இதுகுறித்துப் பேசிய அவர், "நாட்டின் மொத்த மருத்துவ கல்லூரிகளில் அரசு மருத்துவ கல்லூரிகள் 53 சதவிகிதம் மட்டுமே. மற்றவை தனியார் மருத்துவக் கல்லூரிகள்தாம். கடந்த சில ஆண்டுகளாக தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2017-ல் அக்கல்லூரிகளில் 40 சதவிகித இடங்களுக்கு கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய மருத்துவ ஆணையம் மூலம் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதை 50 சதவிகித இடங்களாக நாடாளுமன்ற நிலைக்குழு உயர்த்தியது. இந்த சட்டவரம்புக்கு உட்படாத மீதி 50 சதவிகித இடங்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகள் கட்டண கொள்ளை நடத்துகின்றன. அவற்றின் கல்விக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தவேண்டும்" என்றார்.

காஷ்மீர் பண்டிட்டுகளின் சொத்துகள் திரும்ப ஒப்படைக்கப்படும் - மத்திய அரசு உறுதி


நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதிலளித்துப் பேசினார். அதில், " அராஜகம் காரணமாக வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகள் உள்ளிட்ட காஷ்மீரிகள் அனைவரிடமிருந்தும் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட சொத்துகள், அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். அதற்கான திறன், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குள்ளது. அந்த சொத்துகளின் பாதுகாவலராக மாவட்ட கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். புலம்பெயர்ந்த காஷ்மீரிகளின் புகார்கள் உண்மையாக இருந்தால், சொத்துகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். இதுவரை 610 பேரின் சொத்து மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த புகார்களை ஆராய காஷ்மீர் அரசு ஒரு வலைதளத்தையும் தொடங்கியிருக்கிறது" என்றார்.

ராஜபக்சே பதவி விலக மாட்டார்! - இலங்கை நாடாளுமன்றத்தில் அரசு தலைமை கொறடா

இலங்யைில் நிலவி வரும் அசாதாரண சூழலில், பெரும்பான்மைய இழந்த அதிபர் ராஜ பக்சே பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், `அதிபர் பதவி விலக மாட்டார்!' - என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அரசு தலைமை கொறடாவான அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ கூறியதாவது, "கோத்தபய ராஜபக்சே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர். எனவே, அவர் பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை. எந்தச் சூழ்நிலையிலும் ராஜினாமா செய்ய மாட்டார். தற்போதைய பிரச்னைகளை எதிர்கொள்வார். அதிபர் மாளிகையையும், அரசு சொத்துகளையும் தாக்க முயற்சி நடந்ததால்தான், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறைகளுக்கு எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாதான் காரணம். இந்த வன்முறை அரசியலை அனுமதிக்கமுடியாது. மக்கள், வன்முறைக்கு முடிவுகட்ட வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு தொடர்ந்து பாடுபடும்" என்றார்.

ஐ.பி.எல் போட்டிகள் நிலவரம்!

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?