சென்னையில், கடந்த 137 நாள்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தன. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கும் மேலாக விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், 5 மாதங்களுக்குப் பிறகு சென்னையில், சமையல் கியாஸின் விலை 50 ரூபாய் அதிகரித்து 967 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வுகளால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக சட்டசபையில் அனைத்து கட்சி ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக அரசை கண்டிக்கும் மேகதாது அணைக்கு எதிரான தனி தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைக் காப்பது எல்லோரின் கடமை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசால், 2022- ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன், 107 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. விருது பட்டியலில் 34 பேர் பெண்கள் மற்றும் 13 பேர் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்றது. அப்போது மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் சார்பாக அவருக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை அவருடைய மகள்கள் பெற்றுக்கொண்டனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பயணம் குறித்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அந்த அறிவிப்பில்,
ஜோ பைடன், வருகிற 24-ம் தேதி பெல்ஜியம் செல்கிறார். அங்கு நேட்டோ தலைவர்கள், ஜி-7 தலைவர்கள், ரோப்பிய யூனியன் தலைவர்களைச் சந்திக்கிறார்.
அவர்களுடன் ரஷ்யாவின் மீதான பொருளாதார தடை மற்றும் ரஷ்யாவின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான உக்ரைன் மக்களுக்கான வாழ்வாதார முயற்சிகள் குறித்து முக்கிய ஆலேசானைகளை மேற்கொள்கிறார்.
அதனை தொடர்ந்து 25- ம் அவர் போலந்து சென்று அந்த நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். உக்ரைனுக்கான உலக நாடுகளின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் இந்த சந்திப்புகள் அமையும். அதே வேளையில் ஜோ பைடன் உக்ரைனுக்கு செல்லும் திட்டமில்லை.
Kashmir Files
தி காஷ்மீர் ஃபைல்ஸ் - திரைப்படம் பல விவாதங்களைக் கிளப்பி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் வரிச்சலுகை வழங்கியுள்ளன. மற்றொருபுறம் படத்தை பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் இப்படத்துக்கு எதிராக விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தை திரையிடப்படுவதன் மூலம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் உலகக்கோப்பை கிரிகெட் இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்
ஹாமில்டனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது. இந்திய அணி எஞ்சிய இரு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களம் காணுகிறது.