தேசாந்திரியின் தடங்கள் : நார்வே-சுவீடன் எல்லை – வடதுருவ ஒளியை தேடி நள்ளிரவு உலா! – பகுதி 7 twitter
உலகம்

தேசாந்திரியின் தடங்கள் : நார்வே-சுவீடன் எல்லை – வடதுருவ ஒளியை தேடி நள்ளிரவு உலா! – பகுதி 7

இரு நாட்களின் தேடலின் பின், ஆங்காங்கே அனுபவித்த சவால்களின் சாயல்கள் மறந்து கிட்டத்த 1 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு அத்தகைய கடும் குளிரில் நின்றோம் என்பதைக் கூட உணராத அளவிற்கு வடதுருவ ஒளியினைக் கண்ட பேரானந்தம் அனைவரிடமும் பரவியது.

விஜய் அசோகன்

வடதுருவ ஒளியைக் காண சுவீடனின் தெற்கு முனையில் இருந்து வடக்கு முனை வரை 2000 கிமீ தொடர் ஓட்டமாக சாலைப்பயணம் மேற்கொண்டு, காடு மலையென மைனஸ் 20 டிகிரி செல்ஸியஸ் குளிரில் அங்குமிங்கும் ஓடி இரண்டு நாட்களாக அலைந்து வடதுருவ ஒளியைக் காணமாலா செல்வது.

இம்முறை நார்வே-சுவீடன் எல்லையான ரிக்சுகிரான்சனிலேயே தங்கிவிட முடிவு செய்தோம்.

கிருணாவில் இருந்து ரிக்சுகிரான்சன் வரை முதல் நாள் இரவினில் சென்றதால், முழுமையான வெண்பனி அழகினைக் காண இயலவில்லை. கிருனா முதலான ரிக்சுகிராண்சன் வரையிலான இன்றைய பயணம், பகல் நேரம் என்பதால், தொடர் பெருந்தொடர் மலைகளின் பயணம் முதல் நாள் கொடுத்த திகிலினைக் காட்டிலும் மனதிற்கு இனியச் சூழலை அமைத்துக் கொடுத்தது. ஆனாலும், வடதுருவத்தில் மதிய 2 அல்லது 3 மணிக்கெல்லாம் கடும் இருட்டு தொடங்கிவிடும் என்பதால் பயணத்தின் குறைந்த காலத்தில் மட்டுமே அவ்வழகை ரசிக்க முடிந்தது.

இரவு முழுவதும் மீண்டும் ஆங்காங்கே தொடர்ந்து மலைகளில் கடுமையான குளிரில் நடக்க வேண்டியது வரலாம் என்பதால், மாலை நேரத்தில் ரிக்சுகிரான்சன் வந்தடைந்தது, தங்கும் விடுதியில் ஓய்வெடுத்துக்கொண்டோம். நான் சற்றுக் கண் அசந்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். இரவு 10 மணிக்கு மேல், வடதுருவ ஒளி வருவதற்கான வாய்ப்பு இருந்ததால், எங்கள் அறைகளில் நேரம் நெருங்க நெருங்க சற்றுப் பரப்பரப்பானது.

தங்கும் விடுதியில் இருந்த வரவேற்பறை பெண்ணும் இன்று கட்டாயம் வடதுருவ ஒளியினைக் காண வாய்ப்பு இருப்பதை உறுதிப்படுத்தினார். மேகங்கள் சூழாத திறந்த வான்வெளி நிலையில் இருந்து, மைனஸ் 20ற்கு கீழே தட்பவெட்ப நிலை இருந்தமையால், உள்ளூர்வாசியான அப்பெண் உறுதியாக நாங்கள் வடதுருவ ஒளியினைக் காண்போம் என உற்சாகமூட்டினார்.

முதல் நாள் இரவினை விட கூடுதல் குளிர் (தோராயமாக மைனஸ் 20-24) இருக்கும் என்பதால், அதற்கேற்ற உடைகளை குழந்தைகளுக்கு கவனமாக அணியச் செய்தோம். பெரியவர்களும் கடும் குளிர் தாங்கும் உள்ளுடை, மேலுடை, கை உறை, கழுத்திற்கென தனியாக கம்பளி துண்டு, காதுவரை முழுமையாக மறைக்கச் செய்யும் தலைக்கவச உடை என அனைத்தும் பார்த்துப் பார்த்து அணிந்துக்கொண்டோம்.

நான் தூங்கி எழும் முன் கீர்த்தியும் தணிகையும் எந்த மலைகளில் நம்மால் நடக்க இயலும், எங்கெல்லாம் மின்னொளி தென்படாத கடும் இருட்டுச் சூழல் இருக்கும் என தோராயமாக ஊரினைச் சுற்றிக் கண்டுவந்தனர்.

இரவு 10 மணிக்கு மேல், முதலில் எவ்விடம் செல்வதெனத் தெரியாமல், மகிழுந்துவிலேயே சுற்றிக் கொண்டிருந்தோம். வான்வெளி எங்களுக்கு எவ்வித சமிக்ஞையும் காட்டுவதாக நாங்கள் உணரவில்லை! மீண்டும் ஏமாறப் போகிறோமோ என்றும் கூட அஞ்சினோம்!

எதற்கும் நோர்வே நாட்டு எல்லைக் காவற்பகுதிக்குச் சென்று பார்த்துவிட்டு வருவோம் என சென்றோம். நேற்றே அங்கு அதிகளவில் மின்னொளி இருந்ததைப் பார்த்திருந்தாலும், அவ்வெல்லைக்கு அப்பால் மலைகளின் இருட்டில் ஏதேனும் தென்படுகிறதா என யோசித்துக்கொண்டே அத்திசை நோக்கி மகிழுந்துவை இயக்கினேன்.

முதல் நாள் இரவினைப் போலவே தான் வானம் தென்பட்டது. ஏமாந்துவிடுவோமோ என சற்றுக் கவலையுடன் நின்று, பேசிக்கொண்டிருந்த வேளையில், மின்னொளியின் கூடுதல் அடர்த்தியையும் கடந்து வானத்தில் ஏதோ மாற்றம் உருவானதைக் காணமுடிந்தது.

ஆம்! அதேதான்! வடதுருவ ஒளி வானத்தில் தன் ஆட்டத்தினைக் காட்டத் தொடங்கியுள்ளது என உணர்ந்தோம். கைப்பேசி செயலியின் செய்தியும் வரைபடமும் அவ்விடத்தில் வடதுருவ ஒளி வந்துவிட்டதை உறுதிப்படுத்தின. ஆனால், கடுமையான இருட்டில் மட்டுமே வடதுருவ ஒளியின் அழகினை ரசிக்க இயலுமென்பதால், பரபரப்பாக இருட்டான மலைகள் நோக்கி மகிழ்ந்துவை இயக்கினேன். வீடுகள் இருந்த மலைகளில் வீடுகளை கடந்து எதுவரை இருட்டில் செல்ல முடியுமோ சென்றுப் பார்த்துவிட்டு, வடதுருவ ஒளியினை காண்பதற்கு உரிய சூழல் இல்லாததால், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு மலையாக ஏறி திரும்பினோம்.

கடுமையான வெண்பனி படர்ந்தச் சாலையில் கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட ஒரு மலையில் ஏறிவிட்டு, பெரிய மகிழுந்து என்பதால் இறுதி முனையில் திரும்பவதற்கு வாய்ப்பில்லாமல் சிக்கிக்கொண்டோம். சாதாரண சாலையில் குறுகலான பகுதி எனினும் வாகனத்தை வந்த பாதைக்கே திருப்பவது எளிது. கடுமையான வெண்பனியின் அடர்த்தியில் சக்கரங்கள் இயல்பாக திரும்பாது, முழுமையாக பின் நோக்கித் திருப்ப வேண்டுமெனில், சற்று சவலாகவே இருக்கும். நாங்கள் ஏறிச்சென்று திரும்ப நினைத்த மலையின் முனை செங்குத்தாக வேறு இருந்து. சற்று சறுக்கினாலும் ஆழமான கீழ்த்தளம் சற்று பதற்றைத்தைக் கொடுத்தது. எவ்வளவோ பார்த்தாகிவிட்டது, இதனையும் பார்த்துவிடுவோம் என மனதைரியம் இருந்தாலும், மூன்று குழந்தைகளும் மகிழுந்து உள்ளே இருந்து கூடுதல் பொறுப்பு, மனதின் தன்னம்பிக்கையை சற்று அசைத்துத்தான் பார்த்தது.

ஒருவழியாக பின்னோக்கிய திசைக்கு வாகனத்தை திருப்பிவிட்டாலும், கொண்டை ஊசி வளைவுகளில் கீழே இறக்குவது, அதுவும் சமமற்ற சாலைகளின் வளைவுகளில் கீழே இறக்குவது கடும் சவாலாகவே இருந்தது. இதற்கெனவே 30 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வடதுருவ ஒளியினைத் தவறவிட்டுவிடுவோமோ என ஏனையோரின் பதற்றமும் சேர்ந்து வாகனத்தை இயக்கும் எனக்கு கூடுதல் மனச்சுமையைக் கொடுத்தது.

ஒருவழியாக கீழே இறங்கி ஊரின் எல்லையினைக் கடந்து இருந்த, இன்னொரு பெரிய மலைக்குச் சென்றோம். பாதி மலைக்கு மேல், வாகனத்திற்கான பாதை இல்லாததால், அங்கிருந்து கடும் இருட்டுச் சூழலை நோக்கி நடக்கத் தொடங்கினோம். இத்தகைய கடும் குளிரில், அதுவும் கடும் இருட்டினில் குழந்தைகள் எப்படி நடப்பார்களோ என்ற எங்கள் எண்ணத்தினைப் பொசுக்கி வெண்பனியினை திரட்டி பிறர் மீது அடித்து விளையாடி மகிழ்வோடு அம்மலையினை ஏறிக்கொண்டிருந்தனர். இன்னும் சொல்லப்போனால், அவர்களின் வேகமான நடைக்கு எங்களால் ஈடுக் கொடுக்க இயலவில்லை.

ஒருவழியாக, நாங்கள் நிற்க வேண்டிய இடத்தினை அடைந்தோம். கீர்த்தியும் தணிகையும் ஏற்கனவே பார்த்துவிட்டு தேர்ந்தெடுத்த இடம் தான் எனினும் ஊரின் எல்லையினைக் கடந்து இருந்த மலை, ஆள் நடமாட்டம் இல்லாத கடும் இருட்டு இரவினில் பெண்கள், குழந்தைகளோடு வருவது தொடர்பாக குழப்பம் இருந்ததால் இவ்விடத்தினை இறுதி வாய்ப்பாக வைத்திருந்தார்கள்.

வானத்தில் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்வதை உணர முடிந்தது. ஆனால், நேரடியாக கண்ணுக்கு எவ்வித வண்ணஜாலங்களும் நிகழ்வதைக் காண முடியவில்லை. உறுதியாக வடதுருவ ஒளிச் சிதறல்கள் வானத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. எப்படி காண்பது, எவ்வாறு படம் பிடிப்பது என வழித் தெரியாமல் சிறுதி நேரம் தவித்துக் கொண்டிருந்தோம்.

வானத்தில் நட்சத்திரங்கள் தென்படுகின்றன, மேகமூட்டம் இருந்தால் வடதுருவ ஒளியினைக் காண முடியாது. ஆனால், வான்வெளி திரைச்சீலைகள் அற்ற திறந்தவெளிக் காட்சியை வழங்கியது, மேகம் போன்ற போர்வை ஆங்காங்கே வந்து சென்றாலும் அதற்கு பின்னால் நட்சத்திரங்களும் தென்பட்டன. அப்படியெனில் மேகம் போன்ற போர்வைகள் தான் வடதுருவ ஒளிச்சிதறல்.

நவீன படம் பிடிக்கும் தொழிற்நுட்பக் கொண்ட நிழற்படக் கருவியில் மட்டும்தான் அழகான காட்சியினைப் பிடிக்க முடியும். அடடா! வடதுருவ ஒளியைத்தான் பார்க்கிறோம் என தெரிந்திருந்தாலும் அதனை எவ்வாறு முறைப்படி படம் பிடிப்பது என குழம்பிக் கொண்டிருந்தோம்.

பிறகுதான் நினைவிற்கு வந்தது! ஆப்பிள் கைப்பேசியில் அவ்வித தொழிற்நுட்பம் உள்ளது. ஆம், அதன் வழியாக படம்பிடித்தோம். வான்வெளியின் வடதுருவ ஒளிச்சிதறல் பசுமையான அலைகளால் நிரம்பி இருந்தது. என்னுடைய சாம்சங்க் கைப்பேசியிலும் ஒரு சில நிழற்பட அமைப்பினை மாற்றியமைத்து, வடதுருவ ஒளியினைப் படம் பிடித்தோம். பிக்சல் பிக்சலாக (படப்புள்ளி - pixel) பொறுமையாகப் படம் பிடிக்க, நிழற்படக் கருவியின் கால அளவினைக் கூட்ட வேண்டும்.

அப்படி ஒவ்வொரு மாற்றமும் செய்து, நாங்களும் வடதுருவ ஒளியினைக் கண்டோம் என்பதற்கான சாட்சியங்களைத் திரட்டிவிட்டோம். இரு நாட்களின் தேடலின் பின், ஆங்காங்கே அனுபவித்த சவால்களின் சாயல்கள் மறந்து கிட்டத்த 1 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு அத்தகைய கடும் குளிரில் நின்றோம் என்பதைக் கூட உணராத அளவிற்கு வடதுருவ ஒளியினைக் கண்ட பேரானந்தம் அனைவரிடமும் பரவியது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?