Battle of Saragarhi : 21 Sikhs fight thousands of Afghans Twitter
உலகம்

Battle of Saragarhi: 10,000 படைவீரர்களை எதிர்த்து போராடிய 21 சீக்கியர்கள்- வியத்தகு வரலாறு

Gautham

எப்போது மனித இனம் போராட தொடங்கியதோ அன்றிலிருந்து, நீங்கள் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை, போரின் வெற்றி தோல்விகளை தகவல்கள்தான் தீர்மானிக்கின்றன. ஒரு முக்கிய தகவல் எதிரிக்குக் கிடைப்பதற்கு முன் நமக்கு கிடைத்துவிட்டால், நாம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பன்மடங்கு அதிகரித்து விடுகிறது.

அப்படி தகவல் பரிமாற்றத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு கோட்டையை பாதுகாக்கும் பணியில் 21 சீக்கிய வீரர்கள் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ராணுவத் துருப்புகளை எதிர் கொண்டு போராடி உயிர் தியாகம் செய்த வீரம் செறிந்த வரலாற்றை தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

சாராகாரி ஓர் அறிமுகம்:

இன்றைய பாகிஸ்தான் நாட்டில் சமானா மலைத்தொடர் பகுதியில் கோகத் (Kohat) என்கிற மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சாராகாரி என்கிற கிராமம்.

19ஆம் நூற்றாண்டில், இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த காலகட்டத்தில் பாகிஸ்தானும் இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்தது.

அப்பகுதியை ஒட்டுமொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர பிரிட்டன் ராணுவம் ஹிந்துகுஷ் மலை தொடரில் இருந்த லாக்ஹர்ட் (Lockhart) கோட்டை மற்றும் சுலைமான் மலை தொடரில் இருந்த குலிஸ்தான் (Gulistan) கோட்டையில் தன் ராணுவ துருப்புகளை நிறுத்தியது பிரிட்டிஷ். இந்த இரு கோட்டைகளுக்கிடையிலும் ஒரு சில கிலோமீட்டர் இடைவெளியும் இருந்தது.

இந்த இரு கோட்டைகளுக்கு இடையே telegraph முறையில் தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதிக்காக, இரு கோட்டைகளுக்கு மத்தியில் நிலத்தடியில் தந்திக் கம்பிகள் பதிக்கப்பட்டன. ஆனால் அப்பகுதியில் இருந்த ஆப்கன் மலைவாழ் மக்கள் அந்தக் கம்பிகளைத் தொடர்ந்து துண்டித்துக் கொண்டிருந்தனர்.

எனவே இரு கோட்டைகளுக்கு மத்தியில் ஒரு வலுவான தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ ஹீலியோகிராபிக் சிக்னல் முறை பயன்படுத்தப்பட்டது. சூரிய ஒளி கொண்டு கண்ணாடி மூலம் தகவலை பகிர்ந்து கொள்ளும் முறையையே ஹீலியோகிராபிக் சிக்னல் கம்யூனிகேஷன் என்கிறார்கள்.

முன்பே கூறியது போல லாக்ஹர்ட் கோட்டையும் குலிஸ்தான் கோட்டையும் இரு வேறு மலைத் தொடர்களில் இருந்ததால், இந்த இரு கோட்டைகளுக்கு மத்தியில் ஒரு சிறு கோட்டை தகவல் பகிர்வுக்காக நிறுவ வேண்டி வந்தது. அப்படி எந்தவித சிக்கலும் இல்லாமல் இரண்டு கோட்டைகளின் சூரிய ஒளி மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட இடம் தான் சாராகாரி கோட்டை.

36 ஆவது சீக்கிய ரெஜிமென்ட்

கர்னல் ஜே குக் என்கிற ஆங்கிலேய அதிகாரியின் கீழ் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் தொடங்கப்பட்டது தான் 36-வது சீக்கிய ரெஜிமென்ட் படை. இந்தப் படையில் சீக்கியர்கள் மட்டுமே வீரர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என பல்வேறு வலைதளங்களில் பார்க்க முடிகிறது. சொல்லப்போனால் இந்த படைப் பிரிவின் பூர்வீகம், 1887 ஆம் ஆண்டு 36 ஆவது சீக் பெங்கால் இன்ஃபன்ட்ரி படை பிரிவிலிருந்து தொடங்குகிறது

அப்போது பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்த ஒருங்கிணைந்த இந்தியா பாகிஸ்தான் நிலபரப்பின் எல்லையாக இருந்தது கைபர் பக்துங்வா என்கிற மாகாணம்.

அந்த எல்லையைப் பாதுகாக்க, 1897 ஆம் ஆண்டு லெப்டினன்ட் கர்னல்ஜான் ஹாக்டன் தலைமையில் இந்த 36 ஆவது சீக்கிய ரெஜிமென்ட் படை பிரிவை சேர்ந்த ஐந்து கம்பெனி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு படை தளபதிகள் மலைவாழ் மக்கள் கூட்டமாக சேர்ந்து பலமுறை இந்த மூன்று கோட்டைகளையும் கைப்பற்ற தாக்குதல்களை நடத்தினர். ஒவ்வொரு முறையும் 36 ஆவது சீக்கிய ரெஜிமெண்ட் படைவீரர்களால் ஆப்கானிஸ்தான் படை தோற்கடிக்கப்பட்டது.

மலைவாழ் மக்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக போரிட்டார் கோட்டைகளை கைப்பற்ற முடியாதென, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற கணக்கில் மலைவாழ் மக்களும், ஆப்கானியர்களும் ஒன்று சேர்ந்தனர்.

1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஹட்டா என்கிற பகுதியைச் சேர்ந்த முல்லா ஒருவர், பிரிட்டிஷ் படைகள் மீது ஜிகாத் அறிவிக்கும் அளவுக்குச் சென்றனர். அப்ரிதி மலைவாழ் மக்களோடு ஒரக்சாய் மக்களும் சேர்ந்து சமானா மலைப்பகுதியை நோக்கி பயணப்பட்டு ஒரு பெரும் படையாகத் திரண்டனர்.

சீக்கியர்களின் வீரத்தை பறைசாற்றிய சாராகாரி போர்

1897 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி ஒருங்கிணைந்த ஆப்கான் படை சாராகாரி கோட்டை மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. லாக்ஹர்ட் மற்றும் குலிஸ்தான் கோட்டைகளில் தலா 200க்கும் குறைவான வீரர்களே காவல் காத்து வந்ததாக 'தி ஹிஸ்டரி எக்ஸ்ட்ரா' என்கிற வலைதளம் சொல்கிறது. எனவே, மற்ற கோட்டைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ள படைகளை சாராகாரி கோட்டைக்கு அனுப்ப முடியாத நெருக்கடியில் இருந்தது ஆங்கிலேய படை.

இந்தப் போர் உண்மையிலேயே நடந்ததா அல்லது ஒரு கற்பனை கதையா என்கிற சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் சாராகாரியில் ஹீலியோகிராப் மூலம் லாக்ஹர்ட் கோட்டைக்கு தொடர்ந்து போர் குறித்த தகவல்களை அனுப்பி கொண்டிருந்தார் குருமுக் சிங் என்கிற சிப்பாய்.

எனவே இப்படி ஒரு கோரமான போர் நடந்தது என்பதற்கும், அப்போது ஆங்கிலேய ராணுவமே அந்த சீக்கியர்களின் வீரதீரத்தைக் கண்டு வியந்ததற்கும் போதுமான ஆதாரங்கள், புத்தகங்கள் ஏகத்துக்கு இருக்கின்றன. சரி மீண்டும் போருக்குச் செல்வோம்.

சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் சாராகாரி கோட்டையை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த தொடங்கினர். லாக்ஹர்ட் கோட்டையில் இருந்த கர்னல் ஜான் ஹக்டன், சாராகாரி கோட்டை கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும் உதவிக்கு ராணுவ வீரர்களை அனுப்புமாறும் குருமுக் சிங் கூறினார்.

ஆங்கிலேயர்களால் சாராகாரி கோட்டைக்கு வீரர்களை அனுப்ப முடியாத இக்கட்டில் இருந்தனர். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட 21 சீக்கிய வீரர்களும் ஆப்கான் படையிடம் மண்டியிட்டு சரணடைவதற்கு பதிலாக அவர்களை எதிர்த்து போராட தீர்மானித்தனர்.

ஹவில்தார் இஷார் சிங், நாயக் லால் சிங், லேன்ஸ் நாயக் சந்தா சிங் ஆகியோர் மட்டுமே அதிகாரிகள் மீதமுள்ள 18 பேரும் சிப்பாய்களே. சுருக்கமாக 10 ஆயிரம் பேரை எதிர்த்து போராடும் மிகப்பெரிய பொறுப்பை இஷார் சிங் ஏற்றுக் கொண்டார்.

சொதப்பலான ஆயுதங்கள்

வருவதோ மலைவாழ் மக்கள் தானே, மிஞ்சிப் போனால் இத்துப்போன பழைய துப்பாக்கிகளை தானே கொண்டு வருவார்கள். சாராகாரி கோட்டையை பாதுகாப்பது சூரியனே அஸ்தமிக்காத உலகின் மிகப்பெரிய நாடான பிரிட்டனின் படைகள். பிரிட்டிஷ் இந்தியாவிடம் இல்லாத துப்பாக்கிகளா... வெடிகுண்டுகளா... பீறங்கிகளா? சுட்டு தள்ளிவிட்டு முன்னேறி இருக்கலாமே என்று கேட்கிறீர்களா?

அங்குதான் பிரிட்டிஷ் ராணுவம் முன்னெச்சரிக்கை கருதி செய்த ஒரு காரியம், மிகப் பெரிய தவறாக தலையில் விடிந்தது.

1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சிப்பாய் கழகம் வெடித்த பிறகு, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் எந்த இந்திய வீரருக்கும் அப்போதைய நவீன ஆயுதங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

ஒருவேளை அப்படி புதிய நவீன ஆயுதங்கள் கையில் கிடைத்துவிட்டால் மீண்டும் இந்திய வீரர்கள் மூலம் கலவரம் வெடித்து விடுமோ என்கிற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பிரதாயத்திற்கு வழங்கப்படும் பழைய ஆயுதங்கள் அல்லது சாதாரண ஆயுதங்கள் மட்டுமே இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டன. அப்படி சாராகாரி கோட்டையை பாதுகாத்து வந்த 21 சீக்கியர்கள் கையிலும் பழைய துப்பாக்கிகள் மட்டுமே இருந்தன.

ஆனால் ஆப்கான் தரப்பில் களம் இறங்கி இருந்த வீரர்கள் கையில் மராட்டினி ஹென்றி போன்ற அந்த காலத்திலேயே ஓரளவுக்கு நவீனமான துப்பாக்கிகளை கொண்டு போருக்கு வந்திருந்தனர்.

கோரமாக நடந்த சண்டையில் ஒரு சில மணி நேரங்களுக்குள்ளையே சாராகாரி கோட்டையின் ஒரு பகுதி சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது ஆப்கான் படைகள்.

முதலில் கோட்டையை பாதுகாக்க முனைந்த சீக்கிய படை வீரர்களில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு ஒவ்வொருவராக பலரும் உயிரிழந்தனர். படை கோட்டைக்குள் நுழைந்த பின் கோட்டைக்குள்ளேயே இருந்தபடி தங்களால் இயன்றவரை ஆப்கான் வீரர்களை சுட்டு தள்ளினர். ஆயுதங்கள் சேதமாவது, குண்டுகள் தீர்வது என போரின் எதார்த்த பிரச்னைகளில் சிக்கிய பிறகும், வெறும் கையால் சண்டையிட்டு பல சீக்கியர்கள் உயிர் துறந்தனர்.

கட்டக் கடைசியில் ஹீலியோகிராப் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்த குருமுக் சிங் ஒற்றை ஆளாக பல்லாயிரக்கணக்கான வீரர்களை எதிர்த்து சண்டையிட்டார். கடைசியில் அந்த கோட்டையை கைப்பற்ற ஒட்டுமொத்த சாரதாரி கோட்டையையும் தீக்கிரையாக வேண்டி வந்ததாக சில வலைதளங்கள் சொல்கின்றன. வேறு சில வலைதளங்களோ அவர் வெடிகுண்டை கட்டிக் கொண்டு வீர முழக்கமிட்டுக் கொண்டு பத்து ஆப்கான் வீரர்கள் மத்தியில் வெடித்துச் சிதறி உயிர்த் தியாகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

1897 செப்டம்பர் 12ஆம் தேதி மாலை நேரத்தில் சாராகாரி கோட்டையை பாதுகாத்து வந்த 21 சீக்கிய வீரர்களும் உயிர்த்தியாகம் செய்திருந்தனர். ஆப்கான் தரப்பில் சுமார் 180 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பல நூறு பேர் சீக்கியர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்திருந்தனர்.

சடுதியில் ஆப்கான் படை வீழ்த்தியிருக்க வேண்டிய சாராகாரி கோட்டை, பல மணி நேரம் தாக்குபிடித்து ஆப்கான் படைகளைத் தடுத்து நிறுத்தியதால், பிரிட்டன் படைகளுக்கு உதவி கிடைக்க போதுமான அவகாசம் கிடைத்தது. ஒரு சில நாட்களிலேயே பிரிட்டன் படை சாராகாரி கோட்டையையும் மீட்டது.

இப்படி ஒரு முனையில் நடந்த சாகசம் டைம்ஸ் ஊடக பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தெரிய வந்து, இந்த ஒட்டுமொத்த செய்தியையும் லண்டனுக்கு அனுப்பி செய்தியாக வெளியிட்டார் என்கிறது விக்கிபீடியா.

இந்த வீரர்களின் நினைவாக இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித்சர் நகரத்தில் உள்ள பொற்கோவிலுக்கு அருகே ஒரு குருத்வாராவையும் ஃப்ரோஸ்பூர் பகுதியில் ஒரு குருத்வாராவைவும் நிறுவப்பட்டிருக்கிறது.

சாராகாரி போரில் உயிரிழந்த 21 பிரிட்டிஷ் இந்திய சீக்கிய ராணுவ வீரர்களுக்கும் ஆர்டர் ஆஃப் மெரிட் என்கிற அந்த காலத்தில் ஒரு இந்திய ராணுவ வீரருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டதாக சில வலைதளங்கள் சொல்கின்றன.

இன்று வரை சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட இந்திய ராணுவத்தில் இருக்கும் சீக்கிய படைப்பிரிவு, செப்டம்பர் 12ஆம் தேதியை "ரெஜிமென்டல் பேட்டில் ஹானர்ஸ் டே" என்கிற பெயரில் கொண்டாடி வருகிறது. இன்று வரை இந்திய ராணுவ பள்ளிகளில் சாராகாரி போர் குறித்து பாடம் நடத்தப்படுகின்றன.

கொண்டாடும் பிரிட்டன் சமூகம்

கடந்த 2001 ஆம் ஆண்டு விஸ்கான்ட் ஸ்லிம் என்கிற பிரிட்டனின் முன்னாள் ராணுவ அதிகாரி ஒரு கூட்டத்தில் சாராகாரி போரை பற்றி பெருமையாக பேசினார். 2002 ஆம் ஆண்டு மே மாதம் இளவரசர் சார்ல்ஸ் தொடங்கி வைத்த "ஜவான்ஸ் டு ஜெனரல்ஸ்" என்கிற ராணுவ கண்காட்சியில் சாராகாரி போர் குறித்து ஒரு தனி இடமே ஒதுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிட்டனின் பாதுகாப்புத்துறை செயலராக இருந்த மைக்கேல்ஃபல்லூன், சீக்கிய மக்கள் கொண்டாடும் பைசாக்கி திருவிழாவை பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தில் கொண்டாடினார்.

வெட்னஸ்ஃபீல்டு பகுதியில் உள்ள குருத்வாராவில் 10 அடி உயரமுள்ள சாராகாரி போரை நினைவூட்டும் பிரமாண்ட வெண்கல சிலையை நிறுவ அனுமதி கொடுத்துள்ளது வோல்வெர்ஹாம்ப்டன் நகர கவுன்சில்.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதே பகுதியில் சாராகாரி போரை தலைமை ஏற்று நடத்திய இஷார் சிங் அவர்களின் ஆளுயரச் சிலை திறக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

சாராகாரி போரில் 21 சீக்கியர்கள் மறிக்கவில்லை, இந்தியர்கள் மனதில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள். விதைகள் நல்ல விருட்சங்களாக வளரட்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?