ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரத்தில் டோம் அக்வரீ (Dom Aquaree) வளாகம் மிட்டே மாவட்டத்தின் முக்கிய சாலையில் அமைந்திருக்கிறது.
அந்த வளாகத்தில் இருந்த அக்வாடோம் (AquaDom) என்கிற மீன்காட்சி சாலை, டிசம்பர் 16ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஜி எம் டி நேரப்படி அதிகாலை சுமார் 4.50 மணியளவில் (உள்ளூர் நேரப்படி சுமார் 5.50 மணியளவில்) வெடித்ததாக பிபிசி வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த ராட்சத மீன் தொட்டி வெடித்ததால் வணிக வளாகம், ரேடிஷன் ப்ளூ விடுதி, அருகிலிருக்கும் சில முக்கிய சாலைகளில் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாக பெர்லின் நகர காவல் துறை தரப்பில் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் இருவர் காயமடைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
15.85 மீட்டர் (சுமார் 52 அடி) உயரம் கொண்ட அக்வாடோம் மீன்காட்சி சாலைதான் உலகின் மிகப்பெரிய சிலிண்டர் வடிவிலான ராட்சத மீன் தொட்டி எனலாம்.
அந்த பிரமாண்ட மீன்காட்சி சாலையில் சுமார் 1 மில்லியன் லிட்டருக்கு மேல் தண்ணீரும், 1,500க்கும் மேற்பட்ட அரியவகை மீன்களும், 100க்கும் மேற்பட்ட மீன் இனவகைகளும் இருந்ததாக பல சர்வதேச வலைதளங்கள் கூறுகின்றன.
அதே வளாகத்தில் தான் ரேடிஷன் ப்ளூ கலெக்ஷன் விடுதி, உணவு விடுதிகள், இனிப்புக் கடைகள் என பல வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன, அந்த கட்டடங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதைத் தாண்டி, லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீர் அடித்துக் கொண்டு வந்ததால், அந்த வளாகத்தை ஒட்டியுள்ள முக்கிய சாலை முழுவதும் ஒரு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகவும் செய்திகள் சொல்கின்றன.
வெள்ளப்பெருக்கினால் சாலைகள் குப்பை கூளங்களாக மாறி இருப்பதாகவும், தற்காலிகமாக சாலைகள் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வெடிப்பு ஏன் ஏற்பட்டது என்பதற்கு தெளிவான காரணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என தீயணைப்புத் துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
மீன்காட்சி சாலை வெடித்த உடனேயே, ரேடிஷன் ப்ளூ ஹோட்டலில் தங்கி இருந்த விருந்தினர்கள் 350 பேரும் அக்கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பெர்லினின் தட்பவெப்பநிலை, விபத்து ஏற்பட்ட காலை நேரத்தில் சுமார் -7 டிகிரியாக இருந்ததால், உடனடியாக விருந்தினர்களின் போக்குவரத்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளியாயின.
இப்போது ரேடிஷன் ப்ளூ விடுதி தற்காலிகமாகக் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு தான் இந்த அக்வாடோம் மீன்காட்சி சாலையில் சில புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
சில மீன்கள் உயிரோடு இருந்ததால், மாற்றுத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும், பல மீன்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த ராட்சத மீன்தொட்டி வெடித்தது ஏதோ நில நடுக்கம் போலிருந்தது என ரேடிஷன் ப்ளூ விடுதியில் தங்கி இருந்த விருந்தினர் நஸ் மஷ்ரஃப் ராய்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளார்.
ரேடிஷன் ஹோட்டல் முழுக்க அழிவைப் பார்க்க முடிந்தது. பல இறந்த மீன்களும் குப்பைக் கூளங்கள் மட்டும் மிஞ்சி இருந்ததாக சாண்ட்ரா வெஸ்ஸர் ராய்டர்ஸ் முகமையிடம் அவர் கூறினார்.
இந்த விபத்து அதிகாலை நேரத்தில் (6 மணிக்கு முன்) நடந்ததால் பெரிய அளவில் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு மணி நேரம் கழித்து இந்த விபத்து நடந்திருந்தால் கூட அந்த சாலை பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இருந்திருக்கும் அது பல உயிரிழப்புகளைக் கூட ஏற்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. பெர்லின் நகரத்தின் மேயர் ஃப்ரான்சிஸ்கா ஜிஃப்பி (Franziska Giffey) விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust