சீன அரசியலின் இரு துருவங்கள் : மீண்டும் அதிபரான ஷி ஜின்பிங் - வெளியேற்றப்பட்ட ஹூ ஜிண்டாவ் Twitter
உலகம்

சீன அரசியலின் இரு துருவங்கள் : மீண்டும் அதிபரான ஷி ஜின்பிங் - வெளியேற்றப்பட்ட ஹூ ஜிண்டாவ்

சீனாவின் முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டாவ் மற்றும் தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங்அரசியலில் மாறுபட்ட பார்வையைக் கொண்டிருக்கிறார்கள். தற்போது ஜின்பிங் 3வது முறையாக அதிபராக்கியுள்ளதால் ஹூ ஜிண்டாவின் உடல் நிலையைப் போலவே அவரது அரசியல் வாழ்வும் கவலைக்கிடமாக இருக்கிறது... என்ன நடக்கிறது சீனாவில்?

NewsSense Editorial Team

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட, அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவுக்கு மூன்றாவது முறையாகத் தலைமை தாங்கவிருக்கிறார் அதிபர் ஷி ஜின்பிங். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் 3ஆவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதே காலகட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் காங்கிரஸ் கூட்டத்தில் சில விரும்பத் தகாத நிகழ்வுகள் நடந்ததாகச் செய்திகள் வெளியாயின.

அது என்ன? பொதுவாகச் சீனா தன் அரசியல் காய் நகர்த்தல்களை எல்லாம் பொதுவெளியில் காட்டாத போது, இதை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியது ஏன்? 

சமீபத்தில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த 'தி கிரேட் ஹால் ஆஃப் தி பீபிள்' அரங்கத்திலிருந்து சீனாவின் முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டாவுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால், சில நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டார் என அந்நாட்டின் செய்தி முகமையான சின்ஹுவா (Xinhua) தளத்தில் செய்தி வெளியானது.

அந்தக் காணொளியைப் பார்க்கும் போது 79 வயதான ஹூ ஜிண்டாவோ தன் இருக்கையிலிருந்து நகர மறுப்பது போலத் தெரிகிறது. அது உண்மை என்றால்... ஏன் அவர் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதற்குச் சுருக்கமாக இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். 

1. சீனாவின் அதிகார அரசியல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சீனாவின் கடந்த காலத்தின் குறியீடாக இருக்கும் ஹூ ஜிண்டாவ் வெளியேற்றப்பட்டுள்ளார் (அல்லது)

2. ஹூ ஜிண்டாவுக்கு உண்மையிலேயே உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கலாம்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்ற முதல் நாளிலேயே ஹூ ஜிண்டாவ் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டார். அன்றே அவர் உதவியாளர்களின்றி நடக்க முடியாத சூழலிலிருந்தார். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, அவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் இப்படி திடீரென, அதுவும் கேமராக்கள் முன்னிலையில் அவர் வெளியேற்றப்படுவதற்கான காரணம் என்ன?

பொதுவாகவே, சீனாவின் கட்யூனிஸ்ட் கட்சி நிகழ்வுகள் பெரிய அளவில் முன்னேற்பாடு செய்யப்பட்டதாகவே இருக்கும். எனவே முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டாவின் வெளியேற்றம் தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்காது என சில சர்வதேச ஊடகங்கள் சொல்கின்றன.

சீன கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டத்தின் கடைசி நாளன்று, கேமராக்கள் எல்லாம் பொருத்தப்பட்ட பின், அன்றைய நாளுக்கான ஒளிப்பதிவு செய்யப்படும் போது, ஹூ ஜிண்டாவை சில அதிகாரிகள் அணுகி அவரை புறப்படச் சொன்னார்கள் என்கிறது பிபிசி வலைத்தளம்.

பொதுவாக, சீன அரசு அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சி இது போன்ற சலசலப்புகளை ஒளிபரப்பாது. அதைத் தாண்டி ஹூ ஜிண்டாவ் வெளியேற்றப்படுவதை பத்திரிகைகளில் பிரசுரிக்க அனுமதிக்கிறது என்றால், ஆளும் தரப்பு சீன அரசியல்வாதிகள் & சர்வதேச அரங்கில் உள்ள நாடுகளுக்கும் சொல்ல வருவது என்ன? இதைப் பார்ப்பதற்கு முன், கொஞ்சம் ஹூ ஜிண்டாவைக் குறித்துப் பார்த்துவிடுவோம்.

இரு துருவங்கள்:

தற்போது சீன அதிபராக இருக்கும் ஷி ஜின்பிங், தன் முந்தைய சீன அதிபர் ஹூ ஜிண்டாவின் பாதையிலிருந்து பெரிதும் மாறுபட்டவர்.

ஹூ ஜிண்டாவ், ஷி ஜின்பிங் அளவுக்குச் சகல சக்தி கொண்டவராக வலம் வரவில்லை. அதே நேரத்தில் கடும் தேசியவாதக் கொள்கைகளையும் பின்பற்றவில்லை. மாறாகச் சற்றே தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றினார் எனலாம். அது போக, கட்சிக்குள் இருந்த பல தரப்பைச் சமாளித்து ஆட்சியை நடத்த வேண்டி இருந்தது.

2003 - 2013ஆம் ஆண்டு வரை சீனாவின் அதிபராக ஆட்சி செய்த ஹூ ஜிண்டாவ், சீனாவைச் சர்வதேச அளவில் பல நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டார். பல புதிய யோசனைகளைச் சீனா ஏற்றுக் கொண்டது.

2008ஆம் ஆண்டு சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டி, சீனா சர்வதேச நாடுகளுக்கும் புதிய பொருளாதார பாய்ச்சலுக்கும் தயாராக இருக்கிறது என்பதை உணர்த்தியது. 

இவர் காலத்தில்தான் பல வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் சீனாவில் கடை விரித்தன, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. உலகம் முழுக்க இணையம் பரவிக் கொண்டிருந்த போது, சீனாவிலும் பரவியது. உள்ளூர் ஊடகங்கள் ஓரளவுக்காவது ஊடக அறத்தோடு செயல்பட முடிந்தது. ஒட்டுமொத்தத்தில் சர்வதேச அளவில் சீனாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

சீன பொருளாதாரம் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் முன்னேறியது. அதே நேரத்தில் சர்வதேச அளவில் சீனாவுக்கு உள்ள நற்பெயரைக் குறித்தும் அதிகம் கவலைப்பட்டது சீன அரசு. இதை ஒரு தரப்பினர் பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் ஹூ ஜிண்டாவின் காலம் வீணடிக்கப்பட்ட காலமாகக் கருதுகிறார்கள்.

2013ஆம் ஆண்டு சீன அதிபராகப் பொறுப்பேற்ற ஷி ஜின்பிங், தேசியவாதத்தைக் கையில் எடுத்தார். மற்றவர்கள் (அது அமெரிக்காவோ, ஐநா சபையோ, உலக வங்கியோ) என்ன சொல்வார்கள் என்பது குறித்து ஷி ஜின்பிங் அலட்டிக் கொள்ளவில்லை. இது சீனாவின் பொற்காலம், சீனாவோடு மோதுவது உங்களுக்கு நல்லதல்ல என்கிற செய்தியை தன் செயல்வழி உரக்கச் சொன்னார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது தன் அரசியல் எதிரிகள் அனைவரையும் ஊழல் குற்றச்சாட்டில் வெளியேற்றினார். இப்போது, சமீபத்தில் நடந்து முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் கூட்டத்தில்,  தன்னை எதிர்க்கக் கூடியவர்களாக்கத் தான் கருதுபவர்களையும், மாறுபட்ட கருத்து கோட்பாடு கொண்டவர்களையும் வெளியேற்றிவிட்டார் ஷி ஜின்பிங்.

நடந்து முடிந்த சீன கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டத்தில் 205 பேர் கொண்ட மத்தியக் கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் லி கெகியங் (Li Keqiang) & வாங் யாங் (Wang Yang) போன்றவர்கள் கூட இடம் பெறவில்லை. 

இவர்கள் இருவருமே தாராளவாத பொருளாதாரத்தில் (Liberal Economics) நம்பிக்கைக் கொண்டவர்களாகப் பார்க்கப்படுபவர்கள். இவர்கள் இருவருமே முந்தைய சீன அதிபரின் ஆட்சிக் காலத்தில் தொடர்புடையவர்கள்.  அப்படித் தான் முந்தைய சீன அதிபர் ஹூ ஜிண்டாவும் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. ஷி ஜின்பிங் செல்லும் பாதை சரியா தவறா என்பதைக் காலமும், அவரது வெற்றிகளுமே முடிவு செய்யும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?