துருக்கி, இராக், சிரியா, இரான், ஆர்மேனியா என பல நாடுகளில் உள்ள மலைப்பாங்காந பகுதிகளில் சுமார் 25 முதல் 35 மில்லியன் குர்து இன மக்கள் வாழ்கின்றனர். மத்திய கிழக்கிலேயே நான்காவது பெரிய இனக்குழுவாக இருக்கும் குர்துகளுக்கு, தங்களுக்கென ஒரு நிரந்தர நாடு இல்லாமல் இருப்பது தான் பிரச்சனையின் மையப் பகுதி எனலாம்.
தற்போது தென்கிழக்கு துருக்கி, வடகிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு இரான், தென்மேற்கு ஆர்மேனியாவில் உள்ள மெசபடோமிய சமவெளி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த குர்துகள்.
இன்று, அவர்களுக்கென ஒரு நிலையான பேச்சுவழக்கு இல்லாவிட்டாலும், இனம், கலாச்சாரம், மொழி மூலம் ஒன்றிணைந்து ஒரு தனி சமூகமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பல்வேறு மதமாச்சரியங்களைக் கடைபிடித்தாலும், பெரும்பான்மையான மக்கள் சன்னி முஸ்லீம்களாக இருக்கிறார்கள்.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பல குர்துகள் தங்களுக்கென ஒரு தனி தாயகத்தை உருவாக்குவது தொடர்பாக 'குர்திஸ்தான்' என்கிற பெயரில் ஆலோசித்து வந்தனர். முதலாம் உலகப் போர் மற்றும் ஒட்டமான் பேரரசின் தோல்விக்குப் பிறகு, வெற்றி பெற்ற மேற்கத்திய நாடுகள், 1920 செவ்ரெஸ் உடன்படிக்கையில் (Treaty of Sevres) குர்திஷ் மக்களுக்கென தனி நாட்டை உருவாக்க வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
யார் கண்பட்டதோ, ஊழ் வினையோ, சூழ் வினையோ... மூன்றே ஆண்டுகளில் குர்திஷ் மக்களுக்கென தனி நாடு உருவாக்கத்துக்கு
லுசான் உடன்படிக்கை (Treaty of Lausanne) மூலம் மூடுவிழா நடத்தப்பட்டது.
நவீன துருக்கியின் எல்லைகளை வரையறுத்த லுசான் உடன்படிக்கை, தனி குர்திஷ் நாட்டுக்கான கதவுகளை மூடியது. இது குர்து மக்களை, அவர்கள் வாழும் பல நாடுகளிலேயே சிறுபான்மையினராக மாற்றியது. முதலாம் உலகப் போர் நிறைவுக்குப் பிறகான 8 முதல் 9 தசாப்தங்களில், எப்போதெல்லாம் குர்து மக்கள் தங்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்குவது தொடர்பான செயல்பாடுகளை முன்னெடுக்கிறார்களோ, அப்போதெல்லாம் அத்திட்டம் அடியோடு அழித்தொழிக்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது.
ஐ எஸ் ஐ எஸ் அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் குர்து இன மக்கள் முன்னணியில் இருப்பது ஏன்?
கடந்த 2013 ஆம் ஆண்டின் மத்தியில், ஐ எஸ் ஐ எஸ் வடக்கு சிரியாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எல்லையை ஒட்டிய மூன்று குர்திஷ் பகுதிகளை குறி வைத்துத் தாக்கியது. சிரிய குர்திஷ் ஜனநாயக யூனியன் கட்சியின் (PYD) ஆயுதப் பிரிவான மக்கள் பாதுகாப்பு படைகள் (YPG) கடந்த 2014 ஆம் ஆண்டின் மத்தி வரை ஐ எஸ் அமைப்பின் தாக்குதல்களை எதிர்கொண்டனர்.
2014ஆம் ஆண்டு ஜூன் மாதம், வடக்கு இராக்கில் ஐ எஸ் அமைப்பு முன்னேற்றிய போது, அந்த நாட்டின் குர்துகளையும் சண்டைக்கு இழுத்தது. இராக்கில் இருந்த குர்திஸ்தான் பிராந்தியத்தின் அரசாங்கம், இராக் ராணுவத்தால் கைவிடப்பட்ட பகுதிகளுக்கு தனது பெஷ்மெர்கா (peshmerga) படைகளை அனுப்பியது.
அதே 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ எஸ் அமைப்பினர் நடத்திய திடீர் அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து பெஷ்மெர்கா படைகள் பின்வாங்கின. மத ரீதியில் சிறுபான்மையினர் வாழ்ந்த பல நகரங்கள் ஐ எஸ் பிடியின் கீழ் வீழ்ந்தன, குறிப்பாக சின்ஜார் (Sinjar) பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கான யசிதிகளைக் கொன்றனர் அல்லது கைது செய்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுக் கூட்டணிப் படை, வடக்கு இராக்கில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அதோடு பெஷ்மெர்காவுக்கு உதவ ராணுவ ஆலோசகர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மூன்று தசாப்தங்களாக துருக்கியில் குர்துக்களுக்கான தன்னாட்சி அதிகாரத்துக்காக துருக்கியில் போராடி வந்த குர்திஸ்தான் வொர்க்கர்ஸ் பார்ட்டிக்கு (PKK) மற்றும் மக்களைப் பாதுகாக்கும் படையான YPG ஆகிய அமைப்புகளும் இப்பணியில் இணைந்தனர்.
2014 செப்டம்பரில் ஐ எஸ் அமைப்பு, வடக்கு சிரியாவில் குர்து மக்கள் வசிக்கும் நகரமான கோபனேவைச் (Kobane) சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அருகிலுள்ள துருக்கி எல்லையைத் தாண்டி வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
துருக்கி, ஐ எஸ் அமைப்பின் துருப்புகள் மீது தாக்குதல் நடத்த ஏதுவான இடத்தில் இருந்த போதும், ஐ எஸ் அமைப்பு மீது அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை. மறுபக்கம், குர்து மக்கள் தப்பிக்கவும் உதவவில்லை.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சுமார் 1,600 பேர் உயிரிழந்த பிறகு, குர்துப் படைகள் கோபனே நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
சிரிய ஜனநாயகப் படை (SDF) என்கிற பெயரில் குர்துகள், பல்வேறு உள்ளூர் அரேபிய ஆயுதக் குழுக்கள் ஒன்றாக இணைந்து போரிட்டனர். அதோடு, அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்கள், வழங்கிய ஆயுதங்கள், ஆலோசனைகள் காரணமாக, மெல்ல ஐ எஸ் படைகள் பல்லாயிரம் கிமீ பின்னோக்கி விரட்டியடிக்கப்பட்டு, துருக்கி எல்லைப் பகுதியை ஓட்டியிருந்த பெரும்பாலான பகுதியை இப்படைகள் கைப்பற்றின.
2017ஆம் ஆண்டு அக்டோபர் மாத வாக்கில், ஐ எஸ் அமைப்பின் தலைநகராகக் கருதப்பட்ட ராகா (Raqqa) நகரம் சிரிய ஜனநாயகப் படைகளால் கைப்பற்றப்பட்டது. ஒருகட்டத்தில் ஐ எஸ் அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வந்த முக்கிய பகுதியான டெய்ர் அல் சோர் (Deir al-Zour) பகுதியையும் எஸ் டி எஃப் படைகள் வென்றெடுத்தது.
2019ஆம் ஆண்டு வாக்கில், சிரியாவில் ஐ எஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கடைசி பகுதியாகக் குறிப்பிடப்பட்ட Baghouz கிராமத்தைச் சுற்றி இருந்த பகுதிகளையும் எஸ் டி எஃப் வென்றெடுத்தது.
நேரடிப் போரில் ஐ எஸ் தோற்றாலும், ஐ எஸ் ஆதரவு மனநிலையில் மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த ஐ எஸ் ஸ்லீப்பர் செல்களை, சிரிய ஜனநாயகப் படைகளே சமாளிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். மறுபக்கம் ஐ எஸ் அமைப்போடு தொடர்புடைய பெண்கள் & குழந்தைகளையும் சமாளிக்க வேண்டி இருந்தது.
2019ஆம் YPG என்றழைக்கப்பட்ட மக்கள் பாதுகாப்புப் படை (Syrian Kurdish Democratic Union Partyயின் ஆயுதமேந்திய படைப்பிரிவு) இல்லாத 32 கிமீ பாதுகாப்பான பகுதி உருவாக்கப்படும் என்றும், அங்கு சிரிய அகதிகள் குடியேறி வாழ்ந்து கொள்ளலாம் என்றும் கூறியது துருக்கி அரசு.
சிரிய ஜனநாயகப் படை அமைப்போ, அமெரிக்கவால் தாங்கள் முதுகில் குத்தப்பட்டதாக தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர். இந்த பிரச்சனைக்குப் பிறகு, சிரிய ஜனநாயகப் படை, சிரிய அரசோடு கை கோர்த்துக் கொண்டது. தன் முழு நிலப்பரப்பையும் தன் கட்டுப்பாட்டில் மீண்டும் கொண்டு வருவதாக சூளுரைத்தது சிரிய அரசு தரப்பு.
துருக்கியின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதத்தினர் குர்து இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். துருக்கி அரசுக்கும், குர்துகளுக்கும் இடையே பல்லாண்டு காலமாக பகை பாராட்டப்பட்டு வருகிறது.
பல தலைமுறைகளாக, குர்து இன மக்கள், துருக்கிய அதிகாரிகளின் கைகளால் கடுமையான தண்டனைகளைப் பெற்று வந்தனர். 1920கள், 1930களில் குர்துக்கள் மறுகுடியமர்த்தப்பட்டனர். குர்து இனப்பெயர்கள், உடைகள் எல்லாம் கூட தடை செய்யப்பட்டன என்றால் நிலைமையை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
குர்திஷ் மொழியின் பயன்பாடு தடைசெய்யப்பட்டது அல்லது கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் குர்து என்கிற இனம் இருந்தது கூட அங்கீகரிக்கப்படாமல் மறுக்கப்பட்டன. குர்து மக்கள் "மலை துருக்கியர்கள்" என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டனர்.
1978ஆம் ஆண்டு, குர்து இன மக்களுக்கு தனியாக ஒரு நாட்டை, துருக்கி உள்ளேயே உருவாக்க அப்துல்லா ஓகாலன் (Abdullah Ocalan) என்பவர் Kurdistan Workers' Party (PKK) என்கிற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்தது. யுத்தச் சத்தம் கேட்கத் தொடங்கியதில் இருந்து, பல்லாயிரக் கணக்கானவர்களின் ரத்தம் சிந்தியது, 40,000க்கும் மேற்பட்டவர்கள் உயிர் காற்றில் கரைந்தது. பல்லாயிரக் கணக்கானோர் புலம்பெயர்ந்துள்ளனர்.
1990களில் PKK அமைப்பு அதன் சுதந்திரக் கோரிக்கையை பின்வாங்கினாலும், கலாச்சார மற்றும் அரசியல் சுயாட்சிக்கும், தன்னாட்சிக்கும் அழைப்பு விடுத்து போராட்டத்தை நடத்தி வந்தது. 2013ஆம் ஆண்டு பல கட்ட ரகசியப் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இருதரப்புகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2015 ஜூலை மாதத்தில், சிரிய எல்லைக்கு அருகிலுள்ள குர்திஷ் நகரமான சுருக்கில் (Suruc) 33 இளம் செயற்பாட்டாளர்கள் தற்கொலைப்படையால் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதளை ஐ எஸ் படைகள் நடத்தியதாகக் கூறப்பட்டது. PKK அமைப்போ, இந்தத் தாக்குதலுக்கு துருக்கி உடந்தை என குற்றம்சாட்டி, துருக்கி அரசின் துருப்புகள் & காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர், தென்கிழக்கு துருக்கியில் நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உட்பட பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சனையைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் (பல நூறு வெகுஜன மக்களும் அடக்கம்) தென் கிழக்கு துருக்கியில் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் மக்கள் தொகையில் குர்துகள் சுமார் 7 முதல் 10 சதவீதம் வரை உள்ளனர். 2011ஆம் ஆண்டில், சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான கிளர்ச்சி தொடங்குவதற்கு முன்பு, பெரும்பாலானவர்கள் டமாஸ்கஸ், அலெப்போ நகரங்களிலும், கோபான், அஃப்ரின், வடகிழக்கு நகரமான கமிஷ்லியைச் (Qamishli) சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்து வந்தனர்.
சிரியாவில் வாழும் குர்து இன மக்கள் நீண்டகாலமாக ஒடுக்குமுறையை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வருகின்றன. 1960களில் இருந்து சுமார் 3,00,000 பேருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. மேலும் குர்து இன மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகள் அரேபியர்களுக்கு வழங்கப்பட்டது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் உருவெடுத்தபோது, முக்கிய குர்திஷ் கட்சிகள் வெளிப்படையாக ஒரு முடிவு எடுப்பதைத் தவிர்த்தன. 2012 ஆம் ஆண்டின் மத்தியில், சிரிய அரசு கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிடுவதில் கவனத்தைக் குவித்துக் கொண்டிருந்த போது, இப்பகுதிகளில் இருந்து தங்கள் படைகளை பின்வலித்துக் கொண்டது. அந்த நேரம் பார்த்து குர்திஷ் குழுக்கள் அப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டன.
2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், டெகாம்ரடிக் யூனியன் பார்ட்டி (PYD) கட்சி உட்பட பல குர்திஷ் கட்சிகள் அஃப்ரின், கோபேன், ஜசிரா ஆகிய மூன்று பகுதிகளில் தங்களின் "தன்னாட்சி நிர்வாகங்கள்" உருவாக்கப்பட்டதாக அறிவித்துக் கொண்டன. 2016ஆம் ஆண்டு மார்ச் மாதவாக்கில், ஐ எஸ் அமைப்பிடமிருந்து கைப்பற்றிய முக்கிய அரபு & துர்க்மென் பகுதிகளை உள்ளடக்கிய "கூட்டாட்சி அமைப்பு" நிறுவப்படுவதாக அறிவித்துக் கொண்டனர். இந்தப் பிரகடனத்தை சிரிய அரசாங்கம், சிரிய எதிர்க்கட்சி, துருக்கி, அமெரிக்கா என பலரும் நிராகரித்தனர்.
நாங்கள் சுதந்திரத்தைக் எதிர்பார்க்கவில்லை, ஆனால் சிரியாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் எந்தவொரு அரசியல் தீர்வும், குர்து இன மக்களின் உரிமைகளுக்கான சட்டப்பூர்வ உத்தரவாதங்கள் மற்றும் குர்திஷ் சுயாட்சிக்கான அங்கீகாரத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று PYD கட்சியினர் வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை மூலமாக அல்லது இராணுவ பலத்தின் மூலமாக சிரிய நிலபரப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்போம் என சிரியாவின் அதிபர் அசாத் உறுதியளித்தார். அவரது அரசாங்கம் குர்திஷ் சுயாட்சி கோரிக்கைகளை நிராகரித்தது, சிரியாவில் உள்ள யாரும் சுதந்திரத்தையோ, கூட்டாட்சியையோ ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் கூறினார் அசாத்.
இராக்கின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதம் வரை குர்துகள் உள்ளனர். இராக்கில் வாழ்ந்து வந்த குர்துகள், அண்டை நாடுகளில் வாழும் குர்துகளை விட அதிக அளவில் தேசிய உரிமைகளை அனுபவித்துள்ளனர், ஆனால் மிக மோசமான அடக்குமுறைக்கும் ஆளாகியுள்ளனர்.
1946ஆம் ஆண்டு, முஸ்தபா பர்சானி என்பவர் இராக் நாட்டில் தங்களிந் சுயாட்சிக்காகப் போராட குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியை (KDP) உருவாக்கினார். அதே மனிதர், 1961ஆம் ஆண்டு முழு ஆயுதப் போராட்டத்தைத் கையில் எடுத்தார்.
1970களின் பிற்பகுதியில், குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் இடங்களில் அரேபியர்களை குடியமர்த்தினர். குறிப்பாக கச்சா எண்ணெய் வளம் மிக்க கிர்குக் போன்ற பகுதிகளில் வாழ்ந்து வந்த குர்து இன மக்கள் கட்டாயப்படுத்தி அப்பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டனர்.
1980களில் இரான் - இராக் போரின் போது இந்தக் கொள்கை வேகம் பிடித்தது. அப்போது குர்து இன மக்கள் இஸ்லாமிய குடியரசுக்கு ஆதரவளித்தனர். 1988ஆம் ஆண்டு சதாம் ஹுசைன் குர்து இன மக்கள் மீது தன் காட்டுமிராண்டித் தனத்தை கட்டவிழ்த்துவிட்டார். ஹலப்ஜா பகுதியில் வாழ்ந்து வந்த குர்து இன மக்கள் மீது ரசாயண ஆயுதத் தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
1991ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடாப் போரில் இராக் தோற்கடிக்கப்பட்ட பிறகு, பர்சானியின் மகன் மசூத் மற்றும் பேட்ரியாட்டிக் யூனியன் ஆஃப் குர்திஸ்தான் என்கிற அமைப்பின் ஜலால் தாலாபானி இனைந்து ஒரு குர்து இன கிளர்ச்சியைக் கையில் எடுத்தனர்.
இந்தப் பிரச்சனை காரணமாக, அமெரிக்கா & அதன் கூட்டாளிகள், வடக்குப் பகுதியில் பறக்க தடை விதிக்க வைத்தது. இது குர்துகள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் KDP மற்றும் PUK அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டன, நாளடைவில் (4 ஆண்டுகளில்) 1994 இல் அவர்களுக்கு இடையே போர் வெடித்தது.
2003ஆம் ஆண்டு, இரு கட்சிகளும் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புடன் இணைந்து சதாமை வீழ்த்தியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டோஹுக், இர்பில், சுலைமானியா மாகாணங்களை நிர்வகிக்க இரு தரப்பும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தது.
மசூத் பர்சானி அப்பிராந்தியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் ஜலால் தாலாபானி இராக்கின் முதல் அரபி அல்லாத தலைவர் ஆனார்.
குர்திஸ்தான் பிராந்தியம் மற்றும் பெஷ்மெர்கா பகுதியில் சுதந்திரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதை இராக் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், அது சட்டவிரோதமானது என்றது.
வாக்களித்த 3.3 மில்லியன் மக்களில் 90%க்கும் அதிகமானோர் பிரிவை ஆதரித்தனர். ஆனால் அதை எல்லாம் இராக் காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை. மாறாக குர்து இன மக்கள் வசமிருந்த பகுதிகளை இராக் அரசுக்கு ஆதரவான படைகள் கையகப்படுத்திக் கொண்டன. கிர்குக் போன்ற கச்சா எண்ணெய் வளமிக்க பகுதிகளை குர்து படைகள் இழந்தது, அவர்கள் தரப்பில் மிகப்பெரிய நஷ்டமாகப் பார்க்கப்பட்டது. இந்த இழப்புகள் மற்றும் பிரச்சனைகளைத் தொடர்ந்து, பர்சானி குர்திஸ்தான் பிராந்தியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
ஆனால் பிரதான கட்சிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பதவி காலியாக இருந்தது, அவருக்குப் பிறகு அவரது மருமகன் நெச்சிர்வான் குர்திஸ்தான் பிராந்தியத்தின் தலைவர் பதவியேற்றார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust