இம்ரான் கான் NewsSense
உலகம்

பாகிஸ்தான் குழப்பம் : அமெரிக்காவின் சதியா? என்ன நடக்கிறது? யார் புதிய பிரதமர்?

இதுவரை பாகிஸ்தானில் ஐந்தாண்டுக் கால ஆட்சியை எந்த பிரதமரும் முழுவதுமாக நிறைவு செய்தது இல்லை. ஆனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவி இழக்கும் முதல் பிரதமர் ஆகிறார் இம்ரான் கான்.

NewsSense Editorial Team

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் போராட்டம்

என்ன நடந்தது?

342 உறுப்பினர்களைக் கொண்டது பாகிஸ்தான் நாடாளுமன்றம்.

நேற்று நள்ளிரவில் இந்த தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பு கடந்த வாரமே நடந்திருக்க வேண்டியது. ஆனால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார் இம்ரான் கான். இந்நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசமைப்பின்படி செல்லாது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் நேற்று காலை நடைபெற வேண்டிய வாக்கெடுப்பு ஒரு வழியாக நள்ளிரவில் நடைபெற்றது. அதில் இம்ரான் கான் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

இதுவரை பாகிஸ்தானில் ஐந்தாண்டுக் கால ஆட்சியை எந்த பிரதமரும் முழுவதுமாக நிறைவு செய்தது இல்லை. ஆனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவி இழக்கும் முதல் பிரதமர் ஆகிறார் இம்ரான் கான்.

அமெரிக்காவின் சதியா?

தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு அமெரிக்கா சதி செய்கிறது என இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். அமெரிக்கா இதை மறுத்தது. ஆனால் சீனா மற்றும் ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்காவுக்குத் தான் ஆதரவு வழங்கவில்லை என்ற காரணத்தால் அமெரிக்கா தன்னை பதவியிலிருந்து நீக்கச் சதி செய்தது என்றார் இம்ரான் கான்.

அதுமட்டும் அல்லாமல் எதிர்க்கட்சிகளும் வெளிநாட்டின் சதியில் இணைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். செம்மறி ஆடுகளை போல ஆட்சியை கவிழ்ப்பதற்கு அவர்கள் பேரம் பேசி வருவதாக தெரிவித்தார். ஆனால் தனது எந்த கூற்றுக்கும் இம்ரான் கான் ஆதாரங்களை அளிக்கவில்லை.


இம்ரான் கான் மட்டுமல்ல அவரின் பிடிஐ கட்சியை சேர்ந்த அனைவரும் இம்ரான் கான் சர்வதேச சதிக்குப் பலியாகிவிட்டார் என்றே கூறினர்.

எதற்காக இந்த தீர்மானம்?

முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் பாகிஸ்தானில் ஊழலை ஒழித்து, பொருளாதாரத்தை மீட்டெடுப்பேன் என்று வாக்குறுதிகளை அளித்து பதவிக்கு வந்தார். ஆனால் அவரால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் இருந்து மீளவில்லை.

அதுமட்டுமல்லாமல் அவர் ஆட்சிக்கு வர உதவிய ராணுவமும் அவரை கைவிட்டுவிட்டது. சில கொள்கை முடிவுகள் மற்றும் உயர்பதவி நியமனங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ராணுவத்திற்கும் இம்ரான் கானுக்கு இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது.

உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, விலை உயர்வு பிரச்னை பாகிஸ்தானையும் கடுமையாக பாதித்தது. ஆனால் பிப்ரவரி மாதம் தனக்கு எதிரான ஒரு அலை உருவாவதை உணர்ந்த இம்ரான் கான், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணத்தை குறைத்தார். இது ஏற்கனவே சரிவில் இருந்த பொருளாதாரத்தை மேலும் சரிவில் தள்ளியது. இந்த வாரத்தில் பாகிஸ்தான் ரூபாயின் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு இதுவரை இல்லாத அளவில் குறைந்தது.

பொருளாதார நெருக்கடியை ஆயுதமாக கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு எதிரான நம்பில்லையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.

இந்தியாவுக்கு இம்ரான் கான் புகழாரம்

இந்த ஒட்டுமொத்த சம்பவத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் கடந்த சில நாட்களாக இம்ரான் கான் இந்தியாவை புகழ்ந்து பேசி வருகிறார் என்பதுதான்.

ஒரு சில தினங்களுக்கு முன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பாராட்டிய இம்ரான் கான், ரஷ்யா மீது அமெரிக்கா தடை விதித்திருந்த போதிலும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குகிறது. அத்தகைய வெளிநாட்டு கொள்கையை கொண்டது இந்தியா என்றார்.

வாக்கெடுப்புக்கு முந்தைய நாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதும் இந்தியாவை புகழ்ந்து பேசியிருந்தார் இம்ரான் கான்.

‘இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தலையிட எந்த நாட்டிற்கும் தைரியம் இல்லை. இந்தியா ஒரு பெருமைமிக்க நாடு ஆனால் இந்தியா குறித்து இப்படி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.

ஷபாஸ் ஷெரிப்

புதிய பிரதமர் யார்?


நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசுக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்காத காரணத்தால் தற்போது எதிர்க்கட்சிகள் கூடி புதிய பிரதமரை தேர்வு செய்யலாம்.

புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கு திங்கட்கிழமையன்று கூடுகிறது நாடாளுமன்றம்.

பாகிஸ்தானில் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள அடுத்த தேர்தல் வரை இந்த புதிய பிரதமர் பதவியில் நீடிப்பார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரிப் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கபட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷபாஸ் ஷெரிப் விரைவில் நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?