இங்கிலாந்து அரசியலை கவனித்து வரும் எவரும் இந்த பூனையைப் பற்றி அறிந்திருக்க கூடும். டௌனிங் தெருவில் நடத்தப்படும் முக்கியக் கூட்டங்கள் மற்றும் ஊடக சந்திப்புகளில் தவறாமல் கலந்து கொள்ளும் லாரி தி கேட் (Larry The Cat)!
டவுனிங் தெருவில் இருக்கும் அரசியல்வாதிகள் போலவே லாரிக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. Chief Mouser to the Cabinet Office என்பது அதன் பதவி.
லாரி பிறந்தது 2007ம் ஆண்டு எனக் கூறப்படுகிறது. 15 பிப்ரவரி 2011ம் ஆண்டு முதல் டௌனிங் தெருவில் வசித்து வருகிறது. எலிகளை துரத்தி பிடிக்கும் அதன் திறமைகளுக்காக Battersea Dogs & Cats Home-ல் இருந்து பிரதமர் இல்லத்துக்கு அழைத்துவரப்பட்டது.
டௌனிங் தெருவுக்கு வந்தது முதலே மிகவும் பிரபலமாக இருக்கிறது லாரி. அதன் முதல் நாளில் ஒரு பத்திரிக்கையாளரின் கையில் கீறியது. இப்போதெல்லாம் மீடியா பழக்கமாகிவிட்டதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் தருவதில்லை.
டௌனிங் தெருவில் இங்கிலாந்து பிரதமர்கள் முக்கிய கூட்டங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டால் நிச்சயமாக ஏதோ ஒரு ஓரத்தில் லாரி படுத்திருப்பதைப் பார்க்க முடியும். சமீபத்தில் ரிஷி சுனக் ஊடகங்களிடன் உரையாற்றிய போது லாரியும் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளையில் மஞ்சள் சாம்பல் நிறம் கலந்த பூனை லாரிக்கு சமூக வலைத்தள கணக்கும் உள்ளது. ஆனால் அது அங்கீகாரமற்றது. அதனை இயக்குபவர் யாரெனத் தெரியாவிட்டாலும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அதனை பின் தொடர்கின்றனர்.
இங்கிலாந்து அரசியலில் நடக்கும் நிகழ்வுகளையும் பிரதமர் செய்யும் தவறுகளையும் லாரி சுட்டிக்காட்டுவதாக இந்த ட்விட்டர் பதிவுகள் கூறுகின்றன
கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பிரதமர் இல்லத்துக்கு வரும் பரிசு பொருட்களை பிரதமரின் வீட்டார் ஆவலுடன் திறந்து பார்த்தால் அது லாரிக்கு வந்ததாக இருக்கும்.
சமீபத்தில் அந்த சமூக வலைத்தள கணக்கு மூலம் நெட்டிசன்களின் கேள்விக்கு லாரி பதில் கூறியிருந்தது வைரலானது.
அதில் "பிரதமர் இல்லத்தில் வசிப்பவர்கள் தற்காலிகமானவர்கள் என்றும் தான் நிரந்தரமானவள்" என்றும் லாரி கூறியிருந்தது. மேலும் தான் பிரதமர் ரிஷி சுனக்கின் பூனை அல்ல என்றும் லாரி கூறியுள்ளது.
மேலும் லண்டனில் தொலைந்த ரிஷி சுனக்கின் பர்ஸை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும் லாரி கூறியுள்ளது.
அரசாங்கத்தின் செல்ல பூனையாக இருந்தாலும் லாரி ஒரு வீரமான பூனை என்பதையும் அடிக்கடி நினைவுபடுத்தும். சில நாட்களுக்கு முன்னர் டௌனிங் தெருவுக்குள் நுழைய முயன்ற ஒரு நரியை லாரி துரத்தும் விடியோ வைரலானது.
டௌனிங் தெருவில் வசிக்கும் இந்த பூனை பிரதமருக்கு சொந்தமானது என பலரும் நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் லாரி தனியாக தான் வசிக்கிறது. அரசு சார்பில் அதற்கு உணவு வழங்கப்படுகிறது.
பிரதமர் ரிஷி சுனக் தற்போது நோவா என்ற கோல்டன் ரெட்ரீவர் நாயை வளர்த்து வருகிறார். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒரு பொமேரியன் நாயை வளர்த்து வருகிறார். இந்த நாய்களை லாரிக்கு பிடிப்பதில்லை.
பிரதமர் இல்லத்துக்கு வருபவர்களை வரவேற்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வது, எலிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது போன்றவை லாரியின் அன்றாட வேலைகள் என்று அரசு வலைத்தளம் கூறுகின்றது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust