ஈராக்: 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்? சாதித்ததும் இழந்ததும் ட்விட்டர்
உலகம்

ஈராக் மீது 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா போர் தொடுத்தது ஏன்? - ஒரு வரலாற்று பயணம்

பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவுக்கு ஆயுதவழியில் உதவ முன்வரவில்லை, சொல்லப் போனால் மறுத்தன. ஆனால் இன்று வரை ஈராக் போரினால் ஏற்பட்ட வடுக்களை பலரால் மறக்க முடியவில்லை.

NewsSense Editorial Team

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (மார்ச் 20ஆம் தேதி) அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிப் படைகள், ஈராக் நாட்டின் மீது போர் தொடுத்தன. சதாம் ஹுசேனின் ஆட்சியைக் கலைத்தது அமெரிக்கா.

ஈராக், பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் அபாயகரமான ஆயுதத்தை வைத்திருப்பதாகக் கூறியது அமெரிக்கா.

அந்த நாடு சர்வதேச சமூகத்துக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அச்சத்தைக் கிளப்பியது. பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவுக்கு ஆயுதவழியில் உதவ முன்வரவில்லை, சொல்லப் போனால் மறுத்தன. ஆனால் இன்று வரை ஈராக் போரினால் ஏற்பட்ட வடுக்களை பலரால் மறக்க முடியவில்லை.

சரி, அமெரிக்கா ஏன் ஈராக் மீது போர் தொடுத்தது?

1990 - 91ஆம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற வளைகுடா போரின் போது, அமெரிக்கா ஒரு பெரிய, பல நாடுகளைக் கொண்ட கூட்டணிப் படைக்குத் தலைமை தாங்கியது. அப்படைகள் தான் குவைத் நாட்டின் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த ஈராக் படைகளை பின்வாங்கச் செய்தன.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் “தீர்மானம் 687” கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானம் ஈராக் நாடு தன்வசம் இருக்கும் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்கள், நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய பெலாஸ்டிக் ஏவுகணைகள் எல்லாவற்றையும் அழிக்க வேண்டும் என ஈராக் நாட்டுக்கு உத்தரவிட்டது.

அதோடு இது போன்ற ஆயுதங்களுக்கு weapons of mass destruction (WMDs) என ஒரு புதிய பெயரையும் கொடுத்தது அத்தீர்மானம்.

1998ஆம் ஆண்டு, ஈராக் நாடு ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத ஆய்வாளர்களுக்கு ஒத்துவைப்பு வழங்க மறுத்தது. அமெரிக்காவும், பிரிட்டனும் போர் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தன.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, நியூ யார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது, அல் கொய்தா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பென்டகனும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அவர்களின் நிர்வாகமும், ஈராக் மீது போர் தொடுப்பது தொடர்பாக திட்டங்களைத் தீட்டினர்.

சதாம் ஹுசேன் தொடர்ந்து அபாயகரமான ஆயுதங்களை உருவாக்கி வருவதாக அதிபர் ஜார்ஜ் புஷ்ஷே கூறினார். இரான், வட கொரியாவைப் போல, ஈராக்கும் ஒரு அபாயகரமான நாடு என பட்டியலிட்டார். கடந்த 2002 அக்டோபர் மாதம், அமெரிக்காவின் ராணுவப் படைகளை ஈராக்குக்கு எதிராக பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது.

ஈராக்குக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு அனுமதியளிக்குமாறு கடந்த 2003ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் உள் துறைச் செயலர் கொலின் பவல் கோரினார். அதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள் மீறப்படுவதைக் (பேரழிவை ஏற்படுத்தும் அபாயகரமான ஆயுதங்களை அதிக அளவில் அழிக்காமல் வைத்திருப்பது மற்றும் பெருமளவில் குவித்து வைப்பது) காரணமாகக் கூறினார்.

கொலின் பவல்.

ஈராக் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன?

2003ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில், ஈராக் நாட்டிடம் நடமாடும் பரிசோதனைக் கூடங்கள் இருப்பதாகவும், அதில் உயிரியல் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறினார் அமெரிக்காவின் முன்னாள் உள்துறைச் செயலர் கொலின் பவல்.

இதே மனிதர் 2004ஆம் ஆண்டு, ஈராக்கிடம் பேரழிவைத் தருவிக்கக் கூடிய பயங்கர ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்ட ஆதாரங்கள், அத்தனை வலுவானதல்ல என்று கூறினார் என்பதும் ஆச்சரியத்துக்குரியது.

ஈராக் நாட்டு ராணுவத்தால் 45 நிமிடங்களுக்குள் ஏவுகணைகள் தயார் செய்யப்பட்டு, பிரிட்டனை இலக்கு வைத்து தகர்க்க முடியும் என பிரிட்டன் கூறியது. இதை எல்லாம் விட, ஈராக் தொடர்ந்து பேரழிவைத் தரக்கூடிய ஆயுதங்களை தயாரித்து வருவது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது என பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரே கூறினார்.

இதற்கெல்லாம் அடிப்படை ஆதாரங்களாக அமைந்தது இரு ஈரானியர்கள் தான். ரசாயணப் பொறியாளரான ரஃபித் அஹ்மத் அல்வான் அல் ஜனாபி மற்றும் உளவுத் துறை அதிகாரி மேஜர் முஹம்மத் ஹரித் ஆகியோர்கள் தான் அந்த இருவர்.

இவர்கள் தான் ஈராக் நாடு தொடர்ந்து பேரழிவைத் தரக்கூடிய ஆயுதங்களைக் குறித்த விவரங்களை உலகுக்கு கூறினர். இவர்களின் சொற்களை அமெரிக்கா, பிரிட்டன் இருவரும் அதிகம் நம்பினர்.

பிற்காலத்தில், இந்த இருவருமே தாங்கள் கூறியது திரிக்கப்பட்ட விவரங்கள் என்றும், சதாம் ஹுசேனை ஈராக்கில் இருந்து விரட்டவே அப்படிக் கூறினர் என்றும் ஒப்புக் கொண்டனர் என்கிறது பிபிசி வலைதளம்.

முருக கடவுள், நெற்றித் திலகம் - இந்து பண்பாட்டை பிரதிபலிக்கும் ஈராக் யசீதி கலாசாரம்

போர் உதவிகள்:

பிரிட்டன், ஆஸ்திரேலியா, போலாந்து போன்ற நாடுகள் உட்பட மொத்தம் 30 நாடுகள் ஈராக்குக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு உதவியதாக பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிரிட்டன் நேரடியாக 45,000 துருப்புகளையும், ஆஸ்திரேலியா 2,000 துருப்புகளையும், போலாந்து 194 சிறப்புப் படை வீரர்களையும் களத்தில் இறக்கியது. குவைத் தன் நாட்டின் எல்லையில் இருந்து படைகளைத் திரட்டி, ஒருங்கிணைத்து தாக்குதலைத் தொடங்க அனுமதியளித்தது.

ஸ்பெயின் & இத்தாலி போன்ற நாடுகள் ராஜ ரீக ரீதியிலான உதவிகளைச் செய்து வந்தது. இவர்கள் அனைவருமே ஈராக் பெரிய அளவில் பேரழிவைத் தருவிக்கும் ஆயுதங்களைக் குவித்து வருவதாக நம்பினர்.

ஆதரவு கொடுக்காத முக்கிய நாடுகள்:

அமெரிக்கா தான் ஈராக்குக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதனுடைய அண்டை நாடுகளான கனடாவும், மெக்சிகோவும், ஈராக் நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் முன்னெடுப்புக்கு ஆதரவளிக்கவில்லை. அதே போல ஜெர்மனி & பிரான்ஸ் ஆகிய நாடுகளும் ஆதரவளிக்கவில்லை.

ஈராக் விவகாரத்தில் ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளும் தலையீடும், மிக மோசமான தீர்வாக அமையலாம் என பிரான்ஸ் நாட்டின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் டாமினிக் டெ வில்லெபின் கூறினார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

துருக்கி நாடு தன் விமானப் படைத் தளத்தை ஈராக் நாட்டுக்கு எதிரான போரில், அமெரிக்க கூட்டணி நாடுகள் பயன்படுத்த அனுமதியளிக்கவில்லை. அதே போல செளதி அரேபியாவும் ஈராக் போருக்கு அமெரிக்க கூட்டணிக்கு ஆதரவளிக்கவில்லை.

இணையும் இரான் - செளதி அரேபியா: உலக சக்தியாக உருவெடுக்கும் சீனா - அமெரிக்கா நிலை என்ன?

போரில் நடந்தது என்ன?

2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி பொழுது புலர்ந்த போது ஆபரேஷன் ஈராகி ஃப்ரீடம் தொடங்கியது. 2.95 லட்சம் படைத் துருப்புகளோடு அமெரிக்க கூட்டணி படைகள், குவைத் வழியாக ஈராக் நாட்டுக்குள் நுழைந்தனர்.

ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் 70,000 குர்திஷ் பெஷ்மெர்கா ஆயுதமேந்தியப் படை வீரர்கள் ஈராக் படைகளை எதிர்கொண்டனர். 2003ஆம் ஆண்டு மே மாதவாக்கில், ஈராக் நாட்டு ராணுவம் தோற்கடிக்கப்பட்டு, ஆட்சியில் இருந்து சதாம் ஹுசேன் தூக்கி எறியப்பட்டார். சதாம் தப்பி தலைமறைவானார். அவரைக் கண்டுபிடித்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

போர் எல்லாம் நடந்து முடிந்த பிறகு, ஈராக் நாட்டில் பேரழிவைத் தரக்கூடிய அபாயகரமான ஆயுதங்கள் எதையும் எவரும் கண்டுபிடிக்கவில்லை.

2004ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. ஈராக்கில் வாழ்ந்து வந்த ஷியா மற்றும் சன்னி பிரிவினர்களுக்கு மத்தியில் போர் தீ போலப் பரவியது. 2011ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஈராக் நாட்டிலிருந்து பின்வாங்கின.

இந்தப் போரில் சுமார் 4.6 லட்சம் பேர் உயிரிழந்து இருக்கலாம், சுமார் 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் செலவழிக்கப்பட்டு இருக்கலாம் என சில மதிப்பீடுகளில் வெளியாயின.

இந்தப் போரில் யார் எதை இழந்தார்களோ இல்லையோ, அமெரிக்க உளவுத் துறையின் தகவல்கள் மீதான நம்பிக்கையை பல நாடுகளும் இழந்தன. இன்று கூட அமெரிக்க உளவுத் துறையிலிருந்து ஏதேனும் ஒரு தகவல் வந்தால், அதை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என நாடுகளும் கேள்வி எழுப்புவதே அதற்கு சாட்சி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?