ஜப்பான்: ராணுவ பாலியல் விடுதிகள் டு இந்தோனேசியர்கள் அடிமைத்தனம் - ஒரு சுவார்ஸ்ய வரலாறு! Twitter
உலகம்

ஜப்பான்: ராணுவ பாலியல் விடுதிகள் டு இந்தோனேசியர்கள் அடிமைத்தனம் - ஒரு சுவாரஸ்ய வரலாறு!

இதே காலகட்டத்தை ஒட்டி (1871ஆம் ஆண்டு) ஜப்பானிய தேசிய ராணுவம் கட்டமைக்கப்பட்டது. ஜப்பான் ஆண்கள் அனைவருக்கும் 3 ஆண்டு ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டது. 1889ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜப்பானிய அரசியலமைப்புச் சட்டத்தில், அந்நாட்டு அரசருக்கு அதீத மரியாதை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

எல்லா சாம்ராஜ்ஜியங்களும் ஒரு காலகட்டத்தில் தன் உச்சபட்சப் புகழைத் தொட்டு உலகின் மிகப்பெரிய சக்தியாக வலம் வரும். அப்படி ஜப்பான் சாம்ராஜ்ஜியம் உலக அளவில் கொடிகட்டிப் பறந்த காலம் என்றால் 1868 முதல் 1945 வரை எனலாம்.

அந்த காலகட்டத்தில் ஜப்பான் செய்த மோசமானக் காரியங்களைப் பட்டியல் போட்டால், அவர்களுக்கும் ஜெர்மானிய நாஜிப்படைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஈவு இரக்கமற்ற பல செயல்களை அரங்கேற்றியுள்ளது ஜப்பான் சாம்ராஜ்ஜியம்.

அப்படி இவர்கள் செய்த காரியங்கள் தான் என்ன?

ஜெர்மனியின் நாஜிப் படைகள் செய்த அட்டுழியங்கள் வெளி உலகுக்குத் தெரிய வந்தது போல, ஜப்பான் சாம்ராஜ்ஜியம் செய்த மோசமான காரியங்கள் ஏன் அதிகம் வெளி வரவில்லை..?

என்கிற பல கேள்விகளுக்கு இந்தக் கட்டுரையில் விடை காணலாம்.

இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பே உங்கள் இதயத்தை திடப்படுத்திக் கொள்ளுங்கள். ஜப்பானின் கருப்புப் பக்கங்களை புரட்டுவோம்

ஜப்பானும் தொடக்க கால சாம்ராஜ்ஜியங்களூம்

இன்று வரை ஜப்பானில் அரசர் என ஒருவர் இருக்கிறார் என்கிற போது, ஜப்பான் கலாச்சார ரீதியாக அரசர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஜப்பானிய புராணங்களின் படி, ஜிம்மு என்கிற முதல் பேரரசர் சூரிய கடவுளின் வழித்தோன்றலாக வந்தவராகவும், கிமு 660ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி, ஜப்பானில் அரசராக முடிசூட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அது தான் இன்றுவரை ஜப்பானின் நேஷனல் ஃபவுண்டேஷன் டே-வாக கொண்டாடப்படுகிறது.

அதே ஜிம்மு என்கிற அரசர் தான் மனிதர்கள், ஆவி, அரசு, இயற்கையை இணைக்கும் சங்கிலிக் கன்னியாக கருதப்பட்டார். அவரையும், அவரது சந்ததிகளையும் ஜப்பானியர்கள் மதிப்பிற்குரியவர்களாகக் கருதினர்.

ஆனால், 12ஆம் நூற்றாண்டில் ஷொகுன்ஸ் என்றழைக்கப்பட்ட ராணுவ சர்வாதிகாரிகளின் கைகளுக்கு ஜப்பான் சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரம் மாறியது.

15ஆம் நூற்றாண்டில் ஜப்பான் பல்வேறு மாகாணங்களாகப் பிரிந்தன. 17ஆம் நூற்றாண்டில் தொகுகாவா ஷொகுன் (Tokugawa shogun) என்பவர் ஜப்பானுக்குள் நடந்த சண்டை மற்றும் சச்சரவுகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வர, கடும் சமூகக் கட்டுப்பாடுகளைக் கொண்டு அமைதியை நிலைநாட்டினார்.

அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு ஜப்பான் வெளி உலகத் தொடர்பு பெரிதாக இல்லாமல் தனிமையாகவே இருந்தது. 1853ஆம் ஆண்டு மேத்தியூ பெர்ரி என்கிற அமெரிக்கர், ஜப்பானிய துறைமுகங்களளை தங்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கோரினார்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம், சீனாவை உலகுக்கு திறந்து விடக் கட்டாயப்படுத்தி, ஆட்சி செய்யத் தொடங்கியதை ஜப்பானியர்கள் உணர்ந்து இருந்தனர்.

எனவே அமெரிக்காவை எதிர்த்துச் சண்டை போடாமல், அவர்களோடு இணக்கமாகப் போக முடிவு செய்தனர்.

தொடக்கத்தில், தங்கள் நாட்டை மற்றவர்களுக்கு திறந்து விட்டதில் வருத்தம் இருந்தாலும், ஜப்பானியர்கள் புதிய தொழில்நுட்பங்களை மேற்குலக நாடுகளிடமிருந்து பெறத் தொடங்கினர். மெல்ல ஜப்பான் நவீனமயமாகத் தொடங்கியது.

மெய்ஜி சாம்ராஜ்ஜியம்

1868ஆம் ஆண்டு ஷொகுன்கள் ஒழிக்கப்பட்டு, புதிதாகப் பொறுப்பேற்ற அரசர் மெய்ஜியிடம் முழுமையாக அதிகாரம் வந்தடைந்தது.

மெய்ஜி என்றால் “ஞானம் பெற்ற" என்று பொருளாம். இந்த சாம்ராஜ்ஜியத்தின் காலத்தில் தான் ஜப்பான் தன்னுடைய பாரம்பரிய மதிப்புகளையும், நவீன முன்னேற்றங்களையும் ஒருங்கே கையில் எடுத்து வளர்ந்தது.

இந்த காலகட்டத்தில் தான் ஜப்பானியர்கள் உலகம் முழுக்கப் பயணித்து, ரயில்வே, தகவல் பரிமாற்றத்துக்குத் தேவையான டெலிகிராஃப் சாதனங்களை எல்லாம் ஜப்பானுக்குக் கொண்டு வந்தனர்.

இதே காலகட்டத்தை ஒட்டி (1871ஆம் ஆண்டு) ஜப்பானிய தேசிய ராணுவம் கட்டமைக்கப்பட்டது. ஜப்பான் ஆண்கள் அனைவருக்கும் 3 ஆண்டு ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டது.

1889ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜப்பானிய அரசியலமைப்புச் சட்டத்தில், அந்நாட்டு அரசருக்கு அதீத மரியாதை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

இதெல்லாம் பிற்காலத்தில் ஜப்பான் அரங்கேற்றவிருந்த இனப்படுகொலை, போர் அட்டுழியங்களுக்கு நல்ல அடித்தளமாக அமைந்தன.

வலுவான நாடாக உருவெடுத்த ஜப்பான்:

1870களிக் இருந்தே ஜப்பானுக்கு கொரியா மீதும், அந்நாட்டு இயற்கை வளங்கள் மீதும் ஒரு கண் இருந்தது. ஆனால் கொரியாவோ சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

1894ஆம் ஆண்டு சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையில், கொரியா விவகாரத்தில் மோதல் வெடித்தது. முதலாம் சீன - ஜப்பானிய போர் மூண்டது.

ராட்சத மனித பலத்தோடு போருக்குச் சென்ற சீன ராணுவமே வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என பலரும் கணித்த போது, தனது அதி நவீன படை வியூகங்கள், ஆயுதங்களால் ஜப்பான் சிறப்பாக போரிட்டு வெற்றி வாகை சூடியது.

சீனர்கள் அமைதிக்காக Treaty of Shimonoseki உடன்படிக்கையில் கையெழுத்திட்டு பெருவாரியான நிலத்தை ஜப்பானுக்கு கொடுத்தனர்.

கொரிய அரசி ஜப்பானின் ஆளுமையைக் குறைக்க ரஷ்யாவிடம் உதவி பெறுவதாகக் கருதப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானின் கொலைகார கும்பல்களும், கொரிய சதிகாரர்களும் இணைந்து 1895ஆம் ஆண்டு அந்தக் கொரிய அரசியையும் தீர்த்துக் கட்டினர்.

அப்போது ரஷ்யாவை ஒரு அச்சுறுத்தலாகவே பார்த்தது ஜப்பான், மறுபக்கம் ஒட்டுமொத்த ஆசிய கண்டத்திலும் தன் அதிகாரத்தைப் நிலைநாட்டும் எண்ணத்தில் இருந்தது ஜப்பான்.

1904ஆம் ஆண்டு வாக்கில், கொரியாவில் தன் அதிகாரத்தை ரஷ்யா ஏற்றுக் கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து, ஜப்பான் ரஷ்யாவோடும் போருக்குச் சென்றது.

இந்த முறையும் ரஷ்யாவின் பிரம்மாண்டப் படையிடம் ஜப்பான் தோற்றுப் போகும் என பலரும் ஆரூடம் கூறினர். ஆனால் ஜப்பான் ரஷ்யாவைத் தோற்கடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இப்படி இரு பெரிய படைகளை அடுத்தடுத்து தோற்கடித்ததன் காரணமாக ஜப்பான் ஒரு வலிமையான நாடாகவும், தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ராணுவமாகவும் உலக அரங்கில் மிளிரத் தொடங்கியது.

சீனாவில் ஜப்பானியர்களின் அட்டுழியங்கள்

சீனாவின் மஞ்சூரியா பகுதியில் ரஷ்யா கட்டி இருந்த ரயில் தடங்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்டது ஜப்பான்.

இருப்பினும் ஜப்பானுக்கு ஆசை அடங்கவில்லை. ஒட்டுமொத்த சீன பகுதியையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர விரும்பியது.

1912 ஆம் ஆண்டு க்விங் சாம்ராஜ்யம் சரிந்த பின் சீனாவில் ஓர் அரசியல் நிலையற்றதன்மை ஏற்பட்டது. 1928ஆம் ஆண்டு ஹிரோஹிடோ (மெய்ஜியின் பேரன்) ஜப்பானின் கிரீடத்தைக் கைப்பற்றினார்.

1931ஆம் ஆண்டு மஞ்சூரியா பகுதியில், ஜப்பானின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ரயில் வழித்தடத்துக்கு அருகே ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி, அப்பகுதியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ஜப்பான்.

அப்பகுதிக்கு மஞ்சுகுவோ என்று பெயரிட்டு, க்விங் சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஒருவரை பொம்மை அரசராக நியமித்து ஜப்பான் ஆட்சி செய்து வந்தது.

அப்போது, சீன நிலப்பரப்பில் ஜப்பான் ஆதிக்கம் செலுத்துவதை தொடர்ந்து, லீக் ஆஃப் நேஷன்ஸ் என்று அழைக்கப்பட்ட, உலக அமைதியை வலியுறுத்தும் அமைப்பு கூட ஜப்பானை கண்டித்தது. அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் ஜப்பான் இல்லை. மேற்கொண்டு ஜப்பான் புதிய நிலப்பரப்புகளை கைப்பற்றி தன் ராஜ்யத்தில் இணைத்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஷாங்காய் மீதும் சில பல காரணங்களை கூறி ஜப்பான் தாக்குதலை நடத்தியது.

அது மிகப்பெரிய சர்வதேச பிரச்சனையாகி ‘சீஸ் பையர்’ வரை சென்றடைந்தது.

இப்படி பல்வேறு காரணங்களால், 1937ஆம் ஆண்டு இரண்டாவது சீன ஜப்பானிய போர் மூண்டது. இந்த காலகட்டத்தில் தான் ஜப்பான் மிக மோசமான போர் குற்றங்களைச் செய்தனர்.

சீனர்களை ஒரு மனிதனாகக் கூடப் பார்க்காமல் மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவது, அடிப்படை மனித உரிமைகளைக் கூட மதிக்காமல் உணவு, குடிநீர் கூட வழங்காமல் பட்டினி போட்டது, பெண்களை வன்புணர்ந்து கொன்று குவித்தது என ஜப்பான் செய்த கொடூரங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இரண்டாம் சீன - ஜப்பானிய போரில், ஜப்பான் நான்கிங் (இன்று சீனாவில் இருக்கும் இந்தப் பகுதி நான்ஜிங் என்றழைக்கப்படுகிறது) என்கிற பகுதிக்குச் சென்றது. அந்நகரம் தான் அப்போது சீனாவின் தலைநகராக இருந்தது.

1937ஆம் ஆண்டு டிசம்பர் மத்தியிலேயே நான்கிங், ஜப்பானின் வசமானது.

முதல்கட்டமாக போரில் பிடிபட்ட சீன வீரர்கள் அனைவரையும் கொன்று குவித்தது ஜப்பான் ராணுவம். அப்போது ஜப்பான் ராணுவத்தை தலைமை தாங்கி வழிநடத்தியது ஜப்பானின் அரசர் ஹிரொஹிடோவின் குடும்பத்தைச் சேர்ந்த யசுஹிகோ அசாகா.

இதில் சுமார் 3 லட்சம் சீனர்கள் கொன்று குவிக்கப்பட்டு இருக்கலாம் என பல்வேறு வலைதளங்கள் சொல்கின்றன.

இரண்டு ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் யார் முதலில் 100 சீனர்களை தங்கள் வாள் மூலம் கொல்கிறார்கள் என போட்டி வைத்து கொன்றதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் ஏதோ விளையாட்டுப் போட்டியில் வெல்வது போல ஜப்பான் தரப்பில் பார்க்கப்பட்டது. தொடர்ந்து ஜப்பான் ராணுவத்திடம் பிடிபடும் சீன வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

அடுத்து Rape of Nanking என மனித வரலாற்றின் கருப்புப் பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் சம்பவம் அரங்கேறியது. சுமார் 80,000 பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ஜப்பானிய ராணுவத்தால் வன்புணரப்பட்டனர். அதையும் தாண்டி உயிரற்று இருந்த உடல்களும் கடுமையாக தாக்கப்பட்டு சிதைக்கப்பட்டன.

தொழிலாளர் சுரண்டல்:

ஜப்பான் தன் சாம்ராஜ்ஜியத்தை அசுர வேகத்தில் விரிவாக்கம் செய்து வந்த போது, ஜப்பானிய படைகளுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வது, விநியோகிப்பது போன்ற அதீத உடல் உழைப்பைக் கோரும் பணிகளுக்கு, ஆசியாவிலிருந்து பலரும் வலுக்கட்டாயமாக வேலை பார்க்க வைத்தது ஜப்பான்.

உதாரணத்துக்கு, இந்தோனேசியாவில் இருந்து ஜப்பானிய சுரங்கங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்கென சுமார் 1 கோடி பேர் வேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அப்படி கட்டாய உடல் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட எளிய மக்களுக்கு தேவையான உணவு கூட வழங்கப்படாமல் பசி பட்டினியிலும், உடல் சோர்விலும், நோய்வாய்ப்பட்டும் உயிரிழந்ததாக ஆல் தட்ஸ் இண்டிரஸ்டிங்.காம் என்கிற வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது.

ஜப்பான் சாம்ராஜ்ஜிய படையால் கைது செய்யப்பட்ட எதிரி நாட்டு வீரர்களை உயிரோடு வைத்திருந்து தேவையான விஷயங்களைச் செய்வதற்கு பதிலாக, அவர்களைக் கொன்று குவிப்பது எளிதான விஷயம் என்கிற ஒரே காரணத்துக்கு எல்லாம் போர் கைதிகளை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்திருக்கிறது ஜப்பான் தரப்பு.

ஜப்பான் தொழில்நுட்பத்திலும் மருத்துவத்திலும் முன்னேற, சில போர் கைதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட பொது மக்கள் யூனிட் 731 என்கிற பெயரில் இயங்கி வந்த பரிசோதனைக் கூடங்களில், மிக மோசமான அறிவியல் ஆய்வுகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

இதில், ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போதே, அவர் உடலில் பிளேக் நோய் உட்செலுத்தப்பட்டு, அவருடைய நெஞ்சைப் பிளந்து பார்ப்பது போன்ற கொடூரமான மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் அடக்கம்.

ஜப்பானின் அட்டுழியங்கள் பொதுவெளிக்கு அதிகம் வராதது ஏன்?

ஜப்பானைப் பொறுத்த வரை அரசர் தான் எல்லாம். எனவே போரைக் காரணம் காட்டி, ஜப்பானின் அரசருக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டால், அந்நாட்டை நிர்வகிக்க முடியாது என அமெரிக்க ஜெனரல் டக்லஸ் மெக் ஆர்தர் கருதியதாக சில வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளன.

அதே போல, பல்வேறு ஜப்பானிய ராணுவ உயர் அதிகாரிகள், அமெரிக்காவுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் போர் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

உதாரணத்துக்கு, ஷிரோ இஷி என்கிற ஜப்பானிய ராணுவ மருத்துவ அதிகாரி யூனிட் 731ல் நடக்கும் பரிசோதனைகள் தொடர்பான விவகாரங்களை, முழுமையாக, தரவுகளோடு அமெரிக்காவுக்குக் கொடுக்கும் வரை பிரச்சனையில் இருந்து பாதுகாப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக சில குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இதெல்லாம் போக, பூகோள ரீதியில் ஜப்பான் ரஷ்யாவுக்கு மிக அருகில் இருக்கும் நாடு என்பதாலும் அமெரிக்க, ஜப்பான் செய்த போர் குற்றங்களை பெரிய அளவில் வெளி உலகுக்கு கொண்டு வரவில்லை என்றும் கூறபடுகிறது.

இன்று வரை ஜப்பான் தன் போர் குற்றங்களை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதில்லை என்பது போரினால் பாதிக்கப்பட்ட தரப்பினரையும், மனிதத்தை நேரிப்பவர்களையும் மேலும் வருத்தமடையச் செய்யும் செய்தி. இனியாவது போர் இல்லாத உலகை உருவாக்க முயல்வோம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?