Jeff Bezos Twitter
உலகம்

Amazon : ரிவர்ஸ் கியரில் Jeff Bezos - அமேசான் பங்குகள் சரிய காரணம் என்ன?

Gautham

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகள் வெறிபிடித்தாற் போல பங்குச் சந்தைகளில் விலை ஏற்றம் காணத் தொடங்குவதற்கு முன், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸ் தான் உலகின் நம்பர் 1 பணக்காரராக வலம் வந்தார்.

சொல்லப் போனால், அதிகாரப்பூர்வமாக 20ஆம் நூற்றாண்டிலிருந்து 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பைத் தொட்ட முதல் மனிதர் அவர்தான். அதோடு நிற்காமல், 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைத் தொட்ட இருவரில் ஜெஃப் பிசாஸும் ஒருவர்.

பிறகு தன் மனைவி மெகென்ஸி பிசாஸை விவாகரத்து செய்த காரணத்தால் கணிசமான அமேசான் நிறுவனப் பங்குகளை மெகென்ஸி பெற்றார். அதன் பிறகும் உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக ஜெஃப் பிசாஸ் தொடர்ந்தார் .

ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த மனிதர், தற்போது சோதனை மேல் சோதனையை எதிர்கொண்டு வருகிறார். ஜெஃப் பிசாஸின் ஒட்டுமொத்த சொத்து பத்துக்களில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் தான் கணிசமான பங்கு வகிக்கின்றன. அதன் விலை இறக்கம் ஜெஃப் பிசாசின் சொத்து மதிப்பை சடசடவென சரித்திருக்கிறது.

கடந்த நவம்பர் 2021 காலகட்டத்தில் அமேசான் நிறுவனப் பங்குகள் 188 டாலரைத் தொட்டு வர்த்தகமாயின. ஆனால் தற்போது அதே அமேசான் நிறுவனத்தில் பங்குகள் சுமார் 103.4 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த 12 மாத காலத்தில் மட்டும், தன் உச்ச விலையிலிருந்து சுமார் 38 சதவீதம் சரிந்திருக்கிறது அமேசான் பங்குகளின் விலை.

கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் 136.4 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த அமேசான் பங்குகளின் விலை, கடந்த 6 வார காலத்துக்குள் கிட்டத்தட்ட 24 சதவீதம் விலை சரிந்திருக்கிறது. இது அப்படியே ஜெஃப் பிசாசின் சொத்து சிதறலுக்கும் வழிவகுத்திருக்கிறது.

2022ஆம் ஆண்டு (அக்டோபர் 29ஆம் தேதி நிலவரப்படி) அதிக அளவிலான சொத்து பத்துக்களை இழந்த பில்லியனர்கள் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 87 பில்லியன் டாலர் இழப்போடு முதலிடத்திலும், சங்பெங்க் சாவ் 72 பில்லியன் டாலர் இழப்புடன் இரண்டாவது இடத்திலும், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் 66 பில்லியன் டாலர் இழந்து 3ஆவது இடத்திலும், ஜெஃப் பிசாஸ் 65 பில்லியன் டாலர் இழந்து 4ஆவது இடத்திலும் இருக்கிறார்கள்.

இந்த ஆண்டில் இதுவரை அதிக சொத்து பத்துக்களைச் சேர்ந்த நபர்கள் பட்டியலில் 48 பில்லியன் டாலர் சொத்து அதிகரித்து எவரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த கெளதம் அதானி. சரி, சரி... ஜெஃப் பிசாஸ் பிரச்சனைக்குத் திரும்புவோம்.

Jeff Bezos

ஏன் ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது..?

சமீபத்தில் அமேசான் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வெளியாயின. அதில் அமேசான் 127.1 பில்லியன் டாலருக்கு விற்பனை வருவாயை ஈட்டி இருப்பதாகவும், கடந்த இரு காலாண்டுகளில் நஷ்டத்தை எதிர்கொண்டு, இந்த காலாண்டில் 2.9 பில்லியன் டாலர் லாபம் ஈட்டி இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இது பகுப்பாய்வாளர்களின் கணிப்பை விட சற்றே குறைவுதான்.

இதை எல்லாம் விட முக்கியமான, அமேசான் பங்கு விலையை பாதித்த விஷயம் என்னவெனில், அடுத்த காலாண்டில் (2022ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டில்) விற்பனை 140 - 148 பில்லியன் டாலராக இருக்கலாம் என கணித்திருக்கிறது அமேசான் நிறுவன தரப்பு. ஆனால் சந்தையில் உள்ள பகுப்பாய்வாளர்களோ 155 பில்லியன் டாலர் வரை விற்பனை ஆகலாம் என கணித்திருந்தனர்.

இப்படி சந்தை கணிப்பை விட குறைவான அளவுக்கு விற்பனை ஆகலாம் என அமேசான் நிறுவனமே முன் வந்து கூறி இருந்தது அமேசான் பங்கு வைத்திருப்பவர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி, ஒட்டுமொத்த அமேசான் பங்கு விலை சரிவுக்கும் வழிவகுத்துவிட்டது.

உலகின் பல நாட்டு பொருளாதாரங்களில் நிலவும் பணவீக்கப் பிரச்னைகள், அதிகரித்து வரும் எரிபொருள் விலை, சரியும் டிமாண்ட்... என பல காரணிகள் அமேசான் நிறுவனத்தைப் பாதித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமேசான் போன்ற இ காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள், தற்போது மீண்டும் சில்லறை வணிகக் கடைகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த விற்பனை சரிவு ஏற்பட்டிருப்பதாக சில செய்தி வலைத்தளங்கள் குறிப்பிடுகின்றன.

Amazon

இது போல வேறு ஏதேனும் பிரச்னைகள் எழுந்து அது பங்கு அமேசான் நிறுவனத்தின் பங்கு விலையைப் பாதித்தால், ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு இன்னும் சரிந்து, இந்தியாவின் கெளதம் அதானி உலகின் 3ஆவது பெரிய பணக்காரர் ஆக வாய்ப்பு இருப்பதையும் இங்கு மறுப்பதற்கு இல்லை. ஏற்கனவே கெளதம் அதானிக்கும் (125 பில்லியன் டாலர்), ஜெஃப் பிசாஸுக்கும் (127 பில்லியன் டாலர்) பெரிய வித்தியாசம் இல்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஜெஃப் பிசாஸிடம் அமேசான் நிறுவனத்தின் 996 மில்லியன் பங்குகள் இருக்கின்றன. அவரது முன்னாள் மனைவியிடம் 293 மில்லியன் பங்குகள் இருப்பதாக என்டிடிவி வலைதளம் சொல்கிறது.

ஜெஃப் பிசாஸைப் போலவே, அமேசான் பங்குகளின் விலை வீழ்ச்சி மெக்கென்ஸியின் சொத்து மதிப்பையும் கணிசமாக பாதித்து இருப்பதைப் பார்க்க முடிகிறது. 2022ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 31 பில்லியன் டாலர் சரிந்திருப்பதாக ப்ளூம்பெர்க் வலைதளம் சொல்கிறது. இப்போது மெகென்ஸியின் சொத்து மதிப்பு 24.6 பில்லியன் டாலராக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?