கொரியப் போர் வெற்றியைக் கொண்டாடும் ஆண்டுவிழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவுக்கு எதிரான ராணுவ ரீதியிலான மோதலுக்கு வடகொரியா முழுமையாகத் தயாராக உள்ளது எனக் கூறியுள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி முகமையான கே சி என் ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் தான் வட கொரியா தன் ஏழாவது அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்த நேரத்தில் கிம் ஜாங் உன் போர் குறித்துப் பேசி இருப்பது சர்வதேச அளவில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியா எப்போது வேண்டுமானாலும் தன் ஏவுகணைச் சோதனையை மேற்கொள்ளும் எனக் கடந்த மாதம் தான் அமெரிக்கா எச்சரித்ததை இங்கு நினைவுகூரத்தக்கது.
கடைசியாக வட கொரியா 2017ஆம் ஆண்டு தன் அணு ஆயுத சோதனையை நடத்தியது. இப்போது வட கொரிய அதிபரின் இந்த அதிரடி பேச்சால் ஒட்டுமொத்த கொரிய தீபகற்பத்திலேயே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த 2022ஆம் ஆண்டில் இதுவரை வட கொரியா 31 ஏவுகணைப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. வடகொரிய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கை இது. கடைசியாக 2019ஆம் ஆண்டு முழுக்க 25 ஏவுகணைப் பரிசோதனைகளை மேற்கொண்டது என அமெரிக்காவின், வட கொரியாவுக்கான சிறப்புப் பிரதிநிதி சுங் கிம் பிபிசி ஊடகத்திடம் கூறியுள்ளார்.
வட கொரியாவின் ஆயுதப் பரிசோதனைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும் கடந்த ஜூன் மாதம் 8 ஏவுகணைகளை ஏவியது.
1950 - 53 காலகட்டத்தில் நடைபெற்ற கொரியப் போர், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்தாலும், அமெரிக்காவுக்கு எதிரான அப்போரில் தாங்களே வென்றதாகக் கோருகிறது வட கொரியா. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27ஆம் தேதியை வெற்றி தினமாகக் கொண்டாடி வருகிறது வடகொரியா. சமீபத்தில் நடந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் ராணுவ அணிவகுப்புகள், ஆயுதங்கள், ஆடல் பாடல் எனக் கோலாகலமாகக் கொண்டாடியது வடகொரியா.
விழாவில் பேசிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவின் அணு ஆயுத அச்சுறுத்தலால்தான் வடகொரியா அதிவிரைவாக தன் சுய பாதுகாப்பை அதிகரிக்கும் வரலாற்றுப் பணியை மேற்கொள்ள வேண்டி வந்தது. வட கொரியாவின் வழக்கமான ராணுவ நடவடிக்கைகளை, ஒருவிதமான தூண்டுதல் என அமெரிக்கா தவறாக சித்தரித்தது என்றும் கூறினார்.
வட கொரியா தரப்பிலிருந்து வரும் அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க, தென் கொரியா தன் எதிர் திட்டத்தைப் புதுப்பிக்க உள்ளதாக பிபிசி தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. வட கொரியா உறுதியாக தாக்குதல் நடத்தும் என்று தெரிய வந்தால், முன்னெச்சரிக்கை தாக்குதல் (Precautionary Strike) நடத்தத் தேவையானவற்றை அதிகரிக்க உள்ளதாக பிபிசியிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் இதற்கும் கிம் ஜாங் உன் பதிலடி கொடுத்திருக்கிறார். தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk-yeol) தலைமையிலான அரசு மற்றும் ராணுவம் வட கொரியா மீது முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்தினால், அவர்கள் அழிக்கப்படுவார்கள் என அதே வெற்றி தின கொண்டாட்டத்தில் கூறியுள்ளார் கிம் ஜாங் உன்.
பத்தாண்டுகளுக்கு முன் 'கில் செயின்' திட்டம் விவரிக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி வட கொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அந்நாட்டின் அதி உயர் தலைமை மீது தாக்குதல் நடத்துவதே நோக்கம். சில பகுப்பாய்வாவார்களோ, இது இரு நாடுகளுக்கு இடையில் ஆயுத போட்டியை ஊக்குவிக்கும் என எச்சரித்தனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust