இலங்கைத் தீவில் தமிழர் வாழும் பகுதிகள் முழுவதும் ’கருப்பு ஜூலை’ படுகொலைகளில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழீழப் பகுதியான வடக்கு, கிழக்கு இலங்கையிலும் மலையகத் தமிழர் பகுதிகளிலும் கொழும்பு நகரிலும் கருப்பு ஜூலை அஞ்சலி நிகழ்வுகள் பரவலாக நடத்தப்பட்டன.
ஆண்டுதோறும் தமிழர் பகுதிகளில் தமிழர்களால் நடத்தப்பட்டுவரும் இந்த ’கருப்பு ஜூலை’யை, இந்த முறை சிங்களத் தரப்பினரும் நினைவுகூர்ந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்பாக, நேற்று இலங்கையின் தலைநகர் கொழும்பில் இப்படையினராலும் சேர்ந்து முறியடிக்கப்பட்ட ‘அறகலய’ போராட்டத்தை ஆதரிப்பவர்கள் இப்படி ஒப்பீடு செய்து கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் அதிகமாகப் புழங்கி வரும் புலம்பெயர் தமிழர்களும் இதுதொடர்பாக இணக்கமாகவும் சற்று கிண்டல் கேலியுடனும் பதிவுகளை இட்டபடி இருக்கின்றனர்.
”நாங்கள் 40ஆம் ஆண்டை நினைவுகூரும்போது நீங்கள் முதலாம் ஆண்டை நினைவுகூராதிருக்கப் புத்த பகவானைப் பிராத்திக்கிறோம்.” என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார், ஜசீகரன் என்பவர்.
” இன்று நீதிகேட்கும் தன் இனத்தின் மீது அடாவடி செய்யும் அரசு அன்று எம் இனத்தின் மீது எந்த அளவுக்கு கொலைவெறித் தாண்டவம் ஆடி இருக்கும்?” என ஆவேசம் கொள்கிறது, தெய்வேந்திரம் இந்திரகுமார் என்பவரின் பதிவு.
நேற்று இலங்கைப் படையினரின் தாக்குதலை எதிர்பார்க்காமல் போராட்டத்தைத் தொடர்வது பற்றிய சிந்தனையில் மட்டும் இருந்த, காலி முகத் திடல் போராட்டக்காரர்கள் ஒரு வார கருப்பு ஜூலை நிகழ்வுக்கு திட்டமிட்டிருந்தனர். அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே அவர்களின் அமைதி வழிப் போராட்டத்தின் குடில்கள் அனைத்துமே பிய்த்து எறியப்படும் என்பதை அவர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவேளை இராணுவத்தின் நேற்றைய நடவடிக்கை நிகழ்ந்திருக்காவிட்டால், இன்று 23ஆம் தேதி முதல் காலி முகத்திடலில் 1983 கருப்பு ஜூலையால் பாதிக்கப்பட்டவர்களையும் அழைத்துவந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்தும் அவர்களின் முடிவு நிறைவேறியிருக்கும்.
இடைக்கால அதிபராகப் பதவியேற்றதும் பகிரங்கமாகப் பேசிய ரணில் விக்கிரமசிங்கே
ஆனால், இடைக்கால அதிபராகப் பதவியேற்றதும் பகிரங்கமாகப் பேசிய ரணில் விக்கிரமசிங்கே, அரசை எதிர்த்த கிளர்ச்சிக்காரர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
பதவியேற்றுக்கொண்ட 24 மணி நேரத்துக்குள் பாதியளவுகூடத் தாண்டியிருக்காத வேளையில், திடீர் மாற்றங்கள் தொடங்கின. முதலில், கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்த காவல்துறையினர் அங்கிருந்து அகன்றனர். நடுசாமம் ஒரு மணியளவில் அரசு அதிபர் செயலகத்தின் முன்னர் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். முந்தைய நாள் இரவுவரை போராட்டக்காரர்கள் வசமிருந்த அதிபர் செயலகத்தை வெள்ளியன்று மதியம் அரசிடம் ஒப்படைப்பதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.
ஆனால், அதற்கு முன்னரே படையினரைக் குவித்து, ’கோத்தபயவே வீட்டுக்குப் போ’ கிராமம் எனப் பெயரிடப்பட்டு இருந்த போராட்டக்களத்தில், மேலும் மேலும் நூற்றுக்கணக்கான படையினர் கொண்டுவரப்பட்டு குடில்குடிலாகத் தங்கியிருந்த போராடக்காரர்கள், அவர்களின் தட்டிகள், கூரைத்துணிகள், தடுப்புகள், கணினி போன்ற சாதனங்கள் அனைத்தையும் தூக்கிப்போட்டு உடைத்தது, இராணுவப் படை.
படையினரின் திடீர் தாக்குதலைக் கண்டித்த, எதிர்த்துநின்ற அனைவரையும் கடுமையாகத் தாக்கி அப்புறப்படுத்தினர். போராட்டக்காரர்களில் ஒன்பது பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது, ரணிலின் அரசாங்கம். பெண்களில் பலரும் இராணுவத் தாக்குதலுக்கு ஆளானார்கள். படுகாயம் அடைந்தவர்கள் அந்த இடத்திலேயேதான் இருந்து அகற்றவும் சாபமிடுவது மட்டுமே முடிந்தது. ஏனென்றால் அந்தப் பகுதியிலிருந்து வெளியே செல்லமுடியாதபடி மூன்று பக்க வீதிகளும் அடைக்கப்பட்டிருந்தன.
முன்கூட்டியே சுற்றிலும் இராணுவப் படையினர், காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். படையினரின் தாக்குதலிலிருந்து உலகளாவிய ஊடகமான பிபிசியின் செய்தியாளரும் தப்பவில்லை. பிபிசி தமிழ் செய்தியாளர் ஜெரின் என்பவர் படையினரால் பூட்ஸ் காலால் வயிற்றில் உதைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்ல முடியாதபடி சுற்றிலும் ஆயுதம் தாங்கியவர்கள் தடையாக இருந்தனர். பின்னர், அவசர ஊர்திக்குத் தெரிவிக்கப்பட்டு அது வந்தபிறகே அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கமுடிந்தது.
இதுவரை அமைதி வழியிலான அறப்போராட்டம் என அறிவித்து மேற்கொள்ளப்பட்டு வந்த ‘அறகலய’( சிங்களத்தில் மக்கள் போராட்டம்) கிளர்ச்சியில், அவர்கள் மற்றவர்கள் மீதோ அரசுப் படைகள் அவர்கள் மீதோ வலிந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கவில்லை. அதுவே தொடரும் என்று மட்டுமே நினைத்துக்கொண்டு போராடிவந்த பெரும்பான்மைச் சிங்களவர்- சிறுபான்மைத் தமிழர் அடங்கிய குழுவினர் அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள்.
அவர்கள் மட்டுமல்ல, அமைதி வழியிலான போராட்டத்தில் ஆயுதப்படைகள் தாக்கியது தவறு எனக் கனடா, அமெரிக்கா, சுவிஸ் உட்படப் பல நாடுகளும் ஐ.நா. தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் தமிழர் தரப்பின் மீதான இலங்கைப் படையின் எத்தனையோ தாக்குதல்களில் இப்படியான சம்பிரதாயமான அறிக்கைகள் ரொம்ப சகஜம் என்பதும் வரலாறு. அதற்குமேல் அவற்றுக்கு எந்தப் பொருளும் இல்லை என்பதே!
அது ஒருபுறம் இருக்க, 80-களின் இனப்படுகொலை முடிந்துபோனாலும் அதன்பிறகு இரண்டாவது தலைமுறை இளைஞர்கள் அரசியல் உரிமைக் களத்துக்கு வந்துள்ள இந்தக் கட்டத்தில் ’கருப்பு ஜூலை 1983-2022’ என ஒப்பிட்டு, இணக்கப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர்.
" இசைப்பிரியா போன்ற தமிழ்ப் பெண்களை இலங்கைப் படையினர் என்ன கொடுமைப்படுத்தினர் என இப்போது உணர்கின்றோம்"
"இப்படையினர் போர்க் குற்றம் செய்தவர்கள் என்பதை ஏற்கின்றோம்"
" தமிழ் இளைஞர்கள் ஏன் தம்மைத்தாமே வெடிக்க வைத்துப் படையினரைக் கொன்றனர் என உணர்கின்றோம்"
- இப்படியான வாசகங்களை சிங்களத்து இளைஞர்களும் புதுத் தலைமுறைப் போராட்டக்காரர்களும் முதல் முறையாகப் பொதுவெளியில் கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். ஊடகங்களுக்குப் பேசுகையில் இரண்டு இனத்தவரையும் ஒட்டுமொத்த இலங்கை அரசாங்கம் மோசமாக நடத்துகிறது என்கிறபடி அவர்கள் தெரிவித்ததைக் காணக்கூடியதாக இருக்கிறது.
குறிப்பாக, இலங்கைப் படையினரால் மானுடக் குற்றக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் எனப்படும் ஊடகப்போராளியான இசைப்பிரியாவின் படத்தையும் நேற்று படையினரால் தாக்கப்பட்ட சாந்தினி தீரரத்னா என்பவரின் படத்தையும் ஒருசேரப் பதிந்து, அன்று இசைப்பிரியாவின் வலியை உணர்கிறோம் என்கிறபடி சிங்களத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னுமொருவரோ, ஊடகமும் செல்போனும் இல்லாதபோது வடக்கு இலங்கையில் (ஈழப்பகுதியில்) தமிழ் மக்களுக்கு படையினர் என்னென்ன செய்திருப்பார்கள்... என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
1983இல் இனவெறித் தாண்டவத்தின்போது தமிழர் ஒருவர் ஆடை முழுவதும் அவிழ்க்கப்பட்டு, பொது இடத்தில் நிர்வாணமாக உட்காரவைக்கப்பட்டு, சிங்கள இனவெறியன் ஒருவனால் உதைக்கப்படும் கருப்புவெள்ளைப் படத்தையும் நேற்றைய தாக்குதலில் காயமடைந்த இளைஞர் ஒருவரின் படத்தையும் இணைத்து வெளியிடப்பட்ட பதிவுகளைப் பலரின் பரவலாகப் பார்க்கமுடிகிறது.
புதிய சொல் எனும் இதழின் ஆசிரியர் கிரிசாந்த் சிவசுப்பிரமணியம், “இப்போது நம் அனைவருக்கும் ஜூலை நினைவுகூரல் என்பது பொதுவாகிவிட்டது. அதிகாரத்தின் இனவெறியின் கோரத்தை முன்னிட்டு...” என்று தன் கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.
எத்தனையோ முறை எத்தனையோ பேரால் நினைவுகூரப்பட்டாலும், காலம் எந்த ஒன்றின் மீதும் புதிய புதிய சிந்தனைகளை தனக்குள்ளே அடைத்து வைத்திருக்கிறது.
1980-களின் தொடக்கத்திலிருந்து சிங்களவரின் இலங்கை அரசு இராணுவம் செய்த தொடர் கொலைகள், பாலின, மொழியினத் தாக்குதல்களுக்குப் பதிலடி தரவேண்டும் எனத் தமிழ் இளைஞர்கள் முடிவுசெய்தனர். சில ஆண்டுகளுக்குள் ஆயுதமேந்திய குழுக்களாக உருவானவர்கள் பதில் தாக்குதலிலும் இறங்கினர். அதன் ஒரு அங்கமாக 1983 ஜூலை 23 அன்று நள்ளிரவில் தமிழ்ப் போராளி இளைஞர்கள் நடத்திய தாக்குதலில் 13 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.
அவர்களை கொழும்பின் பொரளை எனும் பகுதியில் வைத்து பொது மரியாதை செய்தது, அன்றைய அதிபர் ஜெயவர்த்தனே அரசாங்கம். கூடவே, தமிழ் மக்களின் மீதான வெறுப்பையும் அவர் கக்கினார். அந்த ஆண்டு வெளியான லண்டன், எகானாமிஸ்ட் பத்திரிகையில் அவர் அளித்த பேட்டியே இன்றைக்கும் அந்தக் கொடூரத்தின் சாட்சியமாக இருக்கிறது.
அரசபடைகளின் ஆதரவுடன் கொழும்புவில் கணிசமாக இருந்த தமிழர்களின் கடைகள் முதலிய வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. தமிழ் மக்கள் பல இடங்களில் வெட்டிக்கொல்லப்பட்டனர். பல இடங்களில் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் எனப் பாராமல் தமிழர்கள் ஆங்காங்கே பயணம்செய்தபோது வெளியில் இழுத்துவிடப்பட்டும், அப்படியே கார்களோடும் கொளுத்தப்பட்டனர். இவை அனைத்தும் ஆவணப் பதிவுகளாக இன்றும் இருக்கின்றன. கொழும்பு மட்டுமல்ல, மலையகப் பகுதியில் இருந்து வந்த தமிழர்களும் இனக்கொலைக்கு ஆளாகினர்.
அரசுத் தரப்பில் 400 பேர்வரை இறந்ததாகச் சொல்லப்பட்டாலும், தமிழர் தரப்பிலோ 3 ஆயிரம் பேர்வரை கொல்லப்பட்டனர் என்கின்றனர். 8 ஆயிரம் வீடுகளும் 5 ஆயிரம் வர்த்தக நிலையங்களும் முழுவதுமாக எரித்து நாசமாக்கப்பட்டன; 1.5 இலட்சம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டனர். அழிக்கப்பட்ட தமிழர்களின் உடைமை மதிப்பு மொத்தமாக 30 கோடி டாலர் இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
சிங்களவர் மத்தியிலிருந்து தப்பிய தமிழ் மக்கள் ஈழத்தமிழரின் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கும் இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் ஓடி அடைக்கலம் புகுந்தனர். அப்படி இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானவர்கள் வன்னி பகுதியில் குடியேறியவர்கள் என்றும் கூறப்படுகிறது. அதில் கணிசமானவர்கள் முள்ளி வாய்க்கால் இனக்கொலையில் கொல்லப்பட்டார்கள் என்பது இன்னுமொரு சோகம்!
காலம், தமிழர்கள் மீதான ஜெயவர்த்தனே காலத்து முதலான இனக்கொலைகளை பல்வேறு ஆவணங்களாகவும் பதிவுசெய்திருக்க, அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்கேவின் சாதாரண அடக்குமுறைக்கே ‘அறகலய’ போராட்டக்காரர்கள் இப்படி ஒப்பீடு செய்கிறார்களே... எவ்வளவு அபத்தம் என்று கடுமையான விமர்சனங்களும்கூட முன்வைக்கப்படுகின்றன.
ஆனாலும் இனவெறியை மீறிய இணக்கப்பாட்டை இரு தரப்பினருமே உள்ளுக்குள் விரும்பவும் செய்கிறார்கள் என்பதும் அவர்களின் அதே கருத்துகளில் தெளிவாக வெளிப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust