நேபாளம் : சுயம்புவாக தோன்றிய ஒரு புத்த கோவில் - ஏன் நிச்சயம் பார்வையிட வேண்டும்? Twitter
உலகம்

நேபாளம் : சுயம்புவாக தோன்றிய ஒரு புத்த கோவில் - ஏன் நிச்சயம் பார்வையிட வேண்டும்?

இக்கோயிலிலும் குரங்குகள் அதிகம் காணப்படுவதால் இது குரங்குகள் கோயில் என்றும் சொல்லப்படுகிறது.

Antony Ajay R

நேபாள தலைநகர் காத்மாண்டூவில் உள்ளது சியம்புநாத் புத்த கோவில். இந்த புத்த கோவில் இந்துக்களுக்கும் புனித தலமாக இருக்கிறது. புத்த மதத்தவர்களுக்கு இணையாக இந்துக்களும் இந்த கோவிலில் வழிபடுகின்றனர்.

சுயம்புநாத் கோவில் காத்மாண்டுவில் உள்ள 7 புராதன கோவில்களில் ஒன்று. நகரின் மையத்தில் 365 படிகட்டுகள் ஏறி வரும்படியாக ஒரு மலைமீது இந்த கோவில் அமைந்துள்ளது. 

இந்த மலையைச் சுற்றி புத்த சிலைகளும் சிறிய ஸ்தூபிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. மலை உச்சியில் சுயம்புநாத் ஸ்தூபி உள்ளது.

சுயம்புநாத் ஸ்தூபியை மையமாகக் கொண்டு சுற்றிலும் புத்த மடாலயம், அருங்காட்சியகம், நூலகம் ஆகியவை அமைந்திருக்கின்றன.

திபெத்திய பௌத்தமான வஜ்ஜிராயன பௌத்த வழியில்தான் இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து பிறப்புக்கு முன் நேபாளத்தை ஆண்ட லிச்சாவி அரச குலத்தினரால் இங்குள்ள பல கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே அசோகர் இங்கே புத்தத் தூண் மற்றும் புத்த விகாரத்தை நிறுவியதாகவும் அவை காலப்போக்கில் அழிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சுயம்புநாத் ஸ்தூபி மற்றும் சில கோயில்கள் கி.பி 5ம் நூற்றாண்டில் விருசபதேவர் மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த மன்னர்கள் பலர் இக்கோயிலுக்குத் திருப்பணி மேற்கொண்டுள்ளனர்.

இந்த சுயம்புநாத் ஸ்தூபி கடந்த 15 நூற்றாண்டுகளில் 15 முறை சீரமைக்கப்பட்டிருக்கிறது.

மலைச்சாலை வழியாக வாகனங்களிலும் மலை உச்சிக்கு வர முடியும். 365 படிக்கட்டுகள் வழியாகச் செல்லும்போது இந்திரனின் ஆயுதமாகக் கருதப்படும் வலிமை வாய்ந்த வஜ்ஜிராயுதத்தைக் காண முடிகிறது.

அதனைக் கடந்து சென்றால் வான் நோக்கி உயர்ந்து நிற்கும் சுயம்புநாத் ஸ்தூபியைக் காணலாம். வெள்ளை நிறத்தில் பாதி உருண்டை வடிவிலான கோயிலின் மேல் இந்த ஸ்தூபி அமைக்கப்பட்டிருக்கிறது.

பொன்னிறத்தில் மிளிரும் இந்த ஸ்தூபியின் நான்கு புறங்களிலும் புத்தரின் கண்கள் வரையப்பட்டிருக்கின்றன. அதன் பார்வையில் அமைதி மேலோங்கியிருக்கிறது.

புராணக் கதையின்படி காத்மாண்டு பள்ளத்தாக்கே தாமரை மலர்களால் நிரம்பிய ஏரியாக இருந்ததாகவும் புத்தரின் அருளால் அந்த ஏரி சமவெளியாக மாறியதாகவும் ஏரியிலிருந்த தாமரை மலரே இந்த ஸ்தூபியாக உயர்ந்து நிற்கிறது என்று சொல்லப்படுகிறது.

சுயம்பு என்றால் தானாக உருவாகுவது. இந்த காத்மாண்டு பள்ளத்தாக்கும் தானாக உருவானது என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் சுயம்பு என்கிற பொருளில் சுயம்புநாத் என்கிற பெயரால் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

இந்து மதத்தில் சுயம்பு என்கிற கருத்து ஆழமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே பல ஊர்களில் சுயம்புநாதர் கோயில்கள் உள்ளன. தானாய்த் தோன்றிய எனப் பொருள் தரும் இந்த சுயம்புநாத் கோயிலில் இந்துக் கோயில்களைப் போலவே தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

ஸ்தூபிக்கு எதிரே உள்ள மடாலயத்தை ஒட்டி சிறிய வடிவிலான கற்கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் வேலைப்பாடுகளில் நேபாள சிற்பக்கலை அம்சத்தைப் பார்க்கலாம்.

பொதுவாகவே மலைப்பகுதிகளில் குரங்குகள் அதிகம் காணப்படும். இக்கோயிலிலும் குரங்குகள் அதிகம் காணப்படுவதால் இது குரங்குகள் கோயில் என்றும் சொல்லப்படுகிறது.

மலை உச்சியிலிருந்து காத்மாண்டு நகரின் நிலக்காட்சியைத் தெளிவாகப் பார்க்க முடியும். கீழே மலையைச் சுற்றி எங்கிருந்து பார்த்தாலும் இந்த ஸ்தூபி தெரியும். இரவு நேரத்தில் நாற்புறத்திலும் இந்த ஸ்தூபி மின் விளக்குகள் மூலம் ஒளிர்விக்கப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்டிருப்பதால் விளக்கொளி படுகையில் கூடுதல் பொலிவு பெற்று ஒளிர்கிறது.

வழியில் படிக்கட்டுகளில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் புத்தர் சிலை, ஸ்தூபி சிலை மற்றும் கலைப்பொருட்கள் பலவையும் விற்கப்படுகின்றன. காத்மாண்டு செல்கிறவர்கள் அவசியம் அவசியம் செல்ல வேண்டிய பௌத்தத் தலம் இந்த சுயம்புநாத் கோயில்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?