வெளிநாடுகளுக்கு குடிபெயரும் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் Pexels
உலகம்

வெளிநாடுகளுக்கு குடிபெயரும் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் - ஏன்?

Govind

(மார்ச் 30, 2022 - வெளியான கட்டுரையின் மீள்பகிர்வு இது)

குடியிருப்பு மற்றும் குடியுரிமை திட்டமிடல் நிறுவனமான ஹென்லி பார்ட்னர்ஸ் உலக அளவில் பணக்காரர்கள் இடம்பெயருவது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள் பெரும் பணத்தோடு வெளிநாடுகளில் முதலீடு செய்து இடம்பெயர்ந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த அறிக்கை 2021 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களை வைத்து தொகுக்கப் பட்டிருக்கிறது.

இத்தகைய இடப்பெயரவில் இந்தியர்கள் முதலீட்டுடன் இடம்பெயர்வது அதிகம் என தெரிய வந்திருக்கிறது. இது 2021 ஆம் ஆண்டு கணக்கின் படி 54% அதிகரித்திருக்கிறது.

பணக்காரர்களின் இடப்பெயர்வு என்றால் என்ன? இவர்கள் பெரும் பணத்தை தாங்கள் செல்லும் நாடுகளில் முதலீடு செய்து பதிலுக்கு குடியுரிமை பெறுகிறார்கள்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரவுகள் படி கடந்த ஐந்தாண்டுகளில் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். அவர்களில் 40% பேர் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

கோல்டன் விசா அல்லது தங்க விசா என்பது ஒரு நாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள் அதிக பணத்தை முதலீடு செய்து ஒரு சில ஆண்டுகளில் குடியுரிமை பெறுவதைக் குறிக்கிறது. இந்தியாவை விட்டு வெளியேறியவர்களில் தங்க விசா பெற்றவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அமெரிக்காவைத் தாண்டி இந்தியர்கள் முதலீடு செய்து குடியுரிமை பெறும் நாடுகளில் போர்ச்சுக்கல், மால்டா, சைப்ரஸ் போன்ற நாடுகள் முன்னணி வகிக்கின்றன.

கோவிட் பொதுமுடக்கம் காரணமாக 2020 இல் 85,248 இந்தியர்கள் மட்டும் வெளியேறினர். ஆனால் 2019 இல் சுமார் 1,44,017 பேர் இந்தியக் குடியுரிமையை கைவிட்டு வெளிநாடுகளில் குடியேறினர்.

உலக செல்வ இடப்பெயர்வு அறிக்கையின் படி 2% இந்திய மில்லியனர்கள் 2020 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர். இத்தகைய அதிபணக்காரர்களின் இடப்பெயர்வில் சீனா 16,000ம் பேரோடு முதலிடத்திலும், இரண்டாவதாக இந்தியாவில் 7000ம் பேரும், அதற்கடுத்து ரசியாவில் 5,500 பணக்காரர்களும் இடம் பெயர்ந்திருக்கின்றனர்.

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் எங்கு குடியேறுகிறார்கள்?

இந்தியர்கள் செல்ல விரும்பும் நாடுகளில் போர்ச்சுக்கல் முதலிடத்திலும் அதற்கடுத்து மால்டா, கிரீஸ் போன்ற நாடுகள் இருக்கின்றன.

இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு என்பதால் இங்கே வணிக நடவடிக்கைகளின் மூலம் நிறுவனங்களும், பணக்காரர்களும் பெரும் பணத்தை ஈட்டுகின்றனர். இவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது. வெளிநாடுகளின் அதிஉயர் வாழ்க்கைத் தரம், குழந்தைகளின் உயர்தரக் கல்வி, உலகச் சந்தைகளில் வர்த்தகம் செய்வது, குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பது, வெளிநாடுகளில் முதலீடு செய்து இலாபம் சம்பாதிப்பது ஆகிய காரணங்களுக்காக இவர்கள் வெளியேறுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியர்களின் முதலீட்டு இடப்பெயர்வு அமெரிக்காவை நோக்கியே இருந்தது. தற்போது ஸ்பெயின், போர்ச்சுக்கல், மால்டா போன்ற நாடுகள் ஓய்வு வாழ்க்கை அல்லது விடுமுறை வாழ்க்கையை அனுபவிக்கும் இடங்களாக மாறிவருகின்றன.

போர்ச்சுகல் அல்லது மால்டாவில் உள்ள குடியிருப்பு முதலீட்டுத் திட்டங்கள் மூலமாகவோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிக குடியிருப்பு திட்டங்கள் காரணமாகவோ அல்லது ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் வழங்கும் திறமை அடிப்படையிலான விசாக்கள் மூலமாகவோ இந்தியாவின் பணக்காரர்களும், தொடக்க நிலை தொழில் முனைவோர்களும் அங்கு செல்ல ஆர்வமாக இருக்கின்றனர்.

போர்ச்சுகலை ஏன் விரும்புகிறார்கள்?

போர்ச்சுகல் நாட்டில் 2,80,000 யூரோக்களை குறைந்தபட்ச முதலீடாக போட்டால் தங்க குடியிருப்பு அனுமதி திட்டத்தில் யாரும் சேரலாம். இது ஐரோப்பாவின் மிகவும் கவர்ச்சியான குடியிருப்பு திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தின் படி விண்ணப்பதாரர்கள் போர்ச்சுகலில் வாழ, வேலை பார்க்க, படிக்கும் உரிமை பெறுகிறார்கள். மேலும் ஐரோப்பாவின் ஷெங்கன் ஏரியா என்றழைக்கப்படும் 26 நாடுகளில் விசா இல்லாத பயணமும் செய்யலாம். இந்த நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் இருக்கின்றன. 5 ஆண்டுகளுக்கு பிறகு போர்ச்சுகல் குடியுரிமையும் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டப்படி முதலீட்டாளர்கள் போர்ச்சுகலில் ஆண்டுக்கு 7 முதல் 14 நாட்கள் மட்டும் இருந்தால் போதும். மேலும் குடியுரிமை விண்ணப்பித்து பெறும் காலம் விரைவாக ஒரு வருடத்திற்குள் முடிந்து விடும். இதனால் போர்ச்சுக்கல் திட்டம் எளிதான குடியிருப்பு வழியாக கருதப்படுகிறது.

போர்ச்சுகலில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது முதன்மையாகும். தற்போது அதன் தொகை மாறவில்லை என்றாலும் நாட்டின் லிஸ்பன், போர்டோ மற்றும் அல்கார்வின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரங்களில் ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகரித்து வருவதால் இனி அங்கே வாங்குவது சாத்தியமில்லை. அதற்கு பதில் மக்கள் தொகை குறைவான இடங்களில் ரியல் எஸ்டேட் வாங்குமாறு விண்ணப்பதாரர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

Malta

மால்டா நாட்டின் சிறப்பு என்ன?

ஐரோப்பாவின் மத்திய தரைக் கடலில் சிசிலி தீவிற்கு அருகில் இருக்கும் தீவு நாடுதான் மால்டா. இங்கு சுமார் 5,25,000 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். மால்டா வில் குடியிருப்பு திட்டத்தின் படி 1,75,000 யூரோக்கள் முதலீடு செய்தால் போதும். குடியிருப்போடு, மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி துறை மற்றும் கேமிங் தொழில்களை உள்ளடக்கிய பல்வகை பொருளாதாரத்தை மால்டா கொண்டிருக்கிறது. ஆங்கிலம் பேசும் சூழலோடு மலிவான விலையில் உயர்ந்த வாழ்க்கைத் தரம் இங்கே கிடைப்பதால் சர்வதேச குடியிருப்பாளர்கள் பெரிதும் ஈர்க்கப்படுகிறார்கள். போர்ச்சுகலை விட மால்டாவின் நிரந்தர குடியிருப்பிற்கான மூலதன வரம்பு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

பிற நாட்டு குடியிருப்புத் திட்டங்கள்

கிரீஸ் நாட்டின் தங்க விசா திட்டப்படி குறைந்த பட்சம் 2,50,000 யூரோக்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் விரைவான குடியருப்பு கிடைப்பதோடு, மேற்கு ஐரோப்பியா ஷெங்கன் நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இரண்டு மாதங்களுக்குள் கிரீஸின் சுகாதார மானியம், பொதுக்கல்வி ஆகியவற்றிலிருந்து பயனடையலாம்.

EB-5 விசா என்பது 1990 ஆம் ஆண்டின் குடிவரவுச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமெரிக்க விசா ஆகும். இதன் குறைந்த பட்ச முதலீடு 8 இலட்சம் டாலராகும். இதன்படி குடியேறிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அமெரிக்காவின் நிரந்தர குடியிருப்பின் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

ஆஸ்திரேலியாவின் குளோபல் டேலண்ட் விசா என்பது திறமையான நபர்களுக்கு நிரந்தர குடியிருப்பு வழங்கும் வேகமான விசா திட்டமாகும். ஆஸ்திரேலியாவின் புதுமை மற்றும் தொழில்நுட்பப் பொருளாதாரங்களை மேம்படுத்தும் வகையில் ஆற்றல்மிக்க, அதிகத் திறமையான நபர்களை ஈர்ப்பதன் மூலம் போட்டித்திறனை ஊக்குவிப்பதற்கான முயற்சியில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் குளோபல் டேலண்ட் விசா திட்டத்தில் ஆர்வம் காட்டும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

இத்திட்டத்திற்கு முதலீடு தேவையில்லை. ஆறு வாரங்களுக்குள் விண்ணப்பதாரர்கள் முழு குடும்பத்திற்கும் விரைவான நிரந்தர வசிப்பிடத்தை பெறமுடியும்.

கோல்டன் விசாவை வைத்திருப்பதன் நன்மைகள் என்ன?

கோல்டன் விசா குடும்பங்களுக்கு புதிய சந்தைகளுக்கான அணுகல் மற்றும் வணிகம், தொழில், கல்வி, சுகாதாரம், வரி மற்றும் வாழ்க்கை முறை வாய்ப்புகளை உலகளாவிய அளவில், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு வழங்குகிறது.

பல கோல்டன் விசா திட்டங்கள் வெற்றிகரமான விண்ணப்பதாரரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமைத் தகுதியை வழங்கும். இந்நிலையில் வைத்திருக்கும் பணத்தை பொறுத்து இந்தியப் பணக்காரர்கள் அமெரிக்கா, போர்ச்சுகல், சைப்ரஸ், ஸ்பெயின், கிரீஸ், மால்டா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்கிறார்கள்.

பெரும்பான்மை இந்தியர்கள் ரேசன் கடைகளில் இந்த மாதம் உரிய பொருட்கள் முழுமையாக கிடைக்குமா என்று கவலைப்படுகின்ற வேளையில் சில இலட்சம் பணக்கார இந்தியர்கள் வசதியான வெளிநாட்டு வாழ்க்கையை தேடிப் போகிறார்கள். அப்படி போவதற்கு அவர்கள் வைத்திருக்கும் பணம் இங்கே பெரும்பான்மையான இந்தியர்களிடமிருந்து சம்பாதித்த வருமானம் ஆகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?