சீனா: கொரோனா ஊரடங்குக்கு எதிரான போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புகிறதா?- விரிவான தகவல்கள் Twitter
உலகம்

சீனா: கொரோனா ஊரடங்குக்கு எதிரான போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புகிறதா?- விரிவான தகவல்கள்

இப்போராட்டம் எதனால் வெடித்தது... போராட்டங்கள் நடைபெற்று வரும் முக்கிய நகரங்கள் என்ன? சீன அரசுக்கு ஜீரோ கோவிட் கொள்கையில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது? வாருங்கள் பார்ப்போம்.

Gautham


சீனாவின் பல முக்கிய நகரங்களில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீனா கடைப்பிடித்து வரும் ஜீரோ கோவிட் கொள்கையை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. இது மெல்லச் சீன மத்திய அரசு, சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீன அதிபர் ஷி ஜின பிங்குக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்து வருகிறது.

இப்போராட்டம் எதனால் வெடித்தது... போராட்டங்கள் நடைபெற்று வரும் முக்கிய நகரங்கள் என்ன? சீன அரசுக்கு ஜீரோ கோவிட் கொள்கையில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது? வாருங்கள் பார்ப்போம்.

கடந்த வியாழக்கிழமை சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஷின்ஜியாங் (Xinjiang) பிராந்தியத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து மக்களைக் காக்கவும், தீயை அணைக்கவும் தீயணைப்புத் துறையினர் விரைவாக வந்து சேரவில்லை. கொரோனா நெருக்கடிகள் காரணமாகத் தான் தீயணைப்புத் துறையினர் தாமதமாக வந்தனர் என மக்கள் கருதியதால், சீனாவின் பல நகரங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்ததாக சி என் என் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது..

அந்த தீ விபத்தில் கிட்டத்தட்ட பத்து பேர் உயிரிழந்திருக்கலாம் என தி இந்து பத்திரிகை வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஒரு சிறு சலசலப்பு போலத் தொடங்கிய இந்த போராட்டம் சனிக்கிழமை இரவு ஒரு பெரிய மக்கள் கூட்டம் ஷாங்காய் நகரத்தில் கூடிப் போராடும் அளவுக்குப் பெரிதானது.

இந்த மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளைச் சீன அரசு திரும்பப் பெற வேண்டும், பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். வேறொரு தரப்பினரோ சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அவரது கம்யூனிஸ்ட் கட்சி பதவியிலிருந்து இறங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கூட, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில் சில நூறு பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டம் பல மணி நேரம் நடந்தது என பிபிசி  வலைத்தளத்திலும் செய்தி வெளியாகி உள்ளது. இப்படி சீனாவின் தலைநகரிலேயே போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கிப் போராடுவது மிக அரிதான ஒன்று.

வீதியில் இறங்கியவர்களில் ஒரு சாரார், தீ விபத்தில் காலமானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி  அஞ்சலி செலுத்தினர். அதில் ஒரு தரப்பினர் எங்களுக்கு கோவிட் பரிசோதனைகள் வேண்டாம், சுதந்திரம் வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். போராட்டத்தைக் கட்டுக்குள் வைக்கப் போராட்டக்காரர்களைச் சுற்றி மிகப் பெரிய எண்ணிக்கையில் காவல்துறையினர் களமிறக்கப்பட்டனர்.

இந்த சனி & ஞாயிறு இரு தினங்களுக்குள் கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி விதிக்கப்படும் ஊரடங்கு உத்தரவுகளுக்கு எதிரான போராட்டம், சுமார் 50க்கும் மேற்பட்ட சீன கல்லூரிகளில் தொற்றிக் கொண்டது. கல்லூரி மாணவர்கள் சாலையில் இறங்கிப் போராடுவது போன்ற புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. சீனாவின் மிக முக்கிய கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படும் சிங்குவா (Tsinghua) பல்கலைக்கழகமும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும், "எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும், சட்டத்தின் ஆட்சி வேண்டும், கருத்துரிமை வேண்டும்" என முழக்கமிட்டதாகவும் தி இந்து பத்திரிக்கை வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் முக்கிய நகரங்களான பீஜிங், ஷாங்காய், வூஹான், செங்க்டு, சீயான் போன்ற இடங்களில் எல்லாம் இப்போராட்டத் தீ பரவியுள்ளது.

1989 ஆம் ஆண்டு தியானென்மென் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு, இது போன்ற போராட்டங்களை நாங்கள் பார்க்கவில்லை என ஒரு முன்னணி சீன பத்திரிகையாளர் தங்களோடு பகிர்ந்து கொண்டதாகவும் தி இந்து வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் போராட்டங்களே நடக்காதா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில். சீனாவின் ஒரு மாகாணத்தில் முன்னெடுக்கும் போராட்டம் மற்றொரு மாகாணத்தில் முன்னெடுக்கப்படாது. பல மாகாணமும் தங்களுக்குத் தேவையான பல பல விஷயங்களை வேண்டிப் போராடும்.

ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு, சீனாவில் பல மாகாணங்களில் பல பல்கலைக்கழகங்களில் ஒரே விஷயத்திற்கு (கொரோனா கட்டுப்பாடுகளுக்கு) எதிராக, சீன மத்திய அரசையும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் எதிராகப் போராட்டக் குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.

சமீபத்தில் தான் உலக சுகாதார அமைப்பு, சீனா, ஜீரோ கோவிட் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறிய போது அதைக் கடுமையாக விமர்சித்தது சீன தரப்பு. 

சீனாவின் கொரோனா & அந்நாட்டின் நிலைப்பாடு

சீனாவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் சுமார் 39,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுக்க பரவத் தொடங்கிய காலத்தில், சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கை சரியான ஒன்றாகத் தோன்றியது. ஆனால் இப்போது சீனாவின் கொள்கை நல்ல பலன் கொடுப்பதாகத் தெரியவில்லை.

கொரோனா வைரஸ் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது, அது தன் நடத்தைகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருகிறது... எனவே அதற்குத் தகுந்தார் போல் உலக நாடுகளின் தடுப்பு நடவடிக்கைகளும் மாற வேண்டியது மிகவும் அவசியம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் மருத்துவர் டெட்ராஸ் அதனம் கூறியுள்ளார்.

ஆனால் சீன அதிபர் அல்லது சீன அரசாங்கம், உலக சுகாதார அமைப்பின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. சீனா ஜீரோ கோவிட் கொள்கையைக் கைவிட்டால் மிகப்பெரிய எண்ணிக்கையில் சீனாவில் உயிரிழப்புகள் ஏற்படும் குறிப்பாக முதியவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனச் சீன அரசு கூறி வருகிறது.

சீனாவில் நிலவும் தடுப்பூசிப் பிரச்சனை

சீனாவில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு இருக்கிறது. 51% பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 59 சதவீதம் பேர் மட்டுமே தங்களுடைய முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர். இப்போது வரை 41 சதவீதம் பேர் ஒரு டோஸ் கூட தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பிரச்சனையில் வயதானவர்கள் மற்றும் முதியோர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது தொடக்கம் முதலே கூறப்படும் ஒரு அடிப்படையான விஷயம். இதைக் கூட நிறைவேற்றாமல் ஜீரொ கோவிட் கொள்கையைக் கடைப்பிடித்து என்ன பலன்? என்பதே நிபுணர்கள் எழுப்பும் முக்கிய கேள்வி.

அதேபோல சீனா பயன்படுத்தும் சினோவேக்  மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகளின் செயல் திறனும் இந்த இடத்தில் கேள்விக்கு உள்ளாகப்படுகிறது. இந்த இரு தடுப்பூசிகளுமே செயலற்ற கொரோனா  வைரஸை  அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. பல ஆய்வுகளில் இந்த இரண்டு கொரோனா  தடுப்பூசிகளும்  ஒமிக்கிரான் கொரோனா வைரஸ் திரிப்புக்கு எதிராக மிகக் குறைந்த அளவிலேயே பாதுகாப்பு வழங்குவதாகக் கூறப்படுகிறது.  

அதோடு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சீனாவுக்கு எம் ஆர் என் ஏ கொரோனா தடுப்பூசிகளை வழங்கியபோதும் அதைப் பெரிய அளவில் பயன்படுத்தவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?