இலங்கை  NewsSense
உலகம்

இலங்கை : போரில் வென்று பொருளாதார நெருக்கடியில் தோற்கிறதா தீவு தேசம்?

மணிவண்ணன் திருமலை

(கட்டுரையாளர் பிபிசி தமிழின் முன்னாள் ஆசிரியர், லண்டனிலிருந்து எழுதும் மூத்த செய்தியாளர்)

தினமும் 13 மணி நேர மின் வெட்டு, பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயுவுக்கு மைல் நீள வரிசைகளில் மக்கள், பத்திரிகைக் காகிதத் தட்டுப்பாடால் பத்திரிகைகள் டிஜிடலுக்கு மாறுவது, சாதாரண பேப்பர் தட்டுப்பாடால் பள்ளிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு, உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறும் அவலம் …. ராபர்ட் முகாபேயின் ஆட்சியின் இறுதி நாட்களில் ஜிம்பாப்வேயின் பொருளாதார நெருக்கடியை, சமீப ஆண்டுகளாக வெனிசுவெலாவில் உலகம் கண்ட பொருளாதார வீழ்ச்சியை , 2010க்கு பின் கிரீஸ் கண்ட பொருளாதார நெருக்கடியை, இப்போது இலங்கை சந்தித்து வருகிறது.

மணிவண்ணன் திருமலை, பிபிசி தமிழின் முன்னாள் ஆசிரியர்

அந்நிய செலவாணி… பண வீக்கம்

சுதந்திர இலங்கையில் முன்னெப்போதும் கண்டிராத பொருளாதார நெருக்கடி என்று பொருளியல் வல்லநர்கள் வர்ணிக்கும் இந்த கொந்தளிப்பு, இன மோதலின் முடிவுக்குப் பின்னர் , இலங்கை சமூக அமைதியையும், பொருளாதார வளர்ச்சியையும் நோக்கி நடைபோடும் என்ற எதிர்பார்ப்பை குலைத்திருக்கிறது.

கடும் பொருளாதார நெருக்கடி என்று தலைப்பு செய்திகளில் வர்ணிக்கப்படும் இலங்கையில் , அந்நிய செலாவணி கையிருப்பு பெருமளவில் குறைந்து, இறக்குமதிகள் பாதித்து, உள்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பயன்படுத்தக்கூடிய அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு சில நாட்கள் முன் வரை 300 மிலியன் டாலர்களாக குறைந்துவிட்டது. இந்த நிலையில், இலங்கை, வரும் ஜூலை மாதம் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்குக் கட்ட வேண்டிய கடன் மட்டும் 1 பிலியன் டாலர்கள் என்றால், இலங்கை எதிர்கொள்ளும் அபாயத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

பணவீக்கம் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படியே 17 சதவீதத்துக்கு மேல் போய்க்கொண்டிருக்கும் நிலையில், அன்றாட வாழ்க்கை பெரும் போராட்டமாயிருக்கிறது பொதுமக்களுக்கு. அரிசி, பால் மாவு , சர்க்கரை, சமையல் எரிவாயு , எண்ணெய் என்ற எல்லா உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள நிலையில் தெருக்களில் மக்களின் கோபம் வெடித்திருக்கிறது.

உண்மை காரணங்கள்

பிரச்சனையின் உடனடிக்காரணங்களாக, 2019 அதிபர் தேர்தலில் வெல்ல, கோட்டாபய ராஜபக்ஷ அளித்து , பின்னர் நிறைவேற்றிய வரி குறைப்பு வாக்குறுதிகள்தான் என்று சொல்லப்பட்டாலும், உண்மையான காரணங்கள் இன்னும் ஆழமானவை.

விடுதலைப் புலிகள் 2009ல் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின் , இலங்கையின் பொருளாதாரம் , போரின் தாக்கத்திலிருந்து மீண்டு பொருளாதார வளர்ச்சியை காணத் தொடங்கியதென்னவோ உண்மைதான்.

போரின் இறுதி ஆண்டுகளிலேயே, போரினால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையிலிருந்து வெளியே வர, ராஜபக்ச அரசு பன்னாட்டு நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எஃப்) கடன் வாங்கியது. போர் முடிந்த 2009லிருந்து ஒரு சில ஆண்டுகள் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு 8 – 9 சதவீதம் அளவுக்கு வளர்ந்து, இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவு உயர்த்தியது.

கானல் திட்டங்களும், சீனக் கடனும்

ஆனால், சீனாவைப் போல பெரும் கட்டமைப்பு திட்டங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தலாம் என்று மஹிந்த கணக்குப் போட்டார். தன் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் இலங்கையின் இரண்டாவது பெரிய துறைமுகம், மாத்தளையில் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் , அம்பாந்தோட்டையில் தன் பெயரில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் , கொழும்பு துறைமுக நகர் திட்டம் என்று பல மெகா திட்டங்கள் போட்ட ராஜபக்ஷ, இந்த திட்டங்கள் வணிகரீதியாக லாபம் தருமா என்று சரியாக பரிசீலிக்கவில்லை. கடன் தர பன்னாட்டு நிறுவனங்கள் மறுத்த நிலையில் , இதே போன்ற பல வணிகரீதியான சிக்கலான திட்டங்களுக்கு உலகின் வேறு பல நாடுகளில் கடன் தந்த சீனா, இலங்கைக்கும் கடன் தந்தது. அதிக வட்டியுடன் !

ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகத்திட்டம் எதிர்பார்த்தபடியே எந்த லாபத்தையும் தராத நிலையில், அந்தத் துறைமுகத்தையே நிர்வகிக்கும் பொறுப்பை சீன கம்பெனியிடம் தாரைவார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது இலங்கை. இன்று சீனாவிடம் வாங்கிய சுமார் 5 பிலியன் டாலர்களுக்கும் மேலான கடனை தள்ளிவைக்க சீனாவிடம் கெஞ்ச வேண்டிய நிலையில் இருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ.

சீனக் கடன்கள் மட்டும் இலங்கையின் பொருளாதார சிக்கல்களுக்கு ஒரே காரணம் அல்ல.

தொடர் தவறுகள், அடி மேல் அடி

விவசாயத்தில் பசுமைப் புரட்சி மூலம் இந்தியா கண்ட தன்னிறைவை இலங்கை இன்னும் எட்டமுடியாத நிலை நீடிப்பதும் மற்றுமொரு காரணம். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், பால் கூட வெளிநாட்டிலிருந்து பால் மா இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இலங்கையில் இன்னும் நீடிக்கிறது.

சொல்லப்போனால், இலங்கையின் அந்நிய செலாவணி வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் இரு விவசாயம் சார்ந்த பொருட்கள் – தோட்டத்தொழில் உற்பத்தி பொருட்களான , தேயிலை, ரப்பர் ஆகியவைதான்.

2013-14ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருட்கள் சந்தை ( commodities market) விலை வீழ்ச்சியில் இந்த வருவாயும் பாதிக்கப்பட்டது.

இதை சமாளிக்க 2016ல் அப்போதிருந்த மைத்ரிபால சிரிசேன அரசு ஐ.எம்.எஃப்பிடம் மீண்டும் கடன் வாங்கியது.

நிதிப் பற்றாக்குறை ஒட்டு மொத்த உற்பத்தியில் 5 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடன் கிடைத்தது.

ஆனால், 2019 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வர ராஜபக்ஷ சகோதரர்கள் ( அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாத சட்டச்சூழ்நிலை இருந்ததால் , அவர் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்டார்) அளித்த வரி குறைப்பு வாக்குறுதி நிலைமையை இன்னும் மோசமாக்கியது.

‘பாப்புலிஸ்ட்’ வாக்குறுதி என்று வர்ணிக்கப்படும், பொருளாதாரக் கொள்கைகளின்படி அடிப்படையில் பொருளாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் , திட்டமாகக் கருதப்படும் இந்த வரி குறைப்பு, நாட்டின் விற்பனை வரி கட்ட வேண்டிய வரம்பை உயர்த்தி, வரி வருவாயை பெருமளவில் குறைத்தது.

விளைவு, அரசு வருவாய் குறைந்தது.

பெருந்தொற்றால் வீழ்ந்த சுற்றுலா

இதற்கிடையே, 2020ல் ஏற்பட்ட கொரொனா பெருந்தொற்று, இலங்கைப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு சம்மட்டி அடி கொடுத்தது.

இலங்கையின் மற்றொரு அந்நிய செலாவணி ஈட்டும் பெரிய துறையான, சுற்றுலாத்துறை, கொரொனாவின் தாக்கத்தால் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து பெரும் தேக்கத்தை சந்தித்தது.

வருவாயும் குறைந்து கடன் தொல்லையும் அதிகமான நிலையில், டாலர் கையிருப்பு ஏறக்குறைய அடிமட்டத்தை தொட, இறக்குமதிக் கட்டுபாட்டில் இறங்கினார் கோட்டாபய.

இறக்குமதிக் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் மிகமோசமான நடவடிக்கை என்று கருதப்படுவது, விவசாயிகளுக்கு தேவைப்படும் ரசாயன உர இறக்குமதிகளை தடை செய்ததுதான்.

இலங்கையின் விவசாயத்துக்கு தேவைப்படும் ரசாயன உரங்களுக்கு இலங்கை பெரும்பாலும் இறக்குமதிகளையே சார்ந்திருக்கிறது.

ஆண்டுக்கு சுமார் 260 மிலியன் டாலர்கள் செலவு பிடிக்கும் இந்த ரசாயன உர இறக்குமதிகளை கடந்த ஆண்டு கோட்டாபய அரசு தடை செய்து, இலங்கை இனி இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் என்று அறிவித்தது.

எந்த வித முன்னேற்பாடும் செய்யப்படாத இந்த துக்ளக்தனமான அறிவிப்பால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாய உற்பத்தியும் வீழ்ந்தது. இப்போது அரிசிக்காக பர்மா இந்தியா என்று வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு இலங்கை வந்திருக்கிறது.

பொருளாதார ரீதியில் தொடர்ச்சியான பல தவறான நடவடிக்கைகள், அரசியல் ரீதியில் வெறும் பெரும்பான்மை இன வாதம், மக்களை மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும் துண்டாடும் அரசியல் என்ற பல காரணிகள், தென்னாசியாவின் சிங்கப்பூராக வளர்ந்திருக்கக்கூடிய இலங்கையை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கின்றன.

இந்த நிலையிலிருந்து இலங்கை மீள முடியும். ஐ.எம்.எஃப்பும், உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களும், இந்தியா உள்ளிட்ட சில அண்டை நாடுகளின் உதவியும், இலங்கை திவாலாகாமல் காப்பாற்றலாம்.

ஆனால் , அது நடந்து பொதுமக்கள் நிலை பழைய நிலைக்கு வர இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும்.

இலங்கையில் இன மோதலால், இரண்டு தலைமுறைகள் வளர்ச்சியை பறிகொடுத்தன. இப்போது மோசமான அரசியல் மற்றும் பொருளாதாரரீதியில் தவறான நிர்வாகத்தால் இன்னொரு தலைமுறையும் பலிகடாவாகப் போகிறது என்ற அச்சம் இருக்கிறது.


(கட்டுரையாளர் பிபிசி தமிழின் முன்னாள் ஆசிரியர், லண்டனிலிருந்து எழுதும் மூத்த செய்தியாளர்)

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?