அந்தத் தம்பதியின் பெயர் சஞ்சீவ் மற்றும் சாதனா பிரசாத். சஞ்சீவுக்கு வயது 61, சாதனாவுக்கு வயது 57. இவர்களுக்கு ஒரே மகன். மகனுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியிருக்கின்றது. இந்நிலையில் தம் மகனும் மருமகளும் பேரக்குழந்தைகளைப் பெற்றெடுக்கவில்லை என இத்தம்பதியினர் ஒரு வழக்குத் தொடுத்திருக்கின்றனர்.
வழக்கமாக நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்கு நடக்கும். அதில் குழந்தையைத் தந்தையிடம் விடலாமா, தாயிடம் விடலாமா என்றுதான் நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பு சொல்லும். தீர்ப்பு வரும் வரை குழந்தை தாயிடம் இருக்கும். ஆனால் இங்கே ஒரு தாத்தாவும் பாட்டியும் பிறக்காத ஒரு பேரக்குழந்தைக்கு உரிமை கோரி வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
இந்த வழக்கு நடப்பது இந்தியாவில் என்பதால் இந்த செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி வருகிறது.
சஞ்சீவும் சாதனா பிரசாத்தும் தங்கள் மகனை ஒரு விமானியாக்குவதற்கு பெரும் தொகையைச் செலவழித்திருக்கிறார்கள். மட்டுமல்ல மகனது ஆடம்பர திருமணம் மற்றும் தேனிலவுக்கும் தமது வருமானத்தைச் செலவழித்திருக்கிறார்கள். இவ்வளவு செலவழித்தும் தனது மகன் பேரக்குழந்தையைப் பெற்றுக் கொள்ளவில்லை எனப் பெற்றோருக்கு கடும் வருத்தம் இருக்கிறது.
தன் பெற்றோரின் வழக்கு குறித்து அந்த மகனும் அவரது மனைவியும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. என்றாலும் முதிய தம்பதியினர் அளித்திருக்கும் நீதிமன்ற மனுவை விரிவாகப் படித்தால், பிரசாத் தம்பதியினருக்கும் அவர்களது மகனின் குடும்பத்திற்கு இடையேயான உறவுகள் இறுக்கமாக இருப்பதைக் காட்டுகிறது.
ஊடகங்களிடம் பேசிய சாதனா பிரசாத், தனது மகனும் மருமகளும் குழந்தைகளைப் பெற மறுப்பது குறித்து கடும் வருத்தமடைந்திருக்கிறார். பொதுவில் இந்தியாவில் மணமாகி ஓரிரு வருடங்களில் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் சொந்த பந்தம், உற்றார் உறவினர் அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதன் பிறகு குழந்தைப் பேற்றுக்காக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். கூடவே கிசுகிசுவாக குழந்தை பெற்றுக்கொள்ளாதவர்களை அவதூறு செய்வார்கள். இதெல்லாம் தமக்கு மன வருத்தத்தை அளிப்பதாகச் சாதனா கூறுகிறார்.
"எனவே எங்களுக்கு நீதிமன்றத்திற்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் அவர்களுடன் இது குறித்து அவ்வப்போது பேச முயற்சித்து வருகிறோம். ஆனால் பேரக்குழந்தைகளின் பிரச்சினையை எழுப்பும் போதெல்லாம் அவர்கள் தவிர்க்கிறார்கள். அவர்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் எங்களது குடும்பப் பெயர் பாதிப்படையும் அல்லது குடும்பத்தின் வம்சாவழியே நின்று விடும்," என்று அவர் கூறினார்.
"நாங்கள் மிகவும் மகிழ்ச்சியற்றவர்கள்," என்று அவரது கணவர் சஞ்சீவ் கூறினார். "நாங்கள் ஓய்வு பெற்றவர்கள். நாங்கள் தாத்தா பாட்டிகளாக இருக்க விரும்புகிறோம். அவர்களின் குழந்தைகளைக் கூட நாங்கள் கவனிக்கத் தயாராக இருக்கிறோம். பேரக்குழந்தைகள் பொதுவாக முதியவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறார்கள், ஆனால் எங்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை." என்று அவர் வருத்தப்படுகிறார்.
பேரக்குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்காததால் ஏமாற்றமடைந்த பெற்றோர்கள் அதற்காக நீதிமன்றத்தை நாடியது இந்தியாவில் முதல்முறையாக இருக்கலாம். ஆனால் பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல இந்தியாவில் குழந்தை பெறுவது கிட்டத்தட்ட ஒரு ஜோடியின் முடிவு அல்ல. அது இரு தரப்பு குடும்பத்தினரின் முடிவாகவே இருக்கிறது.
ஒவ்வொருவரும் - பெற்றோர் மற்றும் மாமியார் முதல் இதர நெருங்கிய மற்றும் தூரமான உறவினர்கள் மற்றும் பரந்த சமூகம் வரை - இந்த விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர். அது என்னவென்றால் திருமணமான கையோடு குழந்தை பெறுவதற்கான பேச்சை ஆரம்பித்து விடுவார்கள். சொல்லப் போனால் திருமணத்தன்று கையில் போட்டுக் கொண்ட மருதாணி காய்வதற்கு முன்னாலேயே இந்த பேச்சுக்கள் இளந்தம்பதியினரை முற்றுகையிடுகின்றன.
"இந்தியாவில், திருமணங்கள் என்பது ஒரு ஜோடிக்கு இடையே நடப்பது இல்லை. மாறாக அந்த ஜோடியினது குடும்பங்களுக்கு இடையே நடக்கின்ற ஏற்பாடு" என்று சமூக மானுடவியலாளர் பேராசிரியர் ஏ.ஆர்.வாசவி விளக்குகிறார்.
இதில் பிரசாத் போன்ற இளந்தம்பதியினரது பெற்றோர்களின் உடனடி எதிர்பார்ப்பே பேரக்குழந்தைகள் எப்போது பிறப்பார்கள் என்பதே. இது ஒரு இயல்பான கலாச்சாரமாகவே இந்தியாவில் இருக்கிறது.
"எங்கள் சமூகத்தில் திருமணம் என்பது இனப்பெருக்கத்தைப் புனிதப்படுத்தும் ஒரு நிறுவனமாகப் பார்க்கப்படுவதால், ஒரு பேரக்குழந்தைக்கான உரிமை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். மேலும் திருமணமானதுடன் நீங்கள் குடும்பம், சாதி மற்றும் சமூகத்திற்காக இனப்பெருக்கம் செய்த ஆக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்கிறார் வாசவி.
பிள்ளைகளது கல்வி மற்றும் வளர்ப்பிற்குப் பெற்றோர் பணத்தைச் செலவிட்டிருப்பதால், மணம் செய்த பிள்ளைகள் விரும்பினாலோ இல்லை விரும்பாமல் இருந்தாலோ கவலை இல்லை. அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது அவர்களைப் பெற்றவர்களது கலாச்சார உரிமை என்று கருதுகிறார்கள். இந்தக் கலாச்சாரக் காரணத்தைத் தான் செலவழித்த பொருளாதாரக் காரணிகளை முன்வைத்து நியாயப்படுத்துகின்றனர்.
சாதி, வகுப்பு, மத வேறுபாடுகளைக் கடந்து, நகர்ப்புறம்-கிராமப்புறம் என்ற பாகுபாட்டைத் தாண்டி பேரக்குழந்தைகளை அவர்களுக்கு வழங்குவது தங்கள் பிள்ளைகளின் கடமை என்று இந்த பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பத்திரிகையாளர் ரிது அகர்வால் இதற்காக இந்தியாவின் பெரும் பணக்கார குடும்பம் ஒன்றினை உதாரணமாகக் காட்டுகிறார். 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் - பில்லியனர் அதிபர் முகேஷ் அம்பானி - ஒரு வாரிசை உருவாக்குவதற்கான நேரம் இது என்று தனது புதிய மருமகள் ஷ்லோகாவிடம் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். இது அப்போது ஊடகங்களின் தலைப்புச் செய்தியானது.
முகேஷ் அம்பானி தனது மருமகளின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கதை வடிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனது மருமகளிடம் "அடுத்த ஆண்டு நான் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் நேரத்தில், நான் ஒரு தாத்தாவாக மட்டுமல்ல, நீங்கள் ஒரு தாயாகவும் இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்," என்று கூறியிருக்கிறார். வெளிநாடுகளில் குழந்தை பெறுவது திருமணம் செய்த தம்பதியினர் குறிப்பாகச் சம்பந்தப்பட்ட பெண்ணின் முடிவோடு தொடர்புடையது. ஆனால் இங்கே ஒரு மாமனார் மருமகளுக்குப் பேரக்குழந்தை பெற்றுக் கொள்ளும் தேதியையே அறிவிக்கிறார்.
அதே போன்று அடுத்த 18 மாதங்களுக்குள், முகேஷ் அம்பானியின் மருமகள் ஷ்லோகா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இந்தியாவில், வயதான காலத்தில் பெற்றோரைக் கவனித்துக் கொள்வது ஒரு மகனின் "தார்மீக மற்றும் சட்டப்பூர்வமானக் கடமை" என்று உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால் குழந்தையைப் பெறுவதா இல்லையா என்பது அடிப்படையில் ஒரு பெண்ணின் முடிவு என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் பல திருமணமான பெண்கள் குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் இனப்பெருக்கம் செய்வதற்கான அழுத்தம் பலவகைகளில் ஏற்படுகிறது. இதுவே அந்தப் பெண்களுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. திருமணம், குடும்பம் என்பதைத் தாண்டி குறிப்பிட்ட கால இலக்கிற்குள் குழந்தை பெற்றுக் கொள்ளா விட்டால் இந்த சமூகம் நம்மை மதிக்காது என்று அந்தப் பெண் துன்புறுத்தப்படுகிறாள்.
தெற்கு நகரமான பெங்களூரில் உள்ள வணிக ஆய்வாளரான 46 வயதான சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசியிடம் பேசிய போது, அவரது பெற்றோர் அவர் 21 வயதில் கல்லூரிப் படிப்பு முடித்த உடன் திருமணம் செய்து வைத்ததைக் கூறுகிறார்.
திருமணம் முடிந்த பிறகு சுதாவிடம் குடும்ப விழாக்கள் பலவற்றிலும் அவரது மாமியார்களின் உறவினர்கள், 'எப்போது எங்களுக்கு நல்ல செய்தியைக் கூறுகிறீர்கள்?' என்று கேட்பார்கள். அதாவது எப்போது சுதா குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் என்பதுதான் அந்தச் செய்தி. அப்போது சுதாவிற்கு வயதும் அனுபவமும் குறைவு. கேள்வி கேட்கின்ற உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று அவருக்கு தெரியவில்லை. அந்தக் கேள்விகள் அவரை அச்சுறுத்துவதாகவும், ஒவ்வொரு முறையும் குற்ற உணர்வை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார். மணமான பெண்கள் வீட்டை விட்டு வெளியே ஏதாவது பொது நிகழ்ச்சிக்கு சென்றாலே இந்த கேள்விகளை ஆளாளுக்கு கேட்பார்கள்.
சுதாவிற்கு இது நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப திருமணமான முதல் அல்லது இரண்டாவது வருடத்திலேயே குழந்தை பெற்றுக் கொண்டனர்.
சரி இது அந்தக் காலம் என்று வைத்துக் கொண்டால் இப்போது என்ன நடக்கிறது?
"இன்றும் கூட, பெரும்பாலான பெண்கள், குறிப்பாகச் சிறிய நகரங்கள் மற்றும் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் தமது உறவினர்கள் குழந்தை பெறச்சொல்லிக் கேட்டால் அதைக் கேள்வி கேட்பதில்லை. அனுசரணையுடன் அதை நிறைவேற்றுகிறார்கள்” என்கிறார் சுதா.
மேற்கண்ட சஞ்வீவ், சாதனாவின் வழக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று சொல்கிறார் சுதா. ஆனால் இது சமூகத்தில் அப்படித்தான் நடைபெறுகிறது என்பதையும் ஏற்கிறார்.
சுதாவின் உறவுப் பெண்ணின் பெயர் சிருஷ்டி. அவருக்கு வயது 28. சிருஷ்டிக்கு திருமணம் முடிந்த பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் பல முறை குழந்தை பெறுமாறு கேட்டிருக்கின்றனர். திருமணமான ஆறு மாதங்களிலேயே சிருஷ்டியின் மாமனாரும் மாமியாரும் இது பற்றி பேசியிருக்கின்றனர்.
ஆனால் சிருஷ்டியும் அவரது 30 வயது கணவரான மென்பொருள் பணியாளரும் உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை.
"இது நிச்சயிக்கப் பட்ட திருமணம் என்பதால் நாங்கள் ஒருவரையொருவர் நன்கு தெரிந்துகொள்ளவும், எங்கள் பிணைப்பை ஆழப்படுத்தவும், இந்த நேரத்தில் எங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். "குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு நீண்ட கால திட்டமாகும். மேலும் ஒரு தம்பதியினர் மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் குழந்தை பெறுவதற்குத் தயாராக வேண்டும். அது வரை குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று நான் நினைக்கிறேன்,” என்கிறார் சிருஷ்டி.
இப்போதும் சிருஷ்டியிடம் இத்தகைய கேள்விகள் அதாவது குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து அடிக்கடி வரத்தான் செய்கின்றன. அவர் அது ஏன் சரியில்லை என்று பொறுமையாக விளக்குகிறார். அதற்கு பிறகும் கேட்டவர்கள் ஏற்கவில்லை என்றால் ஒரு தலையசைப்புடன் புறக்கணித்து விட்டுச் செல்கிறார்.
ஆனால் சிருஷ்டியைப் போல இந்தியப் பெண்கள் எத்தனை பேருக்கு இந்தப் பக்குவம் இருக்கிறது என்பது கேள்விக்குறி? ஆணாதிக்கத்தின் ஆகக் கொடுமையான பண்பாக இந்த குழந்தைப் பேறு இருக்கிறது. பெண்ணுக்கு என்று ஒரு ஆளுமையோ, வாழ்க்கையோ இருப்பது குறித்து இந்தியச் சமூகம் நினைப்பதில்லை. அவள் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஒரு எந்திரமாக மட்டுமே பார்க்கிறது.
சிருஷ்டிகள் நிறையப் பேர் உருவாக வேண்டும். இந்த அநீதியான பண்பை எதிர்த்து இளம் பெண்கள் போர்க்கொடி உயர்த்த வேண்டும். அப்போதுதான் இந்த கொடுமைக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp