அம்பானி கதையில் அரசியல் எதற்கு என்று கேட்கிறீர்களா..? திருபாய் வியாபாரத்தை ஒரு கண்ணாக மதித்து கருத்தாகப் பல விஷயங்களைச் செய்தார் என்றால், மறுபக்கம், அரசியல்வாதிகளை வைத்து கச்சிதமாகக் காய் நகர்த்தி வந்தார். எனவே அரசியலின்றி அம்பானியின் கதையோ, ரிலையன்ஸின் கதையையோ முழுமையாகக் கூற முடியாது.
1977ல் இந்திரா காந்தியைத் தோற்கடித்துவிட்டு, ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகளில், ராஜ் நாராயண் மற்றும் சரண் சிங் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஜனதா கட்சி ஆட்சியை இழந்தது.
இந்திரா காங்கிரஸ், சரண் சிங்கின் அரசை சில காரணங்களால் ஆதரிக்கவில்லை. எனவே இந்தியாவின் ஆறாவது மக்களவை கலைக்கப்பட்டு, ஏழாவது மக்களவைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அதில் இந்திரா காந்தி பிரதமரானார்.
வெற்றி பெற்ற இந்திரா காந்திக்கும் டெல்லி அசோகா ஹோட்டலில் மிகப் பெரிய வெற்றி விழா போன்றதொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியின் முக்கிய ஸ்பான்சர் திருபாய் அம்பானி என்று கூறப்பட்டது. இந்திரா காந்தி அமர்ந்திருந்த அதே மேடையில், திருபாயும் அமர்ந்திருந்தார் என்பது தான் அன்று பத்திரிகையாளர்களுக்குள்ளேயே பெரும் ஆச்சரியத்தைக் கிளப்பிய விஷயம்.
1979ஆம் ஆண்டு, நிறுவனத்தின் விற்பனை, லாபம், சொத்து மதிப்பு போன்றவையின் அடிப்படையில், இந்தியாவின் டாப் 50 நிறுவனங்களில் ஒன்றாக இருந்த ரிலையன்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் டாப் 5 நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து நின்றது.
இந்த ஐந்து ஆண்டுகளுக்குள் தொழிலதிபராக இருந்த திருபாய் அம்பானி, மெல்ல அரசியல் ஆளுமைமிக்க நபராகவும், பிறகு ஒரு வகையில் ஒட்டுமொத்த இந்திய அரசையே ஆட்டுவிக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்த மனிதராகவும் வளர்ந்தார் எனலாம்.
நிதி அமைச்சகம், வணிக அமைச்சகம்... என அவருக்குத் தேவையான துறைகள் மட்டுமின்றி, இந்திய அரசின் பல முக்கிய அலுவலகங்களில் அவருக்கான நபர்கள் இருந்ததாக ஒரு கருத்து நிலவியது.
1980களின் தொடக்கத்தில் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியாவிலேயே பாலியஸ்டர் ஃபிலமெண்ட் யான் தயாரிப்பதற்கான அனுமதி கிடைத்தது. அப்போது ஒட்டுமொத்த இந்தியாவிலேயே பாலியஸ்டரின் தேவை 10,000 டன்னுக்கும் குறைவு தான். ஆனால், அம்பானிக்கு ஒரே கையெழுத்தில் 10,000 டன் பாலியஸ்டர் தயாரிக்க அனுமதி கிடைத்தது.
1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாதால் கங்கா ஆலையில் பாலியஸ்டர் ஃபிலமெண்ட் யான் உற்பத்தி தொடங்கிய பின், ஒரு டன் பாலியஸ்டர் ஃபிலமென்ட் யான் இறக்குமதிக்கு 15,000 ரூபாயைக் கூடுதல் வரியாக விதித்தது இந்திய அரசு. பாலியஸ்டர் இறக்குமதி செய்து வரியைச் செலுத்துவதற்குப் பதிலாக, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பாலியஸ்டரை வாங்கிக் கொள்ளலாம் என வியாபாரிகளை உந்தித் தள்ளியது. மறுபக்கம் ரிலையன்ஸும் கொழுத்த லாபம் வைத்து பாலியஸ்டர் யானை விற்க வழி வகுத்தது.
1983ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த பாலியஸ்டர் யான் உற்பத்தி 17,600 டன்னைத் தொட்டது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே, மொத்த உற்பத்திக்கான உரிமம் 25,125 டன்னாக முன் தேதியிடப்பட்டு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாலியஸ்டர் இழைகளைத் தயாரிக்க பிடிஏ என்றிழைக்கப்படும் பியூரிஃபைட் டெராப்தலிக் ஆசிடை உற்பத்தி செய்ய விரும்பினார். அதையும் பாதால் கங்காவில் ரிலையன்ஸின் ரசாயன ஆலையிலேயே தயாரிக்கத் திட்டமிடப்பட்டது.
1985 முதல் 1990 காலகட்டத்திற்குள் ரிலையன்ஸ் நிறுவனம் பாலியஸ்டர் ஸ்டேபில் ஃபைபர் தொடங்கி, பாலியஸ்டர் யான், லீனியர் அகில்பென்சைன் (linear alkylbenzene), பிடிஏ, பாராக்சிலின் (Paraxylene) என பாலியஸ்டருக்கான பல மூலப் பொருட்களை ரிலையன்ஸ் நிறுவனமே இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கியது.
கடைசியாக, அந்த ரசாயனங்கள் பெட்ரோலியப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்பதால், பெட்ரோலிய பொருட்களையும் ரிலையன்ஸ் தயாரிக்க விரும்பியது. இதை ஆங்கிலத்தில் Backward Integration என்பார்கள்.
1984 - 85 காலகட்டத்தில் 75,000 டன் பி டி ஏ ஆசிடை பாதால் கங்காவில் தயாரிக்கவும், 45,000 டன் பாலியஸ்டர் ஸ்டெபில் ஃபைபர் மற்றும் 40,000 டன் மோனோ எதிலின் கிளைகால் ஆலைக்கும் அனுமதி கிடைத்தது. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் யாருமே பி டி ஏ ஆசிடை உற்பத்தி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1986ஆம் ஆண்டு பாலியஸ்டர் ஸ்டேபில் ஃபைபர் மூலப் பொருளைத் தயாரிக்கும் ஆலை ரிலையன்ஸுக்குச் சொந்தமான பாதால் கங்காவில் தொடங்கப்பட்டது.
இந்திய அரசின் சில சட்டங்கள், நிறுவனத்தின் முதல் மூன்று எழுத்துக்கள் R, E, L என்கிற வரிசையிலும், கடைசி மூன்று எழுத்துக்கள் N,C,E என்றும் இருக்க வேண்டும். மத்தியில் உள்ள இரண்டு எழுத்துக்கள் I, A என்கிற வரிசையில் இருக்கின்ற நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது போல இருந்தன. சுருக்கமாக ரிலையன்ஸ் விரும்பியது எல்லாம் வியத்தகு வேகத்தில் நடந்தன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com