கல்லீரல் : இந்த பிரச்னைகள் இருந்தால் உங்கள் கல்லீரல் நாலமாக இல்லை - 19 அறிகுறிகள் மாதிரிப்படம்
ஹெல்த்

கல்லீரல் : இந்த பிரச்னைகள் இருந்தால் உங்கள் கல்லீரல் நலமாக இல்லை - 19 அறிகுறிகள்

கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்றால் அவருடைய ஒட்டுமொத்த உடலும் பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்குகிறது. உங்கள் கல்லீரல் முழுமையாக செயல்படவில்லை அல்லது உங்கள் கல்லீரல் பிரச்சனையை எதிர்கொள்கிறது என்பதை கண்டுபிடிக்க சில முக்கிய அறிகுறிகளை இங்கே பட்டியலிடுகிறோம்.

NewsSense Editorial Team

மனித உடலில் உள்ள எல்லா உறுப்புகளுமே நம் உடலை சீராக வேலை செய்ய உதவுகிறது. நம்மில் பலரும் இதயம் மற்றும் அது சார்ந்த விஷயங்களை ஓரளவுக்காவது தெரிந்து வைத்துக் கொள்கிறோம்.

காரணம் நம் வீட்டிலோ அல்லது நம் உறவினர்கள் வீட்டிலோ அல்லது நண்பர்கள் வீட்டிலோ இதய நோயால் பாதிக்கப்படுவதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும் சொல்லிக் கேள்விப்படுகிறோம் அல்லது நிறைய செய்திகளில் பார்க்கிறோம்.

கிட்டத்தட்ட இதயத்திற்கு நிகராக நம் உடலில் மற்றொரு உறுப்பும் அதி தீவிரமாக செயல்பட்டு நம் உடலை சீராக வைத்துக்கொள்கிறது. அந்த உடல் உறுப்பின் பெயர் கல்லீரல்.

கல்லீரல் மனித உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கிறது, பல்வேறு வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களை தன்னுள் சேகரித்து வைத்துக் கொள்கிறது, இதெல்லாம் போக பித்த நீரைச் சுரக்கிறது.

ஒருவருடைய கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்றால் அவருடைய ஒட்டுமொத்த உடலும் பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்குகிறது. உங்கள் கல்லீரல் முழுமையாக செயல்படவில்லை அல்லது உங்கள் கல்லீரல் பிரச்சனையை எதிர்கொள்கிறது என்பதை கண்டுபிடிக்க சில முக்கிய அறிகுறிகளை இங்கே பட்டியலிடுகிறோம்.

கல்லீரல்

செரிமானப் பிரச்சனைகள்

பொதுவாக நாம் அதிகப்படியாக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அல்லது அதிக சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒரு விஷயம்தான். அஜீரணத்துக்கு ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பது அல்லது செரிமானத்திற்கு சுடு தண்ணீர் குடிப்பது, காபி & டீ போன்ற பானங்களை குடிப்பது என அவரவர்கள் தங்களுக்கான யோசனைகளை செயல்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி எப்போதாவது அஜீரணப் பிரச்சனை ஏற்பட்டால் தவறில்லை. ஆனால் அடிக்கடி அஜீரணப் பிரச்சனை ஏற்படுகிறது என்றால், அது உங்கள் கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்பதற்கு ஒரு சமிக்ஞை. எனவே கூடிய விரைவில் மருத்துவரை அணுகி கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.

கணத்த கல்லீரல்

ஒருவருடைய கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் சேர்ந்தால் அவருடைய கல்லீரல் குணமாகி விடும். இதை ஆங்கிலத்தில் ஃபேட்டி லிவர் என்றும் சொல்வர். அய்யய்யோ எதோ பெரிய பாதிப்பு வந்து விட்டது என்று பதர வேண்டாம். உங்கள் உணவில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த பொருட்களை குறைத்துக்கொண்டு உடல் எடையைக் குறைத்தாலே கூடிய விரைவில் ஃபேட்டி லிவர் பிரச்சனையை சரி செய்துவிடலாம். அதே நேரம் மருத்துவர்களைச் சந்தித்து, சிகிச்சை & மருந்துகளை எடுத்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.

வயிற்று வலி

தொடர்ந்து வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கிறது அதுவும் குறிப்பாக வயிற்றின் வலது மேல் பக்கத்தில் வலிக்கிறது என்றால் அது கல்லீரல் உறுப்பிலிருந்து வரும் வழி என்று கருதலாம். ஒருவேளை இந்த வயிற்றுவலி காரணமாக உங்கள் வலது கை மற்றும் தோள்பட்டை வரை வலி எடுக்கிறது என்றால், அது கல்லீரல் புற்றுநோயாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே ஒரு சில நாட்களுக்கு வயிற்று வலி தொடர்ந்து இருக்கிறது என்றால், அதை தயவுசெய்து அலட்சியப்படுத்திவிடாமல் மருத்துவரை அணுகி உடனடியாக சிகிச்சையை தொடங்குங்கள்.

கல்லீரல் வீக்கம்

கல்லீரல் வீக்கம் பல்வேறு காரணங்களால் ஏற்படும். குறிப்பாக, ஒருவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்தால் அவருடைய கல்லீரல் உறுப்பு வீக்கம் காணும். துரதிர்ஷ்டவசமாக ஒருவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருக்கிறது என்றால், புற்றுநோய் முற்றிய பிறகு அதற்கான அறிகுறிகள் வெளிப்படும். எனவே கல்லீரல் வீக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

Liver

கடுமையான சோர்வு

உடல் அதிகமாக சோர்வடைவதற்கு கல்லீரல் பிரச்சனைகள் மட்டுமே காரணமல்ல. ஆனால் ஃபேட்டி லிவர், லிவர் சிரோசிஸ், கல்லீரல் புற்றுநோய்… போன்ற பிரச்சனைகளால் உங்கள் உடலில் உள்ள கல்லீரல் உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் மற்றும் நுண் தாதுச் சத்துகளை சேகரிக்க முடியாமல் போகலாம். இப்படி உங்களுடைய உடல் சீராக செயல்படமுடியவில்லை என்றால், மிக அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் தவிப்பீர்கள். அதீத சோர்வு உங்களை ஆட்டிப்படைக்கும். இதுபோல சில வாரங்களுக்கு தொடர்ந்து நீங்கள் சோர்வாக இருப்பதாகத் தோன்றினால் அல்லது நண்பர்கள் உங்கள் சோர்வைச் சுட்டிக்காட்டினால் மருத்துவரை அணுகுங்கள்

பசியற்ற தன்மை

இன்று மனிதர்கள் மூன்று வேளை சாப்பிடுவது கிட்டத்தட்ட உலகம் முழுக்க ஒரு வாடிக்கையாகிவிட்டது. இந்த மூன்று வேளையில் குறைந்தபட்சம் இரண்டு வேளையாவது பசி எடுத்து நன்றாக சாப்பிடும் பலரையும் நாம் பார்த்திருப்போம். கடந்த சில தினங்களாக அல்லது சில வாரங்களாக பசிக்கவில்லை, சரியாக சாப்பிடவே இல்லை என்றால் அதற்கு உங்கள் மன சோர்வு, மன அழுத்தம் போன்றவைகள் கூட காரணமாக இருக்கலாம். அதெல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது, நான் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறேன், ஆனாலும் பசி எடுக்கவே இல்லை என்றால் அது கல்லீரல் பிரச்சனையாக இருக்கலாம். குறிப்பாக அதிக மதுபானம் அருந்துபவர்களுக்கு லிவர் சிரோசிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு பசியற்ற தன்மை ஏற்படலாம். எனவே தொடர்ந்து ஒரு சில வாரங்களுக்கு நீங்கள் நல்ல மனநிலையில் இருந்தும் பசி இல்லை என்றால் மருத்துவர் அழைத்துப் பேசிவிடுங்கள்.

மஞ்சள் காமாலை

ஒருவர் உடலின் நிறம் மஞ்சள் நிறமாகவும் கண்களில் உள்ள வெள்ளை படலத்தில் மஞ்சள் நிறமாகவும் மாறினால் அவர் உடலில் உள்ள ரத்தத்தில் வழக்கத்தைவிட அதிக அளவில் பித்த நீர் அல்லது பிலிருபி (bilirubin) கலந்து இருக்கிறது என்று சொல்லலாம். இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் உங்கள் உடலில் உள்ள கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்று பொருள்.

அடிக்கடி வாந்தி எடுப்பது

பெண்கள் பேறு காலத்தில் அடிக்கடி வாந்தி எடுப்பது அல்லது சில மணி நேரங்களுக்கு முன் சாப்பிட்ட உணவு பொருட்கள் சரியாக சமைக்கப்படவில்லை அல்லது கெட்டுப்போன பொருளைச் சாப்பிட்டு இருந்தால் வாந்தி எடுப்பது எல்லாம் சாதாரண விஷயம்தான். ஆனால் நீங்கள் அடிக்கடி வாந்தி எடுக்கிறீர்கள் என்றால் உங்கள் கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை, நீங்கள் லிவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று பொருள்.

வெளிர் நிற மலம்

தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழிப்பது நல்லது. அப்படி மலம் கழிக்கும் போது, என்ன நிறத்தில் வெளியேறுகிறது என்பதையும் கொஞ்சம் கவனத்தில் கொண்டால் இன்னும் நல்லது. வழக்கமாக மலத்தின் நிறம் மஞ்சள் நிறமாக இருக்கும். இது நீங்கள் உட்கொள்ளும் உணவைப் பொறுத்து மாறலாம். ஆனால், தொடர்ந்து வெளிர் நிறத்தில் உங்கள் மலம் வெளியேறினால், உங்கள் கல்லீரல் பிரச்சனையை எதிர்கொள்கிறது என்று பொருள்.

அடர் நிற சிறுநீர்

வழக்கமாக சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லது வெளிர் வெள்ளை நிறத்தில் வெளியேறும். ஒருவேளை உங்களுடைய சிறுநீர் தொடர்ந்து பல நாட்களாக மிகுந்த அடர் மஞ்சள் நிறத்தில் அல்லது வர டீ (Black Tea) நிறத்தில் வெளியேறினால் உங்களுடைய கல்லீரல் உறுப்பு பிரச்சனைக்குள்ளாகி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். நிறைய தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும் அல்லது இளநீர் குடித்தால் சரியாகிவிடும் என கவனக்குறைவாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

தோலில் அரிப்பு ஏற்படுவது

நம் உடலில் பிலிருபின் (Bilirubin) என்கிற ஒருவித ரசாயணம் சுரக்கும். அது அதிகப்படியாக நம் உடலில் சுரந்தால் தோலில் அரிப்பு ஏற்படும். பிலிருபின் ரசாயணத்துக்கு கல்லீரலே பிரதானம் என்பதால் உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என புரிந்து கொள்ளலாம்.

அடிக்கடி ஏற்படும் காய்ச்சல்

ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு, அடுத்த சில நாட்களில் குணமாகி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது இயல்பான ஒரு விஷயம்தான். ஆனால், சுகாதாரமற்ற உணவை உட்கொள்வது, சரியாக சமைக்கப்படாத உணவைச் சாப்பிடுவது, சுகாதாரமற்ற குடிநீரை குடிப்பது… போன்ற பிரச்சனைகளால் உங்கள் கல்லீரல் பாதிக்கப்படும் போது கூட இப்படி ஒரு வித காய்ச்சல் தொடர்ந்து வந்து வந்து போகும். இப்படி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் தொடர்ந்து காய்ச்சல் விட்டு விட்டு வந்தால் மருத்துவரை சந்திப்பது சாலச்சிறந்தது.

மூக்கு வழியாக ரத்தம் கசிவது

ஒருவருக்கு அதிகப்படியான வறட்சி இருந்தாலோ, சிறிய காயங்களினாலோ மூக்கிலிருந்து ரத்தம் கசிவது மிக இயல்பான ஒன்றுதான். இந்தியாவில் கோடை காலத்தில் டெல்லி போன்ற, அதிக வெப்பமான நகரங்களில் வசிப்பவர்களுக்கு அவ்வபோது மூக்கு வழியாக ரத்தம் கசிவதை நாம் பார்த்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். அப்படி எந்த ஒரு காரணமும் இல்லாமல், அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் கசிகிறது என்றால், ஒருவேளை நீங்கள் லிவர் சிரோசிஸ் என்கிற நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அலட்சியம் வேண்டாம் ப்ளீஸ்.

ஆங்காங்கே தோலில் ஏற்படும் சிவப்பு புள்ளிகள்

நம் உடலில் காயங்களினால் ஏற்படும் சிவப்பு புள்ளிகள் குறித்த எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் திடீரென சிவப்பு புள்ளிகள் நம் தோளில் தோன்றுவது உங்கள் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை வெளிப்படுத்துகிறது. இது Fulminant hepatitis நோயாகக் கூட இருக்கலாம் என்கிறது மருத்துவ உலகம்.

கவனம் செலுத்தி வேலை செய்யமுடியாது (Disorientation)

ஒருவர் ஒரு வேலையில் கவனத்தைச் செலுத்தி வேலை செய்ய முடியாமல் போவதற்கு அவர்களுடைய வாழ்க்கையில் நிலவும் பிரச்சினைகள், மது பழக்கம், போதைப் பொருள் பயன்படுத்துவது, மனச் சோர்வு, மன அழுத்தம்… என பல பிரச்சனைகளை பட்டியலிடலாம். இதில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். லிவர் சிரோசிஸ் மற்றும் Fulminant hepatitis போன்ற கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் கூட, ஒரு மனிதரால் முழுமையாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தி வேலை பார்க்க முடியாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடும் வயிற்றுப்போக்கு

ஒருவர் அவ்வப்போது வயிற்று போக்கினால் பாதிக்கப்படுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. வெளியூர்களுக்கு சென்று சாப்பிடுவது தொடங்கி வெளிநாடுகளில் உள்ள தட்பவெப்பநிலையை நம் உடல் ஏற்றுக்கொள்ளாமல் போவது அல்லது வெளிநாட்டு உணவுகள் தங்களுக்கு ஒத்து வராமல் வயிற்றுப்போக்கு ஏற்படுவது எல்லாம் கூட, மிகவும் சாதாரண விஷயமே. ஆனால் மிகக் குறுகிய காலத்துக்குள் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது என்பது உங்களுடைய பெருங்குடல் அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதின் அறிகுறியாக கருதலாம். உடனடியாக மருத்துவரை அணுகி இந்த விவரங்களை பகிர்ந்து கொள்வது பெரிய பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்ற உதவலாம்.

மலச்சிக்கல்

நல்ல சமச்சீரான உணவை சாப்பிடுகிறீர்கள், வேறு எந்த மருந்து மாத்திரைகளை நீங்கள் எடுத்துக்கொள்வதில்லை. இருப்பினும் திடீரென ஒரு சில வாரங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது என்றால் உங்கள் உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த்தம். கல்லீரல் புற்றுநோய் இருப்பவர்களுக்கு கூட மலச்சிக்கல் ஏற்படும் என்பதை இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.

சுவாசத்தில் துர்நாற்றம்

நீங்கள் நன்றாக பல்துலக்குகிறீர்கள், நல்ல உணவை சாப்பிடுகிறீர்கள் இருப்பினும் நீங்கள் சுவாசிக்கும் போது அல்லது வாய்வழியாக காற்றை வெளியிடும்போது ஒருவிதமான துர்நாற்றம் வீசுகிறது என்றால், உங்கள் கல்லீரல் ஏதோ பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது என்று பொருள்.

பேச முடியாமல் தவிப்பது

தன் மனதில் உள்ளதை தெளிவாகப் பேசக்கூடியவர், இயல்பான குரலில் பேசி வந்தவர்… தற்போது திடீரென நினைப்பதை சரியாக பேச முடியாமல் போனாலோ, அவருடைய குரல் பலவீனப்பட்டு கொண்டே வந்தாலோ, அவருடைய வாயில் ஊறும் எச்சிலின் அளவு அதிகரித்து அதை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாலோ… அவர் வில்சன் டிசீஸ் என்றழைக்கப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். மனித உடலில் இருக்கும் கல்லீரல் அதிக அளவில் காப்பர் உலோகத்தை தனக்குள் சேமித்துவைக்கத் தொடங்கி, அது மெல்ல நம்முடைய உடல் முழுக்க பரவி மூளை போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளை பாதிக்கும். இந்த பிரச்சினை மருத்துவரிடம் செல்வது மட்டுமே ஒரே வழி. கல்லீரல் நலம் காப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?