அமித்ஷா: மோடி-அதானி கூட்டணி முதல் பாஜக மார்கெடிங் வரை; நேர்காணலில் என்ன பேசினார் அமித்ஷா?  Twitter
இந்தியா

அமித்ஷா நேர்காணல்: மோடி-அதானி கூட்டணி முதல் பாஜக மார்கெடிங் வரை- என்ன பேசினார்?

மற்ற கட்சிகள் மீது வாரிசு அரசியல் குறித்த விமர்சனம் இருப்பதுப்போல உங்கள் கட்சியின் மீது தோழமை அரசியல், அதாவது அதானியிடம் தான் அனைத்து ஒப்பந்தங்களும் அளிக்கப்படுகின்றன என்ற விமர்சனம் இருக்கிறதே?

NewsSense Editorial Team

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் ஏ என் ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அதில் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல், அதனை பாஜக எப்படி எதிர்கொள்ளவுள்ளது என்பது குறித்து பேசியிருந்தார்.

பிரதமர் மோடியின் பினாமி அதானி, இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு நாட்டை கைக்குள் வைத்திருக்கின்றனர் என்ற விமர்சனத்திற்கும் அமித் ஷா பதிலளித்திருந்தார். 

அமித் ஷாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன? அதற்கு அவரது பதில்கள் என்ன? இங்கு பார்க்கலாம்

திரிபுராவில் பாஜகவின் வெற்றிவாய்ப்பு குறைவு என்ற கண்ணோட்டம், மற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தான் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற இந்த நிலை, கடந்த தேர்தலின் போது மேற்கொள்ளப்பட்ட  ‘சலோ பல்டாயி’ பிரச்சாரம் குறித்த உங்கள் பதில்? திரிபுராவில் பாஜகவின் நிலை என்ன?

 திரிபுராவில் எந்த கட்சியுடனும் இணையாத கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸுடன் சமாதானமாகி கைக்கோர்த்திருக்கிறது. இவ்விரண்டு கட்சிகளும், தனித்து நின்று பாஜகவை தோற்கடிக்க இயலாது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர்.

கட்சிகள் ஒன்றிணைந்து எங்களை எதிர்பதை நான்  வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். பாஜக வலுப்பெற்றிருப்பதனால், தனித்து எங்களுடன் போட்டியிட யாரும் விரும்பவில்லை. எங்களது ஆட்சிகாலத்தில் மக்களுக்காக ஆற்றிய பணிகளை பெருமிதத்தோடு மக்களிடம் எடுத்துக்கூறி, தேர்தல் வெற்றியடைவோம். 

சலோ பல்டாயி பிரச்சாரம் அரசாங்கத்தையோ, முதலமைச்சரையோ மாற்ற மேற்கொள்ளவில்லை. திரிபுராவின் நிலையை மாற்ற மேற்கொள்ளப்பட்டது. திரிபுராவின் நிலையை பாஜக இன்று மாற்றியும் இருக்கிறது. திரிபுராவில் தினக்கூலி வேலை செய்பவர்களுக்கான ஊதிய கமிஷன் 5இலிருந்து 7 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. வன்முறை ஒழிக்கப்பட்டது.

வடகிழக்கில் இரு மாநிலங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அப்பகுதியில் எது முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. உங்களைப் பொறுத்தவரை எந்த விஷயத்தை முக்கியமானதாகப் கருதுகிறீர்கள்?

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின் வடகிழக்கு மாநிலங்களுக்கு நிறைய செய்திருக்கிறோம். அதில் பிரதானமான விஷயம் அமைதியைக் கொண்டு வருவது. இன்று வடகிழக்குப் பகுதியில் அமைதி நிலவுகிறது. பல்வேறு ஆயுதமேந்திய குழுவினரோடு நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி கண்டிருக்கிறோம்.

பிளாக்கேட், வெடிகுண்டு, இன்சர்ஜென்சி, ஆயுதமேந்தியப் போராட்டம்… போன்ற விஷயங்களுக்காக மட்டுமே அறியப்பட்ட வடகிழக்குப் பகுதிகளில் இன்று சாலைகள் போடப்படுகின்றன. எல்லா ஊர்களும் இணைக்கப்படும் வகையில் ரயில் தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி வடகிழக்குப் பகுதியை முன்னேற்ற நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகினறது.

பிரதமர் மோடி அவர்கள், வடகிழக்குப் பகுதிக்கு கடந்த 8 ஆண்டுகளில் 51 முறைக்கு மேல் பயணித்திருக்கிறார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, எந்த ஒரு பிரதமரும் இத்தனை அதிக முறை வடகிழக்குப் பகுதிகளுக்கு பயணம் செய்ததில்லை. அதோடு ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை இந்திய அரசின் அமைச்சர்கள் வடகிழக்குப் பகுதிக்கு அனுப்பி வைக்கிறோம்.

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்த வரை இன ரீதியிலான அடையாள அரசியல் வலுவாக இருக்கும். இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம். மேகாலயா & நாகாலந்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது, அங்கு இது சார்ந்த பிரச்சனைகள் எழுகின்றனவா?

நாங்கள் வந்தால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்களின் அடையாளம் காணாமல் போகும், மொழிகள் அழிந்து போகும் என ஊடகங்கள் பொய் செய்திகளைப் பரப்பின. ஆனால், மாறாக, நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் உள்ளூர் மொழிகள் இன்னும் வலுவடைந்து இருக்கின்றன. அவர்களின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் காரியத்தை பாஜக அரசு செய்தது.

பிரதமர் மோடி சாலைகள் வழியாக, ரயில் தடங்கள் மூலம் வடகிழக்கை இணைத்துவிட்டார் என பல ஊடகவியலாளர்கள் பகுத்தாய்ந்து எழுதுகிறார்கள். ஆனால் உண்மையில், வடகிழக்குப் பகுதிக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த மனதளவிலான இடைவெளியை அகற்றியது தான் அவர் செய்த காரியங்களில் தலையாயது, மகத்தானது.

நாகாலாந்தில் ஒரு குழுவினர், இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கவிருந்தனர். ஆனால், மோடிவ் ஜி மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறி, தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டிருக்கின்றனர்.

பழங்குடி மக்களுக்கு இருக்கும் பிரச்சனையை பாஜக எப்படி தீர்த்திருக்கிறது? அவர்கள் இந்த முறை பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று ஏன் உங்களுக்குத் தோன்றுகிறது?

பழங்குடி மக்களுக்கு பல பிரச்சனைகள் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பிரதமர் மோடி, அவர்களை அன்போடு அரவணைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்திய சுதந்திர வரலாற்றில் முதல்முறையாக ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக பதவியில் இருக்கிறார். ஜன்ஜாதி கெளரவ் திவஸ் (பழங்குடி மக்கள் பெருமை தினம்) பிர்சா முண்டா அவர்களின் பிறந்த நாளில் கொண்டாடப்படுகிறது. ஏக்லவ்ய பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவிருக்கிறது.

ஆக, இந்த அரசு, அவர்களுக்காக சிந்திக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்களும் வளர்ச்சியை அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் எல்லா வடகிழக்கு பகுதிகளும் ரயில் & விமானம் மூலம் இணைக்கப்படும். இவையனைத்தும் எளிதில் கடந்து செல்லக் கூடிய சிறிய விஷயங்கள் அல்ல.

 மோடியும் அமித் ஷாவும் எவ்வளவு முயற்சித்தாலும் கர்நாடகாவில் பாஜக கால் பதிக்க முடியாது என்று சித்தராமய்யா, டி கே சிவகுமாரின்  கருத்துக்கு உங்கள் பதில்?

பேசுபவர்கள் ஆயிரம் பேசினாலும், கர்நாட்காவில் பாஜக வெற்றிபெறும். கடந்த 2 மாதங்களில் நான் 5  முறை கர்நாடகா சென்றுள்ளேன். மக்களுக்கு மோடி மீதான அன்பை நான் பார்த்தேன். பாஜகவுக்கு கர்நாடகாவில் சிறப்பான வெற்றி கிடைக்கும்.

கர்நாடகா முழுவதிலிருந்தும் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது. மாண்டியாவிலிருந்து எனது தேர்தல் பரப்புறையை தொடங்கினேன். மாண்டியாவின் ஆதரவு பாஜக பக்கம் வலுவாக இருக்கிறது. பாஜகவின் வளர்ச்சி நடவடிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்

பாஜக மீதிருக்கும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு?

இரண்டாம், மூன்றாம் தலைமுறை அரசியல்வாதிகள் எங்கள் கட்சியில் இருக்கின்றனர். நான் அதனை மறுக்கவில்லை. ஆனால் எங்கள் கட்சியில் யாரும் கட்சியின், நாட்டின் வளர்ச்சியை புறந்தள்ளிவிட்டு தங்களது தனிப்பட்ட, தங்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்காக சுயநலமாக பணியாற்றவில்லை

Amit sha

பாஜக அரசு தான் பி எஃப் ஐ அமைப்பைத் தடை செய்தது என சமீபத்தீல் நீங்கள் கர்நாடக மாநிலத்தில் பேசி இருந்தீர்கள். அது தொடர்பாக காங்கிரஸ் அரசையும் சேர்த்து விமர்சித்து இருந்தீர்களே?

பி எஃப் ஐ உறுப்பினர்கள் மீது பல வழக்குகள் இருந்தன, காங்கிரஸ் அரசு வழியாக அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதை நீதிமன்றம் தடுத்துவிட்டது. 

ஒரு காலகட்டம் வரை பி எஃப் ஐ என்கிற அமைப்பு தட்சின கர்நாடகப் பகுதி மற்றும் கேரளாவின் பிரச்சனையாக இருந்தது. ஆனால் நாங்கள் தடை செய்யும் நேரத்தில், பி எஃப் ஐ அமைப்பு கிட்டத்தட்ட இந்தியா முழுக்க தங்கள் கிளைகளையும் பணிகளையும் பரப்பி, தன் பணிகளைத் தொடங்கி இருந்தது.

நாங்கள் தான் பி எஃப் ஐ அமைப்பை தடை செய்தோம். அதுவும் வெற்றிகரமாக, முழுமையாகத் தடை செய்தோம். இந்த அமைப்பின் பின்புலம், நோக்கம், செயல்பாடுகளை கருத்தில் கொண்டு அரசியலைக் கடந்து முழுமையாகத் தடை செய்தோம்.

பிரதமர் உரையின் போது தொடர்ந்து கடுமையான சலசலப்புகள் எழுந்ததே…? 

சன்சத் சேனல் வழியாக இவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அரசியல் நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு பிரதமரின் உரையைக் கேட்க விரும்பாதவர்களையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதோடு அவர்கள் நடப்பதை எல்லாம் மதிப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி அடைந்து இருக்கிறது. மக்கள் வாக்களிக்கும் போது இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு வாக்களிப்பர்.

எங்களால் பேசக் கூட முடியவில்லை, நாங்கள் பேசுவதை அவைக் குறிப்பிலிருந்து நீக்குகிறார்கள் என எதிர்கட்சியினர் சொல்கிறார்களே?

நாடாளுமன்றத்தின் அவைக் குறிப்பிலிருந்து ஒருவரின் உரை நீக்கப்படுவது, இது ஒன்றும் முதல் முறை அல்ல. அவை உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்குரிய மாண்புகளோடு பேசுவது அவசியம். 

தொடர்ந்து நாட்டில் அடுத்தடுத்து தேர்தல் மட்டுமே நடந்து கொண்டிருந்தால், நாட்டின் வளர்ச்சி, நிர்வாகம் எல்லாம் பிந்தள்ளப்படும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறதே?

இதனால் தான் பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை அனைத்து தேர்தல்களையும் ஒன்றாக நடத்த ஒரு யோசனையை மக்கள் முன் வைத்திருக்கிறோம். இது தொடர்பாக நிறைய விவாதிக்க வேண்டும். விவாதித்த பிறகு தான் இது சாத்தியமாகும். ஒரு ஜனநாயகத்தில் தொடர்ந்து தேர்தல் நடப்பது நன்மை பயக்காது என்பதை அனைவரும் உணர்கிறார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது.

ஃ: ராஜஸ்தான், சத்திஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க் கட்சிகள்  ஆட்சியைப் பிடிக்கின்றன? இது குறித்து…?

இந்த நான்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி வலுவாக இருக்கும் பகுதிகளே என்பதால், இந்த நான்கு மாநிலங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். 

ராஜஸ்தானில் ஒவ்வொரு தேர்தலின் போது ஆட்சி மாற்றம் ஏற்படுவதாகச் சொல்கிறீர்கள். இதே தான் வடகிழக்கு மாநிலங்களிலும் நடப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அசாம் மாநிலங்கள் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மணிப்பூர் & அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. குஜராத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 

 குஜராத் பிரதமர் மற்றும் உங்களின் (அமித் ஷா) சொந்த மாநிலம் என்பதால் அது சாத்தியமாகியுள்ளதல்லவா?

அப்படி இல்லை. மக்களுக்கு ஓர் அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுவிட்டால் அவர்கள் தொடர்ந்து ஒரு கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள். அரசு கொண்டு வரும் புதிய பயனுள்ள திட்டங்கள் காரணமாகத் தான் மக்கள் பாஜகவுக்கு தொடர்ந்து வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஜி20 மாநாட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது. இது நரேந்திர மோடியை ஆதரிக்கும் வகையிலான தேர்தல் பிரசாரம் போன்று கூட முன்னெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறதே?

நரேந்திர மோடி தலைமையில், ஜி20 மாநாட்டை வழிநடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அந்த மாநாட்டுப் பணிகளை இந்தியா சிறப்பாகச் செய்து முடித்தது என்றால், நிச்சயம் மோடி அவர்களுக்கு அதற்கான பெயரும் புகழும் கிடைத்தே தீர வேண்டும் தானே..? 

மோடிஜிக்கு அந்தப் புகழ் கிடைக்கக் கூடாது என்றால், எதிர்கட்சிக்காரர்களுக்கா இந்த புகழ் கிடைக்க வேண்டும்? பல்வேறு உலக நாடுகள் இதுவரை ஜி20 மாநாடுகளை நடத்திய போது 4 - 5 இடங்களுக்கு மேலான பகுதிகளில் நடத்த முடியவில்லை. ஆனால் இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

பாஜக செய்யும் காரியங்களில் விஷயம் இருக்கிறதோ இல்லையோ… மார்க்கெட்டிங் மட்டும் சிறப்பாகச் செய்துவிடுகிறார்கள் என ஒரு கருத்து கூறப்படுகிறது?

ஒரு பொருள் நன்றாக இருந்தால் தான் அதற்கான மார்க்கெட்டிங் நீண்ட காலத்துக்கு பலனளிக்கும். இது தான் மார்க்கெட்டிங்கின் அடிப்படை விதி. எனவே, ஒரு பொருள் நன்றாக இருந்தால், ஆடம்பரமாக மார்க்கெட்டிங் செய்தே ஆக வேண்டும்.

பாஜக மீது, காஷ்மீர் முதல் இந்தியாவின் வரலாற்றில் சிலவற்றை அழித்து, புது வரலாற்றை எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே? உதாரணத்துக்கு முகலாயர்கள், நேருவின் பங்களிப்பு போன்றவைகளைச் சொல்லலாம்?

ஜவஹர்லால் நேருவினால் தான் ஜம்மு காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 கொண்டு வரப்பட்டது. இதை நீக்க வேண்டும் என நாங்கள் பல தசாப்தங்களாகச் சொல்லி வருகிறோம். இதனால் நாட்டுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் பல்லாண்டு காலம் கூறி வந்தோம்.

அச்சட்டத்தை நீக்கிய பிறகு, தற்போது காஷ்மீரில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. தீவிரவாதம் மெல்ல குறைந்து வருகிறது. ஏகப்பட்ட மாற்றங்கள் ஜம்மு காஷ்மீரில் வந்திருக்கின்றன. யாரும் யாருடைய பங்களிப்பையும் நீக்கக் கூடாது, நாங்கள் நீக்க விரும்பவில்லை. 

 நாட்டின் உள் பாதுகாப்பு  குறித்து உங்கள் கருத்து என்ன?

3 ஹாட் ஸ்பாட் பிரச்சனைகள் இருந்தன. கடந்த 9 ஆண்டுகளில் மோடிஜியின் ஆட்சியின் கீழ் இந்த 3 இடங்களில் அமைதி நிலவத் தொடங்கியுள்ளன. பீகார் - ஜார்கண்ட் பகுதியில் உள்ள பிரச்சனை கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. சத்திஸ்கரில் பாதுகாப்பு அதிகாரிகளை களமிறக்கியுள்ளோம். மிகக் குறைந்த காலத்துக்குள் அங்கு அமைதி திரும்பிவிடும்.

அதே போல ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத அளவுக்கு தீவிரவாதம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறது. கோடான கோடி யாத்ரிகர்கள் ஜம்மு காஷ்மீருக்குப் பயணிக்கிறார்கள். வரலாறு காணாத அளவுக்கு அங்கு விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

காலிஸ்தான் பிரச்சனையை நீங்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? மீண்டும் காலிஸ்தான் என்கிற சொல் பிரபலமாகப் பயன்படுத்தப்படத் தொடங்கி இருக்கிறார்களே?

 இந்த சொல் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக மிக வலுவான கண்காணிப்புகளை உருவாக்கி இருக்கிறோம். பஞ்சாப் அரசோடும் இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். எல்லா முகமைகளுக்கு இடையிலும் இந்த விஷயத்தில் ஒரு நல்ல ஒத்துழைப்பு இருக்கிறது.

 மற்ற கட்சிகள் மீது வாரிசு அரசியல் குறித்த விமர்சனம் இருப்பதுப்போல உங்கள் கட்சியின் மீது தோழமை அரசியல், அதாவது  அதானியிடம் தான் அனைத்து ஒப்பந்தங்களும் அளிக்கப்படுகின்றன என்ற விமர்சனம் இருக்கிறதே?  

உச்ச நீதிமன்றத்தின் தலையீடுள்ள ஒரு விஷயம் குறித்து நான் பதிலளிப்பது முறையல்ல. ஆனால், இந்த விஷயத்தில் (அதானி சர்ச்சையில்) எங்களுக்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை, அச்சம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை.

காங்கிரஸ் கட்சி பாஜகவின் மீது சுமத்தும் Crony Capitalism குற்றச்சாட்டு?

பாஜக மீது இன்றுவரை யாராலும் எந்த பழியையும் சுமத்தமுடியவில்லை. காங்கிரஸின் ஆட்சியில் தான் அவர்கள் மீதே சிபிஐ 12 லட்சம் கோடி ஊழல் செய்திருந்ததாக வழக்கு பதிவு செய்தது.

நாட்டின் சிஸ்டம் பாஜகவின் கைகளில் இருப்பதால் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டு?

எனில் நீதிமறத்தை நாடலாமே? பெகாசஸ் விவகாரத்திலும், ஆதாரம் இருந்தால் கோர்ட்டுக்கு போக சொன்னபோதிலும், அவர்கள் செல்லவில்லையே? நீதிமன்றம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. 

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறு பெரும் சர்ச்சை ஒன்றை ஏற்படுத்தி மற்ற கட்சிகள் திசைத்திருப்புவதாக பாஜக செய்தி தொடர்பாளர்கள் கூறுகிறார்களே?

பாஜக செய்தி தொடர்பாளர்களிடம் நான் பதிலளித்துக்கொள்கிறேன். ஆனால் நான் சொல்வது ஒன்று தான், உண்மையை எவ்வளவு திரித்து பேசினாலும், ஆயிரம் சூரியன் ஒன்றாக ஒளிர்வது போல அதிக வெளிச்சத்துடன் வெளிப்படும். 

 2002ல் இருந்து மோடியின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அனைத்து தடங்கல்களையும் உடைத்தெரிந்து, மக்களின் அதிகமான அன்பை சம்பாதித்துக்கொண்டு மோடி வெற்றிக்கண்டிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?