Micheal Jackson Childhood

 

Twitter

Long Read

மைக்கேல் ஜாக்சன் : கலக கலைஞனின் அறியப்படாத வரலாறு | பகுதி - 1

Govind

இணையம் சூடுபிடிப்பதற்குள் மறைந்து போன ஒரு கலைஞன் மைக்கேல் ஜாக்சன். ஆகஸ்டு 29, 1958-ம் ஆண்டு கேரி, இந்தியானா, அமெரிக்காவில் பிறந்தவர், ஜூன் 25, 2009 அன்று மறைந்து போனார். இன்றும் அவரது நினைவு, பிறந்த தினமன்று யாராவது சில பிரபலங்கள் அவரை நினைவு கூர்கின்றனர். அவரது ரசிகர்கள் சிலரோ இன்றும் “மைக்கேல், மைக்கேல்” என்று கதறுகின்றனர்.

அவர் ஒரு பாடகர், கவிஞர், இசை அமைப்பாளர், நடனக்காரர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டிருந்தார். அவரது குரலில் பெண்மையும் இனிமையும் கலந்திருந்தன என்றால் அவரது நடனத்தில் நளினமும், ஸ்டைலும், வேகமும் இணைந்திருந்தன எனலாம்.

ஒரு கலைஞனை உலகம் முழுவதும் கொண்டு போய்ச் சேர்ப்பதில் உலகமயம் முக்கிய பங்காற்றுகிறது என்றால் அதே கலைஞனை அழிப்பதிலும் அதே உலகமயம் காரணமாகவும் இருக்கிறது. மற்றவர்களுக்கு எப்படியோ மைக்கேல் ஜாக்சன் விடயத்தில் அது அச்சு பிசகாமல் அப்படியே நடந்திருக்கிறது.

Micheal Jackson

மைக்கேல் ஜாக்சனது இளம் பருவத்து வரலாற்றுக் காலம்

அவரது இளைமைக் காலத்திலிருந்து பின் தொடர்வோம்.

மைக்கேல் பிறந்து வளர்ந்த காலம் அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒரு கொந்தளிப்பான காலமும் கூட. ஒரு வகையில் சொன்னால் அது இளைஞர்கள் – மாணவர்களது கலகத்தின் காலம். வேலையின்மை அதிகரித்து பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் அச்சுறுத்திய நேரம். கம்யூனிச அபாயம் வரமால் இருக்க மக்கள் நலத்திட்டங்களை “கீனிசிய மக்கள் நல அரசு” என்ற பெயரில் அறிமுகப்படுத்தி அதுவும் தோல்வியடைந்த காலம். வியட்நாமில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு போர் நடத்தி அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டிகள் அமெரிக்கா வந்திறங்கியதைப் பார்த்து அங்கே எழுந்த போர் எதிர்ப்பு போராட்டங்கள் வளர்ந்து வந்த நேரம். இதே காலத்தில் சே குவேரா பொலிவியாவில் கொல்லப்படுகிறார். உலகம் முழுவதும் சே-வின் படத்தை ஏந்தி மக்கள் நியாயம் கேட்கிறார்கள்.

பாரீஸில் மாணவர் எழுச்சி, இந்தியாவில் நக்சர்பாரி எழுச்சி, தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம், இலங்கையில் ஜெ.வி.பி.எனப்படும் ஜனதா விமுக்தி பெரமுனாவின் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி, சீனாவில் கலாச்சார புரட்சி என்று அன்றைய இளைஞர்கள் அனைத்து பகுதிகளிலும் கலகம் செய்து கொண்டிருந்த நேரம். இந்த பதட்டமான காலகட்டம் 1960-களின் பிற்பகுதியிலும், 1970-களின் முற்பகுதியிலும் நிலவியது.

Micheal jackson Statue

அதே நேரம் இளைஞர்களின் இந்தப் போராட்டம் தொட்டறியத்தக்க பெரும் மாற்றங்களைச் சட்டெனக் கொண்டு வரவில்லை. கற்பனை கலந்து இலட்சியத்துடன் போராடிய இளைஞர்கள் மாற்றம் வரவில்லை எனச் சோர்ந்து போயினர். இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் வளர்ந்து வந்த பொதுமக்களின் இசை என்றழைக்கப்பட்ட பாப்பிசை ஒரு உலக சந்தையை மெதுவாக உருவாக்கிக் கொண்டிருந்தது. பீட்டில்ஸ் (The Beatles), போனிஎம் (Boney M), அப்பா(ABBA) போன்ற குழுக்கள் உலகப் புகழ் பெற்றிருந்தன. பீட்டில்ஸ் இசை நிகழ்ச்சிகளுக்கு இலட்சக்கணக்கில் மக்கள் அணிதிரண்டு வந்ததோடு பாடல் நடனத்தோடு மக்கள் உணர்ச்சிகரமான ஒன்றிணைவது என்ற அளவில் பாப்பிசைக் கலாச்சாரம் ஒரு புதிய மதமாக இளையோரின் மனதில் வளர்ந்து வந்தது.

இந்த புறநிலைமைதான் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைப் பருவ காலம். சாதாரண தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவரும் ஒருவர். தந்தை இசை ஆர்வலர் என்பதால் குழந்தைகளும் இசையுலகிற்கு அறிமுகமாகினர். கறுப்பினத்தவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் ஜாக்சன் சகோதரர்கள் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்துவது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்கு உதவியாக இருந்தது.

இந்த இடத்தில் சிலருக்கு ஒன்று தோன்றலாம். மைக்கேல் ஜாக்சன் பார்ப்பதற்கு வெள்ளையர் போல இருக்கிறாரே அவர் எப்படி கருப்பர் குடும்பத்தில் பிறந்தார் என்று கேள்வி எழலாம். பின்னாளில் அவர் தனது தோலின் நிறத்தை மாற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அப்படி மாறினாரே ஒழிய அடிப்படையில் அவர் ஒரு கருப்பினத்தவரே.

Micheal Jackson 

கருப்பின மக்களின் சூழலில் ஜாக்சனின் இளமைப் பருவம்

தந்தையின் கண்டிப்பான அணுகுமுறை ஜாக்சனின் ஆளுமை வளர்ச்சி மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இது மற்ற குழந்தைகளின் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் மைக்கேல் அடையவில்லை என்பதைக் காட்டுகிறது. சிறு பிராயத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன பாதிப்பு பின்னாளில் பல்வேறு வகைகளில் வெளிப்படும் என்பது ஜாக்சன் விசயத்திலும் நடந்திருக்கிறது.

கருப்பின மக்களின் சமத்துவ உரிமைகளுக்கான சிவில் இயக்கம் தீவிரமாகச் செயல்பட்ட காலமது. ஆகவே வறுமையும், வாய்ப்பின்மையும் ஏனைய கறுப்பினத்தவர்களைப் போல ஜாக்சனது குடும்பத்திற்கும் பொருந்தும். ஆகவே ஜாக்சனது தந்தை கண்டிப்பாகத் தனது குடும்பத்தை நடத்தியதோடு பல கட்டுப்பாடுகளையும் விதித்து தனது குழந்தைகளை வளர்த்து வந்தார். எந்த இசையால் ஜாக்சன் பிரபலமானாரோ அந்த இசையும், நடனமும் அவருக்குத் தந்தையால் அடி உதைகளுடன் கற்றுக் கொடுக்கப்பட்டன. இத்தகைய கட்டுப்பாடான இசைப் பயிற்சி இல்லையென்றால் மைக்கேல் ஜாக்சன் என்ற ஆளுமையே இல்லை.

Micheal Jackson

21 வயதில் உருவான ஒரு நட்சத்திரம்

குழந்தைகளை வளர்த்த விதத்தில் ஜாக்சனது தந்தை ஒரு வில்லனாக்கப்பட்டாலும் அந்த வில்லனுக்கு ஜாக்சனது குடும்பம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. 1969-இல் ஜாக்சனது சகோதரர்களால் வெளியிடப்பட்ட “ஜாக்சன் ஃபைவ்” பலரது கவனத்தைப் பெற்றது. அதில் பதினோரு வயது மைக்கேல் மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் பங்களிப்பைச் செய்திருந்தான். இதன் தொடர்ச்சியாக 1979-இல் மைக்கேல் ஜாக்சனது “ஆஃப் தி வால்” எனும் முதல் ஆல்பம் வெளியானது. விற்பனையிலும் சாதனை படைத்தது. 21 வயதில் ஒரு நட்சத்திரம் உதயமானார்.

ஜாக்சன் குதூகலமான குழந்தைப் பருவத்தை இழந்திருந்தாலும், மேடையில் செயற்கையாக மற்றவர்களைக் கவரும் இயல்பினையும், ஆற்றலையும் அவர் பெற்றிருந்தார். ஒரு வகையில் பார்த்தால் பிஞ்சிலே ஒரு குழந்தையைப் பழுக்க வைத்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ அது மைக்கேலுக்கும் நடந்தது.

மைக்கேலின் குரலையும், கலையையும் பயிற்று வித்த தந்தை இந்த நடத்தை மாறும், மனவளத்தை வலுவாக்கும் பயிற்சிகளைத் தரவில்லை. இப்படித்தான் மைக்கேலின் இசையும் நடனமும் புத்தாக்க உணர்வுடன் மெருகேறி வளர்ந்த அதே காலத்தில் அவரது நட்சத்திர வாழ்க்கைக்கான பண்புகளும் சேர்ந்தே வளர்ந்தன. இசைத் திறமையும், நட்சத்திர பண்பும் ஒன்றையொன்று சார்ந்தும் விலகியும் விரிந்தன. சகோதரர்களெல்லாம் இசைக் குடும்பமாய் இருந்த போதும் சிறுவன் மைக்கேலின் திறமைகள் தனித்துத் தெரிந்தன. தந்தையின் இசைப் பயிற்சியை உண்டு செரித்ததில் அவர் மற்ற உடன்பிறப்புகளை விட முன்னணியிலிருந்தார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

Jackson Family

பொதுவாழ்க்கையில் தங்களது சமத்துவத்துக்கான இடத்தை பெறுவதற்காக கருப்பின மக்கள் போராடி வந்த காலத்தில் கலைத் துறையிலும் அந்த சவால் நீடித்தது. அரசியல் உலகில் அதிகாரத்தை மறுத்து வந்த வெள்ளை ஆளும் வர்க்கம் கேளிக்கை உலகில் மட்டும் கருப்பின நட்சத்திரங்களை அனுமதித்தது வேறு விசயம். என்றாலும் கருப்பின மக்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கும் வெற்றியை தமது மைய போராட்டத்தின் வெற்றியாகவே அங்கீகரித்தார்கள். இந்த உளவியல் ஒபாமா வரையிலும் அமலிலிருந்தது நமக்குத் தெரிந்த ஒன்று.

இத்தகைய பெருமிதம் கூட மைக்கேல் ஜாக்சனிடம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் கருப்பின மக்களின் தீவிரமான குடியுரிமை இயக்கத்தின் பயனை முதலில் பெருமளவு அறுவடை செய்தவராக ஜாக்சனைக் கருதலாம். அடிமைகளிடம் அடிமைத்தனத்தின் மீது கோபம் கொண்டோர், அந்த கோபத்தைத் தவிர்த்து எப்படியாவது முன்னுக்கு வருவோர், நிறவெறியின் மையமான வெள்ளையின உலகின் உதவியுடன் கடைத்தேறுவோர் எனப் பிரிவுகள் வைத்துக் கொண்டால் மைக்கேல் மூன்றாவது பிரிவில்தான் நிச்சயம் இருப்பார்.

கருப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்கான போராட்ட அரசியலின் சாயலைக் கூட அவரது இசையுலகில் காணமுடியாது. அத்தகைய குரலுக்குச் சொந்தக்காரரான பாப் மார்லியெல்லாம் அவரது முன்மாதிரி வரிசையில் இல்லை. இருந்தாலும் அவரிடம் திறமையைக் கண்ட இத்தொழிலில் உள்ள கருப்பின பிரமுகர்கள் உணர்வுப்பூர்வமாக அவருக்கு ஆதரவையும் வாய்ப்பையும் வழங்கினார்கள். இத்தகைய கூட்டு முயற்சியில்தான் அவரது பிரபல ஆல்பங்கள் வெளியிடப்பட்டாலும் அந்தப் பெருமையனைத்தும் மைக்கேலுக்கு மட்டும்தான் சென்றது. இசையிலும், நடனத்திலும் திறமை கொண்டிருந்த ஜாக்சனை ஒரு நட்சத்திரமாக மாற்றுவதனால் உள்ள ஆதாயங்களை இசை நிறுவனங்கள் தெரிந்து கொண்டன.

அதன் பிறகு என்ன நடந்தது? பாகம் 2-ல் காணலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?