தமிழக மாணவர்

 

Twitter

தமிழ்நாடு

Morning News Tamil : உக்ரைன் இராணுவத்தில் தமிழக மாணவர் - உளவுத்துறை விசாரணை

Antony Ajay R

உக்ரைனில் இருந்து அனைத்து மாணவர்களையும் வெளியேற்ற மத்திய மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கோவையை சேர்ந்த மாணவர் உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் போர் ஆரம்பித்தது முதல் கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் என்ற மாணவர் குறித்து எந்த தகவலும் இல்லாமலிருந்தது. சிறுவயது முதலே இராணுவத்தில் சேர விரும்பிய அவர், இரண்டு முறை இந்திய இராணுவத்தில் சேர முயன்றும் உயரம் குறைவு என்பதால் முடியாமல் போனது. இதையடுத்து அமெரிக்க ராணுவத்தில் சேர விரும்பி சென்னை தூதரகத்தை அணுகினார். அதிலும் சாய்நிகேசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து அவர் கடந்த 2019-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் சேர்ந்து படித்து வந்தார்.

உக்ரைனில் போர் தொடங்கியப் பின்னர் சாய் நிகேஷின் பெற்றோர் அவரைத் தொடர்புகொண்டு திரும்பி வருமாறு கேட்ட போது தான், ஜார்ஜியா நேஷனல் லெஜியன் துணை ராணுவ பிரிவில் சேர்ந்துவிட்டதாகவும், ரஷியாவுக்கு எதிராக போரிட்டு வருவதாகவும் கூறி உள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக இந்தியா திரும்புமாறு அவரை அழைத்து உள்ளனர்.

ஆனால் அவர், தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் நிம்மதி அடையாத பெற்றோர், மகனை மீட்டு தர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறைக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தனர்.

சாய்நிகேஷ் போல் இந்திய மாணவர்கள் வேறு யாராவது உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து உள்ளார்களா? என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துரை முருகன்

மேகதாது விவகாரம் : சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

மேகதாது விவகாரத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து நிலைமைக்கேற்ப பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர் துறைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும்.

மேகதாதுவில் அணைக் கட்டுவது தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரைத் தடுப்பதாகவே கருத வேண்டியுள்ளது. மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சி தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும்.

கர்நாடக அரசின் முயற்சி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவதாகும். மேகதாது திட்டத்தை தடுக்க சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

putin and biden

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இன்றுடன் 13 நாட்கள் ஆகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.

உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும்படி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டு கொண்டார்.

இந்நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா போல கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதானது அல்ல. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் தடை ரஷ்ய பொருளாதாரத்தை அடியோடு சரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Sasikala

சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கண்ட படுதோல்வியை தொடர்ந்து, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என அக்கட்சி தொண்டர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு ஓபிஎஸ் சகோதரர் ராஜா ஆதரவு தெரிவித்ததோடு, தனது ஆதரவாளர்களுடன் சசிகலாவையும் நேரில் சந்தித்து பேசியிருந்தார்.இதனால், அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

நேற்று மகளிர் தின விழாவையொட்டி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சந்தித்துப் பேசினர். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

Aswin

அடுத்த கபில் தேவ்வாக விரும்பினேன் - அஸ்வின் பகிர்வு

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்,

28 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் (431 விக்கெட்) சாதனையை கபில்தேவ் முறியடித்த போது நான் எனது தந்தையுடன் சேர்ந்து பார்த்து உற்சாகம் அடைந்தேன். கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கையை தாண்டுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஏனெனில் நான் 8 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது பேட்ஸ்மேனாக வேண்டும் என்றே விரும்பினேன்.

1994-ம் ஆண்டில், பேட்டிங் தான் எனது பிரதான ஆசையாக இருந்தது. அச்சமயம் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங்கில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். கபில்தேவ் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அடுத்த கபில்தேவாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காக எனது தந்தையின் அறிவுரையின்படி சிறு வயதில் பேட்டிங் மட்டுமின்றி மிதவேகமாக பந்து வீசவும் பழகினேன். காலப்போக்கில் நான் ஆப்-ஸ்பின்னராக மாறிய பிறகு, இந்திய அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடி விட்டேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியில் கால்பதிப்பேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இந்த சாதனையை நான் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?