எலான் மஸ்க்குக்கு செக் வைத்த ஒரு ஆப்ரிக்க தேசம் Newssensetn
உலகம்

எலான் மஸ்க்குக்கு செக் வைத்த ஒரு ஆப்ரிக்க தேசம் - செளதி ஆகுமா ஜிம்பாப்வே?

Niyasahamed M

பெரும் பாலை தேசம் அது. அந்த வளைகுடாவில் கடல் ஓரத்தில் வாழ்ந்தவர்களுக்கு மீன்பிடி மட்டும்தான் தொழில். வணிக பாதைகள் மூலமாக ஒரு கொஞ்சம் வருவாய் வந்தது. ஆனால் அவை அனைத்து குடிகளின் வாழ்வையும் வளமாக்கவில்லை.

வாழ்க்கைப்பாடும் அவ்வளவு சுலபமாக இல்லை, குலங்களுக்கு இடையேயான போர் என எதிர்காலமும் சூனியமாகத்தான் இருந்தது. ஆனால், இவை அனைத்தும் கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பதற்கு முன்பான கதை.

கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பட்ட பின்பு அனைத்தும் மாறியது. உலகின் செல்வம் கொழிக்கும் நாடுகளாக மாறியது அந்த பிராந்தியம். ரியல் எஸ்டேட் வளர்ந்தது, சுற்றுலா வரும் மக்களின் எண்ணிக்கை பெருகியது. இன்று உலக அரங்கில் சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கிறது செளதியும், அமீரகமும்.

இப்படியான வாய்ப்பு இப்போது ஜிம்பாப்வேவிற்கு கிடைத்திருக்கிறது. எல்லாம் சிறப்பாக நடந்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஜிம்பாப்வே வளம் கொழிக்கும் உலக நாடுகளின் பட்டியலில் உச்சத்தில் இருக்கும்.

சொல்லப்போனால் ஜிம்பாப்வேவிற்கு இப்போது கிடைத்த அதிர்ஷ்டம் அல்ல இது. எப்போதோ கிடைத்தது. ஆனால், இப்போதுதான் அந்நாடு விழித்திருக்கிறது.

’எங்கள் வளம் எங்களவர்கே’ என முடிவு செய்திருக்கிறது.

’லித்தியம் எனும் வெள்ளை தங்கம்’

லித்தியம் எனும் வெள்ளை தங்கம் ஜிம்பாப்வேவில் கொட்டிக்கிடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக லித்தியம் மைனிங் அங்கு நடந்துக் கொண்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு மட்டும் 1200 மெகா டன் லித்தியம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

சீனா 500 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஜிம்பாப்வேவில் உள்ள லித்தியம் சுரங்கங்களில் முதலீடு செய்திருக்கிறது அல்லது ஒட்டுமொத்தமாக கைப்பற்றி இருக்கிறது.

உலகம் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் லித்தியம் என்பது எதிர்கால வாகனத்திற்கான இன்றியமையாத இடுப்பொருள் ஆகிறது.

எலான் மஸ்க்கின் டெஸ்லா மட்டும் கடந்தாண்டு (2022) 1.31 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்திருக்கிறது என்றால் இதன் வீச்சு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என புரிந்து கொள்ளுங்கள்.

இப்படியான சூழலில்தான் ஜிம்பாப்வே விழித்திருக்கிறது.

ஆம், இனி லித்தியம் எனும் கனிமத்தை அப்படியே ஏற்றுமதி செய்யப் போவதில்லை என முடிவு செய்திருக்கிறது.

இனி நாங்களே மதிப்புக் கூட்டி பேட்டரிகள் உற்பத்தி செய்து விற்கப் போகிறோம் என்கிறது ஜிம்பாப்வே.

ஜிம்பாப்வே அரசின் சொற்களிலேயே சொல்வது என்றால், “உலகின் ஐந்தாவது முக்கிய தேவையாக இருக்கும் லித்தியத்தை இனி நாங்கள் அப்படியே ஏற்றுமதி செய்வதாக இல்லை.”

கார், நம் வாழ்வில் அங்கமாகி போன செல்ஃபோன், லாப்டாப் என அனைத்தையும் இயக்குவது லித்தியம்தான். இந்த கனிமத்தின் பெரும் பங்கை வைத்திருக்கும் ஜிம்பாப்வேவின் இந்த முடிவு மற்றொரு செய்தியாக இருக்கப் போவதில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் லித்தியத்தின் விலை 1100 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்றால் இதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

ஜிம்பாப்வேவில் லித்தியம்

அரபு நாடுகளில் கச்சா எண்ணெய் கொட்டிக் கிடக்கும் அளவிற்கா ஜிம்பாப்வேவில் லித்தியம் கொட்டிக் கிடக்கிறது?

ஆம்.

ஜிம்பாப்வேவில் இருக்கும் பிகிடா சுரங்கத்தில் மட்டும் 10.8 மில்லியன் டன் லித்தியம் தாதுக்கள் இருக்கின்றன. ஆர்காடியா லித்திய சுரங்கம் ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் தாதுக்களை எடுக்கிறது.

ஆப்ரிக்க தாது துறையில் உலவும் ஒரு தகவலின் படி 2015ஆம் ஆண்டு மட்டும் சர்வதேச நிறுவனங்களின் முறைகேடான லித்தியம் வணிகத்தால் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஜிம்பாப்வே இழந்திருக்கிறது. அந்நாட்டின் மொத்த கடனே அச்சமயத்தில் 13.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள்தான் என்றால் நீங்களே இதனை கணித்துக் கொள்ளுங்கள்.

இனி என்ன ஆகும்?

லித்தியம் மட்டும் அல்ல, தங்கம், வைரம் என கொட்டிக் கிடக்கிறது ஆஃப்ரிக்காவில். ஆனால் இதுவரை அந்த வளம் எதுவும் அந்த மக்களுக்கு பயன்பட்டது இல்லை.சொல்லப்போனால் அந்த மக்களின் வாழ்வை சிதைத்து போட்டிருக்கிறது இந்த வளங்கள்.

இந்த வளங்கள் காரணமாக ஆப்ரிக்கா கண்டமே மேற்குலகின், ஐரோப்பாவின் வேட்டைக்காடு ஆகி இருக்கிறது.

அந்நாட்டின் வரலாற்று பக்கங்களில் குருதி படிந்திருக்கிறது.

சீனா அதிகளவு ஆப்ரிக்கா லித்தியத்தின் மீது கவனம் குவிக்கிறது. ஐரோப்பிய நாடுகள் ஜீரோ எமிசனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். காலநிலை மாற்றத்தில் உலக நாடுகள் கவனம் செலுத்தும் இந்த சூழலில் சீனாவின் கட்டுக்குள் ஆப்ரிக்க சுரங்கங்கள் செல்வது நல்லதல்ல என கடந்தாண்டே அந்நாட்டு செயற்பாட்டாளர்கள் எச்சரித்தனர்.

இப்படியான சூழலில் ஜிம்பாப்வே அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

இதற்கு ஏதிராக சீனா இப்போதே கதற தொடங்கிவிட்டது. இது சீனாவின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் என்கிறது China trade monitor.

ரா மினரல் (Raw Mineral) ஏற்றுமதிக்கு மட்டுமே தடை என்பதால் சீனாவே அங்கு லித்தியம் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலைகளை தொடங்கி லித்தியம் பேட்டரிகளாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாக அங்கு தொழில் வளமும் பெருகலாம்.

இன்னொரு பார்வையும் இருக்கிறது.

இனி லித்தியத்தை ஏற்றுமதி செய்யப்போவதில்லை எனும் ஜிம்பாப்வேவின் முடிவு அதற்கு எதிராகவும் திரும்பலாம்.

ஜான் பெர்க்கின்ஸின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் ’பொருளாதார அடியாட்கள்’ இனி தங்கள் வேலையை கச்சிதமாக ஆப்ரிக்காவில் தொடங்குவார்கள்.

சீனாவும் அதிகளவு முதலீடு செய்திருக்கிறது. ஏற்கெனவே அதிகளவு கடன் கொடுத்து ராஜதந்திரத்தால் ஆப்ரிக்காவை கட்டுக்குள் வைத்திருக்கும் சீனா அமைதியாக இதை எடுத்துக் கொள்ளப்போவதில்லை.

அவர்கள் இறுக்குவார்கள். ஆப்ரிக்கா திமிறினால் பெட்ரோலுக்காக நடந்த யுத்தங்கள் போல யுத்தங்கள் நடக்கலாம், திடீரென உள்நாட்டு கலவரங்கள் வரலாம், புரட்சி வெடித்ததாக, பொன்னுலகம் மலரப் போவதாக மேற்குலக ஊடகங்கள் பிதற்றலாம்.

வெளியுறவு கொள்கைகள் மாறலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?