கிம் ஜாங் உன் Pixabay
உலகம்

வட கொரியா: கிம் ஜாங் உன் வம்சத்தின் விறுவிறுப்பான கதை | பகுதி 1

1950 போருக்குப் பிறகு முறையான போர் அமைதி ஒப்பந்தம் ஏற்படாமல் இருநாடுகளும் இன்று வரையிலும் பிரிந்தே இருக்கின்றன. ஆனால் இரண்டுமே தாம்தான் உண்மையாகக் கொரியா என்று வாதிடுகின்றன. கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்ட வட கொரியா இன்று வரை தனித்து நின்று அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளைக் கூட அச்சுறுத்துகிறது.

Govind

ஹாலிவுட்டின் அமெரிக்க சூப்பர் ஹீரோக்கள், அமெரிக்காவை கற்பனையாக காப்பாற்றும் பொருட்டு கம்யூனிஸ்டுகள், ஜிகாதிகள், ஏலியன்கள், மாஃபியாக்கள் எனப் பலரை வெள்ளித்திரையில் தோற்கடித்திருக்கின்றனர். ஆனால் நிஜ உலகில் அமெரிக்க வல்லரசு பயப்படும் ஒரு நாடு எது தெரியுமா? அதுதான் வட கொரியா. சீனா, ரசியா போன்ற பெரும் நாடுகளையும் ஈரான போன்ற நாட்டையும் விட குட்டி நாடான வட கொரியாவைப் பார்த்து அமெரிக்கா அஞ்சுவது ஏன்?

வடகொரியாவை ஒரு குடும்பம் ஆட்சி செய்கிறது. அந்தக் குடும்பத்தின் பெயர் கிம். ஒரு குடும்பம் எப்படி இந்த குட்டி நாட்டில் மூன்று தலைமுறையாக ஆட்சி செய்கிறது என்பதை ஒரு பறவைப் பார்வையில் பார்ப்போம்.

ஆசியக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் இருக்கும் தீபகற்பம் கொரியா. அதில் வட கொரியா, தென்கொரியா என இரு நாடுகள். கொரிய தீபகற்பத்தின் வடமேற்கில் சீனாவும், வடகிழக்கில் ரஷ்யாவும் உள்ளன. அருகில் இருக்கும் ஜப்பானைக் கடல் பிரிக்கிறது. இக்கடல் பகுதி கொரிய ஜலசந்தி, ஜப்பான் கடல் என அழைக்கப்படுகிறது.

Korea

நமது தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் தங்களுக்குள் போரிட்டு ஆண்டது போலக் கொரியாவையும் பல அரச பரம்பரைகள் சண்டையிட்டு ஆண்டன. பதிமூன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற மங்கோலியப் படையெடுப்பு கொரியாவை பெரிதும் பலவீனப்படுத்தியது.

கொரியாவை 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானிய பேரரசு கைப்பற்றியது. இது 1945-ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் முடியும் வரை நீடித்தது. இந்த ஆண்டில் ஜப்பான் நேச நாடுகளிடம் சரணடைந்ததும் கொரியா இரண்டாகப் பிரிக்கப்பட்டு வடக்கில் சோவியத் யூனியனும், தெற்கே அமெரிக்காவும் செல்வாக்கு செலுத்தின.

வடக்கில் கம்யூனிசம், தெற்கே முதலாளித்துவம் என்று இரு கொரியாவிலும் முரண்பாடு தோன்றியது. இது கொரியப் போராக 1950-ல் வெடித்தது. 1953-ல் வெற்றி தோல்வியின்றி இப்போர் முடிவடைந்தது.

கிம் இல் சங்

வட கொரியாவில் கம்யூனிசத்தின் பெயரில் கிம் எனும் ஒரு குடும்பம் சர்வாதிகார ஆட்சி செய்ய, தென் கொரியாவில் ‘ஜனநாயகத்தின்’ பெயரில் சாம்சங், ஹூண்டாய், எஸ்.கே. குழுமம், எல்ஜி கார்ப்பரேஷன் போன்ற பெருநிறுவனங்களின் குடும்பக் குழுமங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. தென் கொரியாவில் 1980-கள் வரை முறையான தேர்தலோ ஜனநாயகமோ இல்லை.

இனி வட கொரியாவின் கிம் பரம்பரை, தொழிலாளர் கட்சியின் தலைவர்களாக ஆட்சி செய்யும் வரலாற்றைப் பார்ப்போம்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொரிய தீபகற்பம் மேற்கத்திய மற்றும் ஜப்பான் ஏகாதிபத்தியித்தின் ஆக்கிரமிப்பில் இருந்த நேரம். அப்போது கிம் சாங் ஜூ எனும் சாதாரண மனிதரின் மகனாக 1912-ல் கிம் இல் சங் பிறந்தார்.

அவரது குடும்பம் பல தலைமுறைகளாக விவசாயிகளாகவும், கல்லறை காவலர்களாகவும் உழைத்தது. தனது குடும்பம் மட்டுமல்ல கொரிய தேசமே நிலபிரபுத்துவம் மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் கீழ் அடைந்த துன்பத்தையும் கிம் தனது சுயசரிதையில் விவரிக்கிறார்.

வட கொரியா - தென் கொரியா போர்

இளம் கிம் இல் சங்கின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவரது தந்தையான கிம் ஹியோங் ஜிக். அவர் ஒரு ஆசிரியராகவும் சுய சிந்தனை உள்ள மரபு வழி மருத்துவராகவும் பணியாற்றியவர்.

கிம் இல் சங் தனது நினைவுக் குறிப்பில் 1919 மார்ச் 1 இயக்கத்தினை குறிப்பிடுகிறார். “ எனக்கு அப்போது 6 வயது. ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பெரியவர்களின் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். ஜப்பானியர்கள் வாள்களையும், துப்பாக்கிளையும் கண்மூடித்தனமாக பயன்படுத்தினர். கொரிய இரத்தம் சிந்தப்பட்டதை முதன்முறையாக கண்டேன். என் இதயம் கோபத்தால் எரிந்தது”.

“நம் நாட்டின் தேசிய விடுதலை இயக்கம் தேசியவாதத்தில் இருந்து கம்யூனிச இயக்கமாக மாற வேண்டும் “ என்று தனது தந்தை தனக்கு போதித்ததை கிம் இல் சங் நினைவு கூர்கிறார். படுக்கை நேரக் கதைகளில் அவரது தந்தை லெனின் மற்றும் அக்டோபர் ரசியப் புரட்சியையும் கற்பித்ததாக கூறுகிறார்.

வட கொரியாவின் வரலாற்று நூல்களின் படி கிம் இல் சுங் 1920-களில் ஒரு இளம் கம்யூனிஸ்ட்டாக மாறினார். வட கொரியா அல்லாத வரலாற்று அறிஞர்களின் பார்வையிலும் அவர் 1930 மற்றும் 40 களில் ஜப்பானிய எதிர்ப்புச் சண்டையில் இடம்பெற்றிருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் அவர் சோவியத் யூனியன் இராணுவத்தில் சேர்ந்து ஜப்பானை எதிர்த்துப் போரிட்டார். இதன் பொருட்டு ரசிய தலைவர் ஸ்டாலின் கொரிய தீபகற்பத்தின் வடக்கு பகுதியின் தலைவராக கிம் இல் சுங்கை நியமித்தார்.

War

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பான் நேச நாடுகளிடம் சரணடைந்தது. கொரியாவின் மீது ஜப்பானின் ஆதிக்கம் குறைந்தது. இரு கொரியாவிலும் முரண்பாடு தோன்றி அது கொரியப் போராக 1950-ல் வெடித்தது. இந்தப் போரில் தென் கொரியாக்கு ஆதரவாக அமெரிக்காவும், வட கொரியாக்கு ஆதரவாக ரசியாவும் ஈடுபட்டன. 1953-ல் வெற்றி தோல்வியின்றி இப்போர் முடிவடைந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதிக மக்கள் கொல்லப்பட்ட போர் இதுதான். சுமார் 30 இலட்சம் கொரிய மக்கள் கொல்லப்பட்டனர்.

1950 கொரியப் போரில் அமெரிக்க ஆதரவுடன் தென் கொரியா, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வட கொரிய மக்களை கம்யூனிஸ்டுகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் என கொன்றிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை தோற்கடிக்கப் போட்ட குண்டுகளை விட அதிகம் குண்டுகளை வட கொரியாவில் போட்டிருக்கிறது அமெரிக்கா. சுமாராக 6,35,000 குண்டுகள். அதில் நேபாம் எனும் நச்சுவாயுக் குண்டுகள் மட்டும் 32,557. இதில் நகரம், கிராமம் வித்தியாசம் இல்லாமல் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன.

இத்தனைக்கும் சில அணுக்குண்டுகளைப் போட்டு கொரியப் போரை பத்து நாட்களுக்குள் முடிப்பதாக அமெரிக்கப் படைத் தளபதி ஜெனரல் மக் ஆர்தர் சவால் விட்டார். ஆனால் 3 ஆண்டுகள் முடிந்த போரில் வெல்ல முடியவில்லை. தென் கொரியாவிலும் அப்பாவி மக்களை அமெரிக்கா கொன்றிருக்கிறது. இந்த போர்க்குற்றத்திற்காக இன்று வரை அமெரிக்காவோ அதன் தளபதிகளோ தண்டிக்கப்படவில்லை. கிம் இல் சுங் ஏனோ தானோ என்று ஒரு தலைவராகப் பதவி ஏற்கவில்லை. மேற்கண்ட அரசியல் அடிப்படையே அப்படி ஒரு தலைவரைத் தோற்றுவித்தது.

1950 போருக்குப் பிறகு முறையான போர் அமைதி ஒப்பந்தம் ஏற்படாமல் இருநாடுகளும் இன்று வரையிலும் பிரிந்தே இருக்கின்றன. ஆனால் இரண்டுமே தாம்தான் உண்மையாகக் கொரியா என்று வாதிடுகின்றன.

போருக்குப் பிறகு தனது பொருளாதார மற்றும் விவசாயக் கொள்கையின் காரணமாக கிம் இல் சுங் பிரபலமானார். இதைத் தென் கொரியாவின் மத்திய வங்கியே 2020-ம் ஆண்டில் ஒத்துக் கொண்டிருக்கிறது. அதன் படி 1950-களின் பிற்பகுதியில் வடகொரியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 13.7 சதவீதம். 1960-கள் வரை வட கொரியாவின் தனிநபர் வருமானம் தென் கொரியாவின் தனிநபர் வருமானத்தை விட அதிகம் என்று தென் கொரிய மத்திய வங்கி கூறியிருக்கிறது.

கொரிய போருக்குப் பிறகு இதர கம்யூனிஸ்டு தலைவர்கள் ஓரங்கட்டி கிம் அதிகாரத்தை கைப்பற்றினார். கொரியாவின் மரபார்ந்த ஜுச்சே சிந்தாந்தத்தை ஏற்பதாகவும் கூறினார். 1955-ம் ஆண்டில் அவரது முதல் பொதுக்கூட்ட உரையில் சித்தாந்தம், தன்னம்பிக்கை, மற்றும் வெளிநாட்டு சக்திகளிடமிருந்து சுதந்திரம் ஆகியவை வட கொரியா அரசாங்கத்தை வழிநடத்தும் என்று குறிப்பிட்டார்.

1970-களில் வலுவான பொருளாதார வளர்ச்சியை நிறுவிய பிறகு கிம் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தினார். ஊழல் குற்றச்சாட்டில் சிலர் களையெடுக்கப்பட்டதோடு கூடவே நேர்மையான கம்யூனிஸ்டுகளும் ஒழிக்கப்பட்டனர். இதற்கு இராணுவம், உளவுத்துறை மூலம் முழுமையான கண்காணிப்புடன் கூடிய அரசாங்கம் கிம்மால் நிறுவப்பட்டது.

கிம் இல் சுங்கிற்கு பிறகு வந்த இரண்டு கிம் தலைவர்கள் குறித்து அடுத்த பாகத்தில் போர்ப்போம். இவர்கள் காலத்தில்தான் வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தி உலகையே மிரள வைத்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?