இலங்கை பொருளாதார நெருக்கடி NewsSense
உலகம்

இலங்கை பொருளாதார நெருக்கடி : இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

NewsSense Editorial Team

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பிரச்சனைகளை எதிர்த்து மக்கள் கடந்த பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். அதன் விளைவாக இலங்கை அதிபர் கோத்தய ராஜபக்சே தன் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.

இலங்கை அதிபர் மாளிகை உட்படப் பல அரசு அலுவலகங்கள், வெகுண்டெழுந்த மக்கள் கூட்டத்தால் முற்றுகை இடப்பட்டுள்ளதைத் தினமும் ஊடகங்களில் பார்க்க முடிகிறது.

இலங்கை நாடாளுமன்றம் அடுத்த அதிபரைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு காலத்தில் மத்திய வருமான பொருளாதாரமாக இருந்த இலங்கை தொடர்ந்து பல்வேறு சமூக குறியீடுகளில் முன்னேறி வந்தது. துரதிருஷ்டவசமாக இலங்கை பொருளாதார விவகாரங்கள் தவறாகக் கையாளப்பட்டது, தற்போதைய மோசமான பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுத்தது.

சரி இந்த பிரச்சனைகள் எல்லாம் எப்போது, எங்கிருந்து தொடங்கியது..?

சுற்றுலா:

முதலில் இலங்கையின் சுற்றுலாத் துறையிலிருந்து தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டு இஸ்லாமிக் ஸ்டேட் என்று அழைக்கப்படும் ஆயுதமேந்திய போராட்டக் குழுவினர் இலங்கையில் உள்ள பிரபல தங்கும் விடுதிகள் மற்றும் தேவாலயங்களைக் குண்டு வைத்துத் தகர்த்தனர். அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் முடக்கியது.

இது இலங்கையின் சுற்றுலாத் துறையை மிகக் கடுமையாகப் பாதித்தது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி இலங்கையின் ஒட்டுமொத்த ஜிடிபியில் அந்நாட்டின் சுற்றுலாத் துறையிலிருந்து மட்டும் 5.6 சதவீதம் வருவாய் வந்து கொண்டிருந்தது. கொரோனா வைரஸ் அதிகம் பரவத் தொடங்கிய 2020 ஆம் ஆண்டில், இலங்கை பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த ஜிடிபியில், சுற்றுலாத் துறையின் பங்களிப்பு வெறும் 0.8 சதவீதமாகச் சரிந்தது.

இதே நிலை இந்தியாவிலும் எதிரொலித்தது. 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் ஓட்டு மொத்த ஜிடிபியில் 9.3 சதவீதமாக இருந்த சுற்றுலாத்துறையின் பங்களிப்பு, கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டில் கணிசமாகக் குறைந்தது.

வரிகள் குறைப்பு & ஒழிப்பு:

கோத்தய ராஜபக்சே தலைமையிலான அரசு இலங்கையில் நடைமுறையில் இருக்கும் வாட் வரியை எட்டு சதவீதமாகக் குறைத்தது. பெரு நிறுவனங்கள் செலுத்தும் கார்ப்பரேட் வரியை 28 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைத்தது.

Pay as you earn (PAYE) வரி மற்றும் இரண்டு சதவீத தேசத்தைக் கட்டமைக்கும் வரி (Nation Building Tax) போன்ற சில வரிகளை முழுமையாக ரத்து செய்தது இலங்கை அரசு. இவை அனைத்தும் வரி செலுத்துவோர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்தது. இலங்கையில் ஒட்டுமொத்தமாக வரி செலுத்தி வந்த குடிமக்கள் மற்றும் வியாபாரங்களின் எண்ணிக்கையை சுமார் 33.5 சதவீதம் குறைத்தது.

கோத்தபய ராஜபக்சே

அப்படியே, இந்திய அரசாங்கம் பக்கம் திரும்பினால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி என்கிற புதிய சரக்கு மற்றும் சேவை வரி வழிமுறையை இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் பெரு நிறுவனங்கள் செலுத்தும் கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது. தனி நபர்களுக்கான வருமான வரி வரம்பில் பெரிய மாற்றம் கொண்டு வரப்படவில்லை என்றாலும் 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு முழு வரிவிலக்கு வழங்கப்பட்டது. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனால் 5 லட்சம் ரூபாய்க்குள் சம்பாதிப்பவர்கள், வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்து வரி விலக்கு பெறலாம்.

கடன் பிரச்னைகள்

இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாலிசி ஸ்டடிஸ் ஆஃப் ஸ்ரீலங்கா என்கிற அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு அந்நாட்டின் பொருளாதாரம் குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இலங்கை அரசு மிக மோசமாகக் கடன் வாங்குவது, ஓரிடத்தில் கடன் வாங்கி மற்றொரு இடத்தில் செலுத்திக் குறுகிய காலத்தில் பிரச்சனையைச் சமாளிப்பது, குறுகிய காலத்தில் நல்ல லாபம் பார்க்க முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைக் கொண்டு வந்து இலங்கையில் கொட்டுவது, இலங்கையின் ஹோட்டல் துறையில் அந்நிய நேரடி முதலீடுகளில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சுவது... எனப் பல பிரச்னைகளைச் சுட்டிக் காட்டியது.

மிக முக்கியமாக 2005 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் இரு மடங்குக்கு மேல் அதிகரித்து 56.3 பில்லியின் அமெரிக்க டாலரைத் தொட்டது.

சீனா, இலங்கை அதிபர்கள்

2019 ஆம் ஆண்டு இலங்கையின் ஒட்டு மொத்த ஜிடிபியில் 42 சதவீதமாக இருந்த வெளிநாட்டுக் கடன் 2021 ஆம் ஆண்டில் 119 சதவீதமாக அதிகரித்தது. 2022 ஆம் ஆண்டுக்குள் இலங்கை அரசு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை நாலு பில்லியன் அமெரிக்க டாலர். ஆனால் ஏப்ரல் 2022 நிலவரப்படி இலங்கை அரசின் அந்நியாய செலாவணி கையிருப்பு வெறும் 2.3 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்து கிடக்கிறது.

மார்ச் 2022 நிலவரப்படி இந்தியாவின் ஒட்டு மொத்த வெளிநாட்டுக் கடன் 620.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2022 ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியில் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி 580 பில்லியன் டாலராக இருக்கிறது. சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்றிலேயே ஐந்து இந்திய மாநிலங்கள் மிக அதிக அளவில் கடன் வாங்கி வைத்திருப்பதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை அரசு தன்னுடைய கடன் பிரச்னைகளைச் சமாளிக்க சகட்டுமேனிக்கு இலங்கை ரூபாய் நோட்டுகளை அச்சிட்டது. கடைசியில் அது இலங்கை ரூபாய் கரன்சியின் மதிப்பை மிகப்பெரிய அளவில் குறைத்துவிட்டது. அதன் விளைவாக அந்நிய செலாவணி கையிருப்போம் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

இந்தியா தன்னுடைய கடன்களை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தன்னுடைய ஏற்றுமதி வியாபாரத்தையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு பிரச்சனையை சுமுகமாகச் சமாளிக்க முடியும்.

ஆர்கானிக் விவசாயம்

கடந்த ஏப்ரல் 2021ல் ராஜபக்சே அரசு, இலங்கை முழுக்க ஆர்கானிக் விவசாய முறையை ஒரே நேரத்தில் அமல்படுத்தியது. ரசாயண உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை முற்றிலும் தடை செய்தது. இது இலங்கை பொருளாதாரத்தின் மிக முக்கிய வருவாய் மூலங்களில் ஒன்றான தேயிலை (டீ) வியாபாரத்தைக் கணிசமாகப் பாதித்தது. சுருக்கமாக இலங்கையின் ஒட்டு மொத்த விவசாயத் துறையும் குறைவான விளைச்சலை எதிர்கொண்டது. இதனால் அன்றாட உணவுக்குக் கூட இலங்கை அல்லல் படும் சூழல் ஏற்பட்டது.

உலக அளவில் லேயே இரண்டாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருந்த இலங்கை, ஆர்கானிக் விவசாயப் பிரச்சனையால் சந்தையில் தன் இடத்தை இழந்து விட்டது. இத்தனை பிரச்சனைகள் ஏற்பட்ட பிறகே, இலங்கை அரசு விழித்துக் கொண்டு ஆர்கானிக் விவசாயத்தைக் கைவிட்டது. ஆனால் அதற்குள் இலங்கை பொருளாதாரத்தில் என்ன பிரச்சனைகள் வெடித்துக் கிளம்பக் கூடாதோ அதெல்லாம் வெளிப்படத் தொடங்கிவிட்டது. ஒரு கட்டத்தில் இலங்கை தன் நாட்டு மக்களுக்கான அரிசியைக் கூட இறக்குமதி செய்ய வேண்டி வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கை சுமார் 450 மில்லியன் அமெரிக்க டாலர் அரிசியை இறக்குமதி செய்தது.

இந்தியா தன்னுடைய உணவுத் தேவைகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் அளவுக்குத் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதை இலங்கையை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் இந்திய உணவுக் கழகத்தில் சுமார் 1,550 டன் உணவு தானியங்கள் சரியான அடிப்படை கட்டமைப்பு வசதிகளின்றி வீணானதாக இந்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகமே கூறியுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் இலங்கைப் பொருளாதாரத்தை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை அதிகம் வாங்கும் நாடுகளில் ரஷ்யாவுக்கு இரண்டாவது இடம். அதுபோக இலங்கைக்குச் சுற்றுலா வருபவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்பது. எனவே போர் நடவடிக்கையால் இரண்டுமே இலங்கையைப் பலமாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது.


மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இலங்கையில் ஒரு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது. இதன் விளைவாக மின்சார பற்றாக்குறை எரிபொருள் பற்றாக்குறை மிகக் கடுமையான பணவீக்கம் ஏற்பட்டு இலங்கை மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

இன்று இலங்கையில் மருத்துவ சேவைகள் சரியாகக் கிடைப்பதில்லை, மாணவர்கள் தேர்வு எழுத போதிய காகிதங்கள் இல்லாததால் பள்ளிகள் முறையாகச் செயல்படவில்லை, இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகம் மற்றும் ராஜ்ஜிய உறவுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுருக்கமாக இலங்கையை யார் மீட்பார்கள் என்றே தெரியவில்லை.


இந்தியாவிடம் 74 நாட்களுக்கான கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. உலக அளவில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் நெருக்கடியை மனதில் வைத்துக் கொண்டு இதை வருங்காலத்தில் அதிகரிக்க வேண்டும்.

அதேபோல இந்தியா நிலக்கரி பற்றாக்குறை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 5.9 சதவீதம் சரிந்து இருக்கிறது. இது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 2022 காலகட்டத்தில் இந்தியாவின் பணவீக்கம் 7.79 சதவீதமாக இருந்தது. விலைவாசி கட்டுக்கடங்காமல் தொடர்ந்து அதிகரித்து வந்தால் அது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

இந்த பிரச்சனைகளை எல்லாம் இலங்கையை பார்த்தாவது இந்தியா தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். திருத்திக் கொள்ளும் என நம்புவோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?