Eiffel Tower Canva
Wow News

உலக அதிசயமான ஈபிள் டவர் கட்டப்பட்டது எதற்காக? ஆரம்பத்தில் பாரிஸ் மக்கள் அதை வெறுத்தது ஏன்?

NewsSense Editorial Team

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தைப் பற்றிச் சிறு வயதிலிருந்தே பாடங்களில் படிக்காதவர் யாரும் இருப்பார்களா என்ன?

90 -களில் காதல் பாடல்கள் என்றால் ஈஃபில் டவருக்கு தான் பெட்டியைக் கட்டுவார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் எழுபது இலட்சம் பேர் வரை ஏறி இறங்கும் இடமாக ஈஃபிள் கோபுரம் இருக்கிறது என்கிறது பிரான்சு நாட்டுச் சுற்றுலாத் துறைப் புள்ளிவிவரம்.

அந்நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரின் அடையாளமாகவும் மாறிவிட்ட ஈஃபிள் கோபுரம், 1889ஆம் ஆண்டில்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டது. அதைக் கட்டி முடிப்பதற்குள் அதை உருவாக்கிய கஸ்டவ் ஈஃபிளுக்குத்தான் எத்தனையோ சோதனைகள்...!

உண்மையில், ஈஃபிள் கோபுரமானது தற்காலிகக் கட்டுமானமாகத்தான் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. சரியாகச் சொன்னால் இருபது ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கக்கூடிய ஒன்றாக இருந்தால் போதும் என்றே, ஈஃபிள் கோபுரப் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அதன் எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான கட்டுமானக் கலை அமைப்பு, அதன் விதியையே மாற்றிவிட்டது என்று கூறமுடியும்.

Eiffel Tower History

வாழ்க்கையில் ஒரு முறையாவது ஈஃபிள் கோபுரத்துக்கு ஒரு எட்டு போய்வர யாருக்குத்தான் விருப்பம் இருக்காது... எப்போது வாய்க்கும் என்பது வேறு விசயம்!

எப்போது அங்குப் போவது என்றாலும் அதற்கு முன்னர் அதன் கட்டுமான வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். ஈஃபிள் கோபுரக் கட்டுமானம் பற்றிய சிறு வரலாறு இதோ!

ஈஃபிள் கோபுரம் எப்போது கட்டப்பட்டது?

ஈஃபிள் கோபுரத்தின் கட்டுமான காலம், மிக நீண்டதாக இருக்கவில்லை. அதற்காக பள்ளம் தோண்டும் பணி 1887ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. அடுத்த இரண்டாவது ஆண்டில் அதாவது 1889 மார்ச் 31 ஆம் நாளன்று கட்டுமானப் பணி முடிக்கப்பட்டது. ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரப்படி, மொத்த ஈஃபிள் கோபுரத்தையும் கட்டிமுடிக்க 2 ஆண்டுகள் 2 மாதங்கள் 5 நாள்கள் எடுத்துக்கொண்டுள்ளனர்.

இது சரி... இவ்வளவு பெரிய பிரமாண்டமான ஒரு கோபுர அமைப்பை, நகரத்தின் மையத்தில் வைப்பதென முடிவு செய்தது யார் எனக் கேள்வி எழக்கூடும்.

கஸ்டவ் ஈஃபிள்

ஈஃபிள் கோபுரத்தைக் கட்டியது யார்?

ஒட்டுமொத்தக் கோபுரத்தையும் கட்டிமுடிக்கும் திட்டத்தை நிறைவேற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் தான், கஸ்டவ் ஈஃபிள். இரும்பால் ஆன இந்தக் கட்டுமானத்தின் தொடக்க நிலை வடிவமைப்பாளர், அவரே. தி எட்டாபிலிஸ்மெண்ட்ஸ் ஈஃபிள் எனும் அந்தக் கட்டுமான நிறுவனத்தில், மௌரிஸ் கோச்லின், எமிலி நோகுயீர் ஆகிய பொறியாளர்களும், ஸ்டீபன் சௌஸ்டெர் எனும் கட்டுமான கலைஞரும் அவருக்கு உதவி செய்தனர். ஆனாலும், கடைசியாக ஈஃபிளின் பெயரையே கோபுரத்துக்குச் சூட்டிவிட்டனர்.

கோபுரக் கட்டுமானத்தில் பணியாற்றிய பொறியாளர்கள், அறிவியலாளர்கள், கணிதவியலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவர்கள் அனைவரின் பெயர்களும் கோபுரத்தின் பக்கவாட்டில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 72 பேரின் பெயர்கள் அங்குப் பதியப்பட்டிருக்கின்றன.


ஏன் இதை உருவாக்கினார்கள்?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கட்டடக் கலையானது தொழில் துறையாக மாறியிருந்தது. அதாவது, ஈஃபிள் கோபுரம் கட்டப்பட்ட காலகட்டத்தில்...! அப்படியான சூழலில் படைப்புத் திறனும் தொழில் திறனும் சேர்ந்து இந்த உலக அதிசயத்தை உருவாக்கின என்பது தான் பொருத்தம்!

Eiffel Tower

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்று, 1889இல் நூறு ஆண்டுகள் ஆகியிருந்தன. அந்த நூற்றாண்டைக் கொண்டாட பிரான்சு நாட்டில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள், கட்டுமானங்கள் என அவரவர்க்குக் களத்தில் இறங்கினார்கள். பண்பாட்டு அழகியலுக்குத் தனித்துவம் பெற்ற பிரெஞ்சுக்காரர்களுக்கு இப்படி ஒரு கொண்டாட்டம் என்றால் கேட்கவா வேண்டும்!

அதையொட்டி, 1889ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் ’சாம்ப்ஸ் தி மார்ஸ்’ பகுதியில் உலகளாவிய பெரும் பொருட்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதன் மூலம், பிரான்சு நாட்டின் தொழில்துறை திறனையும் அதன் ஆற்றலையும் மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்பது அந்த நாட்டு அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அதன்படி, ஈஃபிள் கோபுரமானது செய்னால் உருவாக்கப்பட்டது. அதன் வட்ட வடிவமான பகுதி பொருட்காட்சியின் நுழைவிடமாக அமைக்கப்பட்டது. சரியாகச் சொல்வதென்றால், அந்தப் பொருட்காட்சியின் நுழைவாயிலாக ஈஃபிள் கோபுரம் அமைந்தது.

இந்த உலக உலோகக் கட்டுமானமானது அப்போது உருவாகிவந்த கட்டுமான கலையின் புத்தம் புதிய வடிவமாகவும் இருந்தது. 1884இல், கஸ்டவ் ஈஃபிளால் நிறுவப்பட்ட ஈஃபிள் எண்டர்பிரைசில் பணியாற்றிய மௌரிஸ் கோச்லின், எமிலி நோகுவயீர் ஆகியோர், அந்தப் பொருட்காட்சிக்கான திட்டமிடலைத் தொடங்கினார்கள். முதலில் 300 மீட்டர் உயரம் கொண்ட உயர் கோபுரம் அமைப்பதே அவர்கள் முன்வைத்த திட்டம். அதன்பிறகு, ஸ்டீபன் சாவெஸ்டரிடம் அதை மறுவடிவமைப்பும் சீரமைப்பும் செய்து தருமாறு கஸ்டவ் ஈஃபிள் கேட்டுக்கொண்டார். அதன்படி சாவெஸ்டர் கூடுதலாக பல வளைவுகளையும் அலங்கார அமைப்புகளையும் சேர்த்தார். அவரே கோபுரக் கட்டுமானத்துக்கு அழகுக்கு மேல் அழகு சேர்த்தார்.

Eiffel Tower

இந்த இரும்புக் கோபுரத்தைக் கட்டிமுடிக்க 2 ஆண்டுகள், 2 மாதங்கள், 5 நாள்கள் மட்டுமே ஆனது. அந்தக் காலகட்டத்தில் பெரும் தொழில்திறன் சாதனையாக அமைந்தது, இன்னொரு முக்கியமான அம்சம்.

மொத்தக் கோபுரத்தின் ஒவ்வொரு பிரிவும் ஆக அதிகபட்சமான துல்லியத்துடன் கணக்கிடப்பட்டு, திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. அப்போதுதான் இரும்புத் தொழிலானது வளர்ந்துவரத் தொடங்கிய காலமும் என்பதால், கட்டுமான பொருளின் தன்மையைப் பற்றி நன்றாக யோசித்துத் தீர்மானித்து வாங்கினார்கள். முற்றிலும் இரும்பினால் ஆன இந்தக் கோபுரக் கட்டுமானத்துக்கு ஏற்ற அமைப்புகளை உருவாக்குவதற்கு ஏற்ப, இரும்பின் உற்பத்தி பெருமளவில் சிரத்தை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் விலையானது கட்டுப்படியானதாகவும் இருந்தது வசதியாக அமைந்துபோனது.

பாரிஸ் காரர்களுக்குப் பிடித்திருந்ததா?

இப்போது, பாரிஸ் நகரவாசிகள் ஈஃபிள் கோபுரத்தின்பால் பெருமிதப்பட்டு சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வார்கள். மொத்த நகரத்திலும் உயர்ந்து நிற்கக்கூடிய- நிச்சயமாக பாரிஸ் நகரத்துக்குப் பெருமை சேர்க்கும் ஓர் அடையாளச் சின்னமாகவும் அமைந்துபோனது. ஆனால், இதன் கட்டுமானம் நிறைவடைந்த போது பெரும்பாலான பாரிஸ் காரர்களுக்கு இது அவ்வளவு பிடித்தமானதாக இல்லை என்பதும் வரலாற்று உண்மை!

மாப்பசந்த் முதலிய கலைஞர்கள் பலருமே கூட கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் சேர்ந்து கையெழுத்திட்ட ஒரு முறைப்பாட்டுக் கடிதத்தில், ஈஃபிள் கோபுரக் கட்டுமானம் பற்றி கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தனர். அழகியலும் தனித்துவமும் வாய்ந்த பாரிஸ் நகரின் எழிலை இந்த இரும்புக் கோபுரம் கெடுத்துவிடும் என்பதே அவர்களுடைய எண்ணமாக இருந்தது! பெரும்பாலான பாரிஸ்காரர்கள் ஈஃபிள் கோபுரத்தை, கிரிட் என்றும் தொழிற்சாலை புகைபோக்கி என்றுமே கிண்டலாகக் குறிப்பிட்டனர்.

ஆனபோதும், அவற்றையெல்லாம் தவிடுபொடி ஆக்கிவிட்டு பாரிஸ் நகரத்தின் உயர்ந்த அம்சங்களில் ஒன்றாக ஈஃபிள் கோபுரம் உருப்பெற்று விட்டது.

eiffel tower

ஈஃபிள் கோபுரத்துக்கு நாள் குறிக்கப்பட்டதா?

சந்தேகமே இல்லாமல், ஈஃபிள் கோபுரமானது தற்காலிகமான ஒரு கட்டுமானமாகவே அமைக்கப்பட்டது. முற்ற முழுக்க அது அப்போதைய பொருட்காட்சிக்கான ஒன்றாகவே உருவாக்கப்பட்டது. இருபது ஆண்டுகள் வரை வைத்திருந்து விட்டு, அதை அங்கிருந்து அகற்றி எடுத்துவிடுவதே திட்டம்.

ஆனால், 1897ஆம் ஆண்டில், அங்கிருந்து முதல் வானொலி ஒலிபரப்புச் சேவை தொடங்கப்பட்டது. அதை முன்னிட்டு ஈஃபிள் கோபுரம் நகரத்தின் கேந்திரமான இடமாக மாறிப்போனது. அதாவது, அங்கு சும்மா போய் சுற்றிப் பார்த்துவிட்டு வரக்கூடியதாக மட்டுமன்றி, அதற்கு இராணுவ கேந்திர முக்கியத்துவமும் கிடைத்தது. இதுவே பாரிஸ் நகரத்தினரை ஈஃபிள் கோபுரத்தை மனமொப்பி ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது எனக் கூறமுடியும்.

முதல் உலகப் போரின்போது, முக்கியமான தந்தித் தகவல்கள் வேவுபார்க்கவும் அவற்றின் மூலம் மதிப்புமிக்க தகவல்களைப் பெற்று, வேவுபார்ப்பதில் ஈஃபிள் கோபுரம் மிகவும் உதவியாக இருந்தது. அது அப்படியே வளர்ந்து இன்றைக்கு ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் 120 ஒளிபரப்பு ஆண்டெனாக்கள் இயங்கும் அளவுக்கு எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது. சும்மா இல்லை, 32 வானொலி நிலையங்கள், 42 தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆண்டெனாக்களை ஈஃபிள் கோபுரம் தாங்கிக்கொண்டு நிற்கிறது.

இது மட்டும் அல்ல, தொழிற்புரட்சியிலும் ஈஃபிள் கோபுரத்தின் பங்களிப்பு மிகப் பெரியது ஆகும். ஐரோப்பாவின் வளர்ச்சிப் பரிணாமத்தில் ஈஃபிள் கோபுரமும் பங்காற்றி உள்ளது.

ஈஃபிள் கோபுரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளை இரவு நேரத்தில் பார்ப்பது, அவ்வளவு ரம்மியமானது. ஒவ்வொரு முறை மாலை மங்கி ஒரு மணி நேரம் கழித்தும், ஒட்டுமொத்த கோபுரமும் ஐந்து நிமிடங்களுக்கு ஒளிப் பொறிகளால் தெறிக்கவைக்கும். அப்போது அதை அருகிருந்து பார்ப்பது இருக்கிறதே, அடடா, அத்துணை அழகு! கண்கொள்ளாக் காட்சி என்பார்களே, அது இதுதான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?