1984 காலகட்டத்தில் இந்திய அரசியலில் பல்வேறு திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தியாவின் அசைக்க முடியாத பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார் விபி சிங், ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அதோடு நிதி அமைச்சகத்தின் செயலாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ் வெங்கடராமனும், அமலாக்கத் துறையின் இயக்குநராகக் கண்டிப்பான அதிகாரி என்று பெயரெடுத்த (முன்னாள் ராணுவ வீரர் வேறு) புரே லால் இ.ஆ.ப இருந்தார். இந்த காம்போ திருபாயை படாதபாடு படுத்தியது எனலாம்.
நாளடைவில், இதே எஸ் வெங்கடராமன், அம்பானிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாகவும், ஆகையால் தான் அவர் ஆர்பிஐ ஆளுநர் பதவியில் அமர்த்தப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவியது. மேலும், வெங்கடராமனின் வாரிசு, திருபாய் அம்பானியின் மருமகன் (நீனா அம்பானியின் கணவர்) ஷியாம் கோத்தாரியோடு சென்னையில் சில வியாபார தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்பட்டன. இவையனைத்தும் உண்மையா, வதந்தியா என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம். அவரது அரசுப் பணிக்காலத்துக்குப் பின், ரிலையன்ஸ் இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குருமூர்த்தி ஒரு பக்கம் இந்தியன் எக்ஸ்பிரஸில், அம்பானியை துவைத்துத் தொங்கவிட்டுக் கொண்டிருக்க, மறுபக்கம் புரே லாலும் வெளிநாடுகளுக்கு எல்லாம் பயணித்து தன் பங்குக்கு ரிலையன்ஸ் பரிவர்த்தனைகள் துருவத் தொடங்கினார்.
1985 காலகட்டத்தில் திருபாய் அம்பானிக்கு குடைச்சல் கொடுக்கும் விதத்தில் பல ஏற்றுமதி இறக்குமதி விதிகளை மாற்றினார் விபி சிங். அவைகளில் பல, ரிலையன்ஸின் லாபத்தை காலி செய்வதாக இருந்தன.
1986 - 87 காலத்தில் இந்திய அரசின் பல்வேறு அமைச்சகத்தைச் சேர்ந்த பல அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ரிலையன்ஸ் ஆலையில் சோதனை நடத்தினர். எம் எஸ் குரோவர் தலைமையிலான அணி அந்த சோதனை குறித்து ஓர் அறிக்கையைச் சமர்பித்தது. அதில் ரிலையன்ஸ் போதுமான விவரங்களைக் கொடுக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
அதன் பிறகு நடைபெற்ற விசாரணைகளிலும் ஆலையில் என்ன எந்திரம் பயன்படுத்தப்படுகிறது போன்ற விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. எட்டு ஸ்பின்னிங் லைன்களுக்கு பதிலாக 12 ஸ்பின்னிங் லைன்கள் இருப்பது எப்படி? பி டி ஏ ஆசிட் கம்பிரசர் எந்திரத்தின் வேகம் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவுக்குத் தேவையானதை விட 50 சதவீதம் அதிகமாக இருப்பது ஏன்? என பல கேள்விகளுக்கு சரியாக விடை கிடைக்கவில்லை.
கடைசியாக அந்த அறிக்கை சுங்க வரித் துறையினரிடம் சென்றது. சுங்க வரித் துறையை ஏமாற்றி 1,14,500 (1145 பில்லியன் ரூபாய்) கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்களை ரிலையன்ஸ் கடத்தியதாகக் குற்றம்சாட்டி நோட்டிஸ் அனுப்பியது. 1,19,600 கோடி ரூபாய் சுங்க வரி ஏய்ப்பாக கணக்கிட்டது.
சோதனைகள் எல்லாம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, ரிலையன்ஸ் பங்குகளை வெளியிடுவதற்குப் பதிலாகக் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிறைய முதலீட்டுத் தொகையைத் திரட்டிக் கொண்டிருந்தார் திருபாய் அம்பானி. கடன் பத்திரங்களுக்கு வடிகட்டி லாபத்தில் குறை காண்பதற்குப் பதிலாக, அதைப் பங்குகளாக மாற்றிவிடலாமென ஆலோசித்தார் திருபாய் அம்பானி.
அதற்கும் தடைக் கல்லாக இருந்தது நிதி அமைச்சர் வி பி சிங்தான். ஒரு கடன் பத்திரத்தை வெளியிடும்போது அது ஈக்விட்டி பங்குகளாக மாற்றக்கூடிய கடன் பத்திரங்கள் (Convertible Debentures) அல்லது ஈக்விட்டியாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் என (Non Convertible Debentures) குறிப்பிட வேண்டும்.
இப்படி ஈக்விட்டியாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை, பங்குகளாக மாற்ற வேண்டுமானால் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் தேவைப்பட்டது. 1980களின் முற்பகுதியில் ஈக்விட்டியாக மாற்ற இயலாத பல கடன் பத்திரங்களை, பங்குகளாக மாற்ற, நிதி அமைச்சகத்திடம் அனுமதி பெற்று வந்தார் திருபாய் அம்பானி.
திடீரென 1985 - 86 காலகட்டத்தில் இதேபோல கடன் பத்திரங்களைப் பங்குகளாக மாற்றுவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் அனுமதி கேட்டபோது அதை விபி சிங் அனுமதிக்காமல் கிடப்பில் போட்டார்.
திருபாய் அம்பானி மற்றும் பல்வேறு தொழிலதிபர்களுக்கு எதிரான மனநிலையிலிருந்த வி பி சிங் நிதி அமைச்சரான பின், 1985 மே 29ஆம் தேதி, பி டி ஏ ஆசிடை அரசின் கட்டுப்பாட்டின் கீழ், அரசு அனுமதியோடு இறக்குமதி செய்யப்பட வேண்டிய பொருட்களில் ஒன்றாகப் பட்டியலிட்டார்.
இப்படி ஒரு அறிவிப்பு வரவிருப்பதை முன்பே தெரிந்து கொண்ட அம்பானி, அதிரடியாக ஒரு விஷயத்தைச் செய்து காட்டினார். அரசின் பி டி ஏ ஆசிட் இறக்குமதி அறிவிப்பில், மே 29ஆம் தேதிக்குள் Irrevocable Letter of Credit வழங்கப்பட்டுள்ள இறக்குமதிகளுக்கு 29 மே முதல் 90 நாட்களுக்கு பிடிஏ ஆசிடை இறக்குமதி செய்ய கால அவகாசம் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மே 29ஆம் தேதிக்குள் திருபாய் அம்பானி 1,14,000 டன் பிடிஏ ஆசிடை இறக்குமதி செய்வதற்கான அனைத்து லெட்டர் ஆஃப் கிரெடிட் ஆவணங்களையும் பெற்று அரசிடம் சமர்ப்பித்துவிட்டார். மேலும் சில எல்ஓசிகளில் சரக்கு வந்து சேர்வதற்கான காலத்தை 1986 ஜூன் வரை நீட்டித்துக் கொண்டார்.
ஏற்கனவே பி டி ஏ ஆசிடை தயாரிக்க ஒப்புதல் பெற்றிருந்தாலும், ஆலையில் உற்பத்திப் பணிகள் தொடங்கப்படும் வரை, தேவையான பி டி ஏ ஆசிடை விட 1,14,000 டன் இறக்குமதி கொஞ்சம் அதிகமானது தான். இதைப் பார்த்த விபி சிங், கடுப்பாகிவிட்டார். வியாபார சதுரங்கமாடிக் கொண்டிருந்த அம்பானி, இன்னொரு கையில் அரசியல் சதுரங்கமும் நன்றாக ஆடினார் என்பதற்கு இது ஒரு சாட்சி.