‘பெற்றால் தான் பிள்ளையா’ ‘தாய் மேல் ஆணை’ ‘அன்னை ஓர் ஆலயம்’ “காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா, அம்மான்னா சும்மா இல்லடா” என்று இந்த இரண்டு நாட்கள் சமூக வலைத்தளங்களும் வாட்சப் ஸ்டேட்டஸ்களும் அனல் பறக்கும் அன்னையர் தினத்தை முன்னிட்டு.
இன்று உள்ள காலகட்டத்திற்கு ஏற்றபடி அன்னையை, அன்னையர் தினத்தை வீடியோ கால் வழியாகவும், விருந்து வைத்தும் விதவிதமாக கொண்டாடி வருகின்றனர். அன்னையர் தின கொண்டாட்டம் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் வரலாறு என்றும் மாறாது. சோழ சாம்ராஜ்ஜியம் கோலொச்சிய காலத்தில், தாய்க்காக கோவிலே கட்டிய வரலாறும் நடந்ததுண்டு. கட்டியாது வேறு யாருமல்ல.. ராஜேந்திரசோழனே. ராஜராஜசோழனின் மனைவியருள் ஒருவரான பஞ்சவன் மாதேவி எனும் சிற்றன்னைக்கே பள்ளிப்படை கோவில் எழுப்பியுள்ளார் ராஜேந்திரச்சோழன். 1000 வருடம் கடந்தும் கும்பகோணம் அருகில் வழிபாடுகளோடு, பழமைமாறாமல் ஒளிவீசுகிறது அவ்விடம்.
சோழப்பேரரசின் சிம்மாசனம், சூரிய சந்திரர் இருக்கும் வரை புகழ் பேசும் “ராஜராஜசோழன்” பற்றி அனைவரும் அறிந்ததே. அவரின் பல மனைவியரில் பஞ்சவன் மாதேவி மிகவும் தனித்துவமானவர். மகன் ராஜேந்திர சோழனுக்கும் மிகவும் பிடித்த சிற்றன்னை பஞ்சவன் மாதேவிதான். சேரர் குறுநில மன்னர்களுள் ஒருவராகிய பழுவேட்டரையரின் மகள்.திருச்சி மாவட்டம் உடையார் குடி வட்டத்தில் உள்ள பழுவுரே பஞ்சவன் மாதேவியின் ஊராகும்.பழுவூர் கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் 27 ஆம் ஆண்டு கல்வெட்டில் இவரைப்பற்றி “அவனி கந்தர்ப்புரத்து பழுவூர் தேவனாரின்(பழுவேட்டரையரின்) திருமகள்” என்று கூறுகிறது. திருப்புகலூர் கல்வெட்டுகளில், பஞ்சவன் மாதேவியின் மற்றொரு பெயர் “நக்கன் தில்லையழகி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சவன் மாதேவி ராஜேந்திர சோழனைப் பெற்ற தாய் கிடையாது வளர்ப்புத்தாய்தான். இன்று சாதாரணமாகவே ஒரு நல்ல விஷயம் செய்யப் போனால் அதற்கு எதிர்மறையாக எத்தனையோ விஷயங்கள் பலர் பேசக் கூடும், சந்தேகிக்கப்படும். அதுபோலவே அந்த காலத்திலும் பஞ்சவன் மாதேவிக்கு எதிர்ப்புகள் நிறையவே வந்தது. ஒருவேளை பஞ்சவன் மாதேவிக்குக் குழந்தை பிறந்தால் ராஜேந்திரனை மாற்றத்தாயாகத்தான் நடத்துவார்கள் என்று அருகில் இருப்பவர்கள், அரசவையில் இருப்பவர்கள் எனப் பலரும் பலவிதமாகப் பேசினார்கள். இருப்பினும் என் மகன் என்று சொன்னால் அது ராஜேந்திர சோழன் மட்டும் தான் என்று உறுதியாகச் சொன்ன பஞ்சவன் மாதேவி, மூலிகை மருந்து சாப்பிட்டு தன்னை குழந்தைப்பேறு பெறாதபடி மலடியாக்கிக் கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் இறுதிவரை அத்தனை பாசம் கொண்டு ராஜேந்திர சோழனை, பல கலைகளையும் பயிற்றுவித்து வளர்த்தவர், பஞ்சவன் மாதேவி. ராஜேந்திர சோழனும் தன் தாய் மீது மிகுந்த அன்புடன் இருந்தார்.
ராஜராஜ சோழனுக்குப் பல மனைவிகள் இருந்தாலும் பஞ்சவன் மாதேவி மிகவும் புத்திக் கூர்மை உள்ளவர். அரசருக்கு உள்நாட்டுப் பிரச்சினைகளை ஆலோசனையைச் செய்வது போர்க்காலங்களில் நிர்வகித்துப் பல மன்னர்களுக்கு பல ஆலோசனைகள் வழங்குவது, பக்கபலமாக இருப்பது என்று முக்கிய பங்காற்றியிருக்கிறார் பஞ்சவன் மாதேவி. அதுமட்டுமல்லாமல் பஞ்சவன் மாதேவி அளித்த கொடைகள் கட்டிய கோவில்கள், புரிந்த சாதனைகள் என்று நிறைய இருக்கின்றன.
கும்பகோணம் அருகே பழையாறு எனும் ஊரிலிருந்து, திருமேற்றளி எனும் ஊருக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த பள்ளிப்படைக்கோவில். திருமேற்றளியில், உள்ளூர் மக்களிடம் “ராமசாமி கோவில்” எங்கே இருக்கிறது எனக் கேட்டால் சரியாகச் சொல்லிவிடுவார்கள். காலமாற்றத்தால் அவ்வாறே அழைக்கப்படுகிறது. பட்டீஸ்வரம்- திருவிடைமருதூர் சாலை வழியாகவும் செல்லலாம்.
பழையாறு என்று சொல்லக்கூடிய ஊருக்கு பஞ்சவன் மாதேவியின் பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது. கல்வெட்டுகளில் “பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அந்த பெயர் இருக்கிறது. பள்ளிப்படை கோவில் என்றால் இறந்தவர்களுடைய அஸ்தியை வைத்து அதன் மேல் லிங்கம் ஒன்றை நிறுவி, ஒரு கோவிலை கட்டுவது ஆகும். கும்பகோணம் அருகில் இருக்கும் பழையாறு, சோழன் மாளிகை என்று சொல்லப்படக்கூடிய பகுதிகளில்தான் இருக்கிறது. சோழ மன்னர்களின் மாளிகைகள் அதிகமாக இருந்தது காலப்போக்கில் அழிந்து சோழன் மாளிகை என்று இன்னமும் அதே பெயரில் ஒரு சிறிய ஊரும் இருக்கிறது.
ராஜேந்திர சோழன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தன்னுடைய கடைசிக் காலங்களில் ராஜராஜசோழன், பஞ்சவன்மாதேஸ்வரத்தில் தான் கழித்தார் என்பது வரலாறு. 1000 ஆண்டிற்கு மேற்பட்ட புகழ்வாய்ந்த சிறப்புமிக்க கோவில் எப்பொழுதாவது சிற்சில பூஜைகளும், அவ்வப்போது வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.
தாய்ப்பாசம் என்பது காலம்காலமாக மாறாத ஒன்று. எத்தனையோ பிள்ளைகள் இன்று பெற்றவர்களை கவனிக்காமல் விட்டுவிடுவதை படிக்கிறோம். கேள்விப்படுகிறோம். ஊரில் கிராமத்தில் அவர்கள் தனியே இருக்க, வாட்சப் கால், வீடியோ கால் போன்றவற்றின் மூலமே ஏதோ கொஞ்சம் உயிர்ப்புடன் இருக்கிறது தாய்ப்பாசங்கள். உடன் வைத்துக்கொள்ளப் பிள்ளைகளுக்கு நேரமோ வசதியோ இல்லை. சில பெற்றோர்களுக்குப் பிறந்த ஊர், சொந்தம், நிலபுலன்களை விட்டு வரவும் மனது இல்லை. எப்பொழுது திருமணம் என்றவுடன் தனிக்குடித்தனம் என்று வந்ததோ அப்பொழுதே இடைவெளி என்பதும், இலவச இணைப்பாக வந்துவிட்டது.
சீரியல்கள், சினிமாக்களில் அதிகம் மூழ்கிடும் பெற்றோர்கள் மட்டுமல்லாமல், நன்கு படித்தவர்களும் வசதி உள்ளவர்களும் கூட, தன் பிள்ளையை தன் கைக்குள்ளேயே வளர்த்து பாதுகாப்பதில் கவனமாக உள்ளனர். திருமணம் ஆனபிறகாவது அவர்கள் வாழ்க்கை, அவர்கள் வழி என விட்டு, ஆலோசனைகள் மட்டும் அளிக்கலாம். ஆனால் சில தாய்மார்கள், பேரப்பிள்ளைகள் பிறந்து, அதை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது வரை, பிரச்சனைகளை ஏற்படுத்தியும் ஏற்படுத்திக்கொடுத்தும் சிறப்பான சம்பவங்கள் பலவற்றை செய்து வருகின்றனர். அதற்கு பாசம், அன்பு, அவங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது போன்ற காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.
ராஜேந்திரனைப்போல ஒரு பல்கலை வித்தகனை வளர்க்க பஞ்சவன் மாதேவி எத்தனை சிரத்தை எடுத்திருக்க வேண்டும். அதனாலேயே கங்கை முதல் கடாரம் வரை போர் புரிந்து வெற்றி கொண்டான். அது ராஜேந்திரனின் சாமர்த்தியம். ஆனால் கற்றுக்கொடுத்து நகர்ந்தது என்னவோ பஞ்சவன் மாதேவிதான். அதேபோல, ஒவ்வொரு தாய்மார்களும் பிள்ளைகளுக்கு ஒரு தொழில், ஒரு கல்வி, ஒரு மொழி என்று மட்டும் நிறுத்திவிடாமல், என்ன என்ன திறமைகள் பிள்ளைகளுக்கு உள்ளது என கண்டறிந்து, அது அவர்களின் எதிர்காலத்திற்கு கை கொடுக்குமா? அவர்களுக்கு பிடித்திருக்கிறதா எனப் பார்த்து, அதை ஊக்குவித்து சிறப்பிக்க வேண்டும். அதுவே வளர்ந்த பின் பிள்ளைகளுக்கு கை கொடுக்கும். அதே போல வேறு சில மொழிகளும் நல்ல குணங்களும் கற்றுக்கொடுத்து தானும் அதுவாகவே வாழ்தல் சிறப்பானவையாகும்.
தியாகங்கள் மட்டுமே செய்து நிறைந்த தாய்மார்கள், சென்ற தலைமுறையோடு போகட்டும். தியாகங்கள் செய்தாலும் தனக்காகவும் வாழ்ந்து, மகிழ்வித்து மகிழ்ந்து வாழும் தாய்மார்கள் நிறைந்த உலகமாகட்டும். அன்னையை போற்றுதல் மட்டும் சிறப்பல்ல. சிறப்பான அன்னையாக வாழ்வதும் மிக சிறப்பே. அனைத்து அன்னைகளுக்கும், அன்னையைப்போல் அன்புகொண்டு அரவணைக்கும் அத்தனைப்பேருக்கும், மகிழ் நிறை அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu