மகன்களுடன் திருபாய் அம்பானி Twitter
பிசினஸ்

Jio அம்பானி கதை : முகேஷ், அனில் அம்பானி - களமிறக்கப்பட்ட காளையர்கள் | பகுதி 20

Gautham

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட திருபாய் அம்பானி, தனக்குப் பிறகு யார் ரிலையன்ஸ் குழுமத்தைக் கட்டுக்கோப்பாக நடத்துவார்கள் என்கிற கேள்விக்கும் விடை கொடுக்க, தன் மகன்களிடம் நிறுவன பொறுப்புகளைக் கொடுத்தார். முகேஷ் மற்றும் அனில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மகன்கள் இருவரும் தங்களை நிறுவனத்துக்குள் தலைவர்களாக நிரூபித்துக் கொள்ளக் கடவுளாகப் பார்த்துக் கொடுத்த சந்தர்ப்பமென, தந்தை கொடுத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர்.

அண்ணன் முகேஷ் அம்பானி நேரடியாக வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டார். வியாபாரத் திட்டங்கள் மற்றும் விரிவாக்கங்கள் முகேஷ் அம்பானியின் கோட்டையானது. ரிலையன்ஸ் நிறுவனங்களின் நிதித் துறை, விளம்பரப்படுத்தல், சந்தைப்படுத்துதல் போன்ற சமாச்சாரங்களைத் தம்பி அனில் மேற்கொண்டார்.

Ambani

திருபாய் அம்பானியின் வெற்றிடத்தால் ரிலையன்ஸ் சில பல அதிர்ச்சிகளை எதிர் கொண்டது உண்மைதான். ஆனால் வெகு விரைவில் சந்தைப் போருக்கு முகேஷ் & அனில் தலைமையில் தன்னை தயார் செய்து கொண்டது ரிலையன்ஸ் குழுமம்.

புதிய தளபதிகளின் தலைமையில் ரிலையன்ஸ் குழுமம் வியாபாரத்தில் வளர்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் திருபாய் அம்பானிக்கு சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல வெளிநாடுகளில் சிகிச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்தது.

மகன்கள் இருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சரியாகப் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிற செய்தி அவருக்கு மாமருந்தாக அமைந்தது. மெல்ல மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். ஆனால் அவர் அலுவலகம் திரும்பும் அளவுக்கு அவரது உடல் இயக்கங்கள் சீராகவில்லை. சில ஆண்டுகள் கழித்து 1989ஆம் ஆண்டில் தான் மீண்டும் ரிலையன்ஸ் அலுவலகத்துக்குத் திரும்பினார்.

1990களில் மிக முக்கிய ரசாயண உற்பத்தியாளர்களில் ஒன்றாக வளர்ந்திருந்தது ரிலையன்ஸ் குழுமம். 1980களின் தொடக்கத்திலேயே பாதால் கங்காவில் நிறுவிய ரசாயண ஆலை காரணமாக 1990களில் இந்தியாவின் மிக முக்கிய ரசாயண உற்பத்தியாளராக பரிணமித்து இருந்தது.

இதற்கிடையில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியின் ஸ்பான்சரானது ரிலையன்ஸ்.

திருபாய் உலக கோப்பை ஸ்பான்சராக இருந்த போது

அம்பானி குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒரு சிறிய ரத்த பாச உறவு இருக்கிறது. அது குறித்து ஏதேனும் படித்திருக்கிறீர்களா? திருபாய் அம்பானிக்கு முகேஷ், அனில் என இரு மகன்களைத் தவிர, தீப்தி, நீனா என இரு மகள்களும் உண்டு. அதில் நீனா அம்பானி ஷ்யாம் கோத்தாரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமரானார். மன்மோகன் சிங் நிதி அமைச்சரானார். அம்பானியின் பாச்சா இவர்களிடம் பலிக்கவில்லை. மேலும் இந்தியப் பொருளாதாரம் தனியார்மயம், உலகமயத்தின் வழியாக மற்றவர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. பல பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி வரிகள் அதிவேகமாகச் சரிந்தன. ஏகப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டன.

மேலும், ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் பாரபட்சமாக நடந்து கொண்டால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வராது என்கிற காரணத்தால், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறைந்தபட்ச கட்டுப்பாட்டோடு விதிகளின் படி நடக்க வேண்டிய சூழல் தன்னிச்சையாக எழுந்தது.

திருபாய் அம்பானி

அம்பானியால் தான் நினைத்ததை எல்லாம் நரசிம்ம ராவ் காலத்தில் அதிகம் சாதித்துக் கொள்ள முடியவில்லை என ஒரு பொதுக் கருத்து நிலவியது. மெல்ல அம்பானி உலக அரங்கில் நின்று விளையாடும் அளவுக்கு, தன் ரிலையன்ஸ் நிறுவனத்தை மாற்றி அமைக்கத் தொடங்கினார். ஏற்கனவே அவரிடம் இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளிக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் ஆலைகள் இருந்தன.

Indian petrochemical limited என்கிற அரசு நிறுவனம், இந்திய தொழில் துறைக்குத் தேவையான கச்சா எண்ணெய் சார்ந்த ரசாயன பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. இந்தியன் பெட்ரோகெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தியால், சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. வழக்கம்போல அமெரிக்க டாலரை கொட்டி இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஐ.பி.சி.எல் நிறுவனத்தைத் தவிர, மற்ற சில நிறுவனங்களுக்கும் இத்துறையில் அனுமதி கொடுக்க விரும்பியது இந்திய அரசு.

1991ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஹசிரா என்கிற பொட்டல் காட்டில் ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல் என்கிற தனி நிறுவனத்தை நிறுவியது ரிலையன்ஸ் குழுமம். ஹசிரா பகுதியில் அரசு செய்து தருவதாக சொன்ன உதவிகள் வழக்கம் போல் சொதப்பலானது. எனவே ரிலையன்ஸ் குழுமம் அரசை எதிர்பார்க்காமல் தங்களுக்கு தேவையான தண்ணீர், போக்குவரத்து... போன்ற வசதிகளைத் தாங்களே செய்து கொண்டார்கள்.

இந்த ஆலையை நிறுவும்போதே, பாதால் கங்கா ஆலைக்கு தேவையான பெட்ரோகெமிக்கல் ரசாயனங்கள் அனைத்தும் ஹசிராவிலேயே தயாரிக்கப்பட வேண்டும். மீதம் இருப்பதை மற்ற பிளாஸ்டிக் மற்றும் ஜவுளித்துறை வாடிக்கையாளர்களுக்கு விற்று லாபம் பார்க்க தீர்மானித்தது ரிலையன்ஸ்.

பாலி வினைல் குளோரைட், பாலியஸ்டர் டெராப்தலேட், பாலிப்ரோப்பலின், மோனோ எத்திலின் க்ளைகால்... என பல பாலியஸ்டர் ஆடை உற்பத்திக்குத் தேவையான பல வேதிப்பொருட்கள் ஹசீராவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

1993ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்ஹையில் வெளியிடப்பட்டு சக்கை போடு போட்டது. இதே ஆண்டில் தான் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் செய்திருந்தது ரிலையன்ஸ். 1995ஆம் ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் பார்த்த நிறுவனமாகவும் ரிலையன்ஸ் மிளிர்ந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?